தான் பெற்ற பிள்ளைக்கு வயிறார உணவளித்து, உறங்க வைத்து, உறங்கி எழுந்த பின்னர் நீராட்டி, உடை மாற்றி, தலை சீவி, சிங்காரித்து, அழகு பார்த்து, அப்பிள்ளை தன் கண் முன்னே பெரியவனாக வளர்வதைக் கண்டு மகிழ்வதே ஒரு தாய்க்குக் கிட்டும் பெரும் பேறு. பிறந்த சிறிது காலத்திற்கு அப்பிள்ளை தாய்பால் ஒன்றையே உண்ணும், சில நாட்கள் கழித்து தாய்ப்பாலுடன் இடையிடையே சங்கினால் பசும் பாலையும் அப்பிள்ளைக்குப் புகட்டி வளர்ப்பது வழக்கம்.
பசி வந்ததும் அப்பிள்ளை தாயின் முகம் நோக்கி ங்கு..ங்கு.. என்று சொல்லும் மழலையைக் கேட்பது பேரின்பம். தாய்ப்பாலைத் தவிர சங்கிலே பால் கொடுத்தால் குடிக்க மறுத்து அடம் பிடிக்கும் பிள்ளைகளும் உண்டு. அத்தகைய பிள்ளைக்குப் பல விதமான வேடிக்கைகள் காட்டி, கொஞ்சு மொழி பேசி, அதன் மனதை மாற்றி சங்கிலே பாலுண்ண வைப்பது ஒரு தாயின் தனித் திறமையாகும்.
இங்கு ஒரு தாய் அவ்வாறு தன் பிள்ளையைப் பாலருந்தச் செய்யப் பாடுகிறாள் ஒரு கொஞ்சு தமிழ்ப் பாட்டு.
இங்கு உண்ணடா செல்வமே
படம்: கார்த்திகை தீபம்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: ஆர். சுதர்சனன்
எல்.ஆர். ஈஸ்வரி
இங்கு இங்கு இங்கு உண்ணடா செல்வமே
இங்கு உண்ணடா செல்வமே
சங்கிலே உன் பங்கு ஊறுது
இங்கு உண்ணடா செல்வமே
சங்கிலே உன் பங்கு ஊறுது
இங்கு உண்ணடா செல்வமே
தங்க வீணையே தமிழின் ஓசையே
தவழும் பொதிகையின் தென்றலே
தாயின் மனநிலை தெரிந்த பின்னும்
தாமதம் செய்யாதே கண்ணே
இங்கு இங்கு உண்ணடா செல்வமே
சங்கிலே உன் பங்கு ஊறுது
இங்கு உண்ணடா செல்வமே
செங்கரும்பின் வாய் திறந்து
சிதறும் மழலை தேன் சுரந்து
அங்கத் தாமரை வாடுமுன்னே
அமுதம் உண்ணடா என்தன் கண்ணே
இங்கு இங்கு உண்ணடா செல்வமே
சங்கிலே உன் பங்கு ஊறுது
இங்கு உண்ணடா செல்வமே
வெண்ணிலாவை பாடச் சொல்வேன்
வீசும் தென்றலை ஆடச் செய்வேன்
கண்ணே முன்னவர் வீரம் வளர்த்த
கதைகள் யாவையும் உனக்குச் சொல்வேன்
இங்கு இங்கு உண்ணடா செல்வமே
சங்கிலே உன் பங்கு ஊறுது
இங்கு உண்ணடா செல்வமே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக