சனி, 28 நவம்பர், 2009

தென்றல் உறங்கிடக் கூடுமடி என்தன் சிந்தை உறங்காது

ஒரு பெண் குழந்தையாய் இருக்கையில் அனைவரோடும் மிகவும் பிரியத்துடன் நெருக்கமாகப் பழகுகிறாள். ஆண் பெண் வெறுபாடு பார்ப்பதில்லை. அதே பெண் பருவமடைந்து விட்டால் எங்கிருந்தோ நாணம் வந்து அவளுக்குள் குடி புகுந்து கொள்வதால் அவள் பிறருடன் பழகுவதில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. ஆண்களுடன் பேசிப் பழக நாணுகிறாள். தன் கண்ணையும் கருத்தையும் கவர்ந்த ஒரு ஆடவன் மேல் காதல் ஏற்பட்டாலோ அவளது நாணம் பன்மடங்காகப் பெருகி, அவளது உள்ளத்தில் ஆசை அலைகள் கரைபுரண்டு எழுந்தாலும் அவற்றை வெளிக்காட்டிக்கொள்ள இயலாத சூழ்நிலையை ஏற்படுத்துவதால் தன் உள்ளத்தில் எழும் எண்ணங்களைப் பிறரிடம் மட்டுமின்றித் தன் காதலனிடமும் வெளிப்படுத்த வழியின்றித் தவிக்கிறாள்.

அவ்வாறு காதல் உணர்வுகளாலும் நாணத்தாலும் அலைமோதும் மனத்தினளாய் அவதியுறும் பெண்ணொருத்திக்கு அவளது காதலன் அவளது தவிப்பைப் போக்க சொல்லும் ஆலோசனைகள் என்ன?


தென்றல் உறங்கிடக் கூடுமடி என்தன் சிந்தை உறங்காது


திரைப்படம்: சங்கிலித் தேவன்
இயற்றியவர்: கவியரசு கண்ணதாசன்
இசை: டி.ஜி. லிங்கப்பா
பாடியோர்: பி. லீலா, டி.எம் சௌந்தரராஜன்
ஆண்டு: 1960

தென்றல் உறங்கிடக் கூடுமடி என்தன் சிந்தை உறங்காது - புவி
எங்கும் உறங்கிடக் கூடுமடி என்தன் கண்கள் உறங்காது - புவி
எங்கும் உறங்கிடக் கூடுமடி என்தன் கண்கள் உறங்காது
தென்றல் உறங்கிடக் கூடுமடி என் சிந்தை உறங்காது

நீலக் கடலலை ஓடி வருவதில் நெஞ்சம் பறிகொடுப்பேன்
நீலக் கடலலை ஓடி வருவதில் நெஞ்சம் பறிகொடுப்பேன் - இன்று
கோடி அலைகள் என் நெஞ்சில் எழுவதை யாரிடம் போய் உரைப்பேன் - இன்று
கோடி அலைகள் என் நெஞ்சில் எழுவதை யாரிடம் போய் உரைப்பேன் - இனி

தென்றல் உறங்கிடக் கூடுமடி என்தன் சிந்தை உறங்காது

துள்ளித் திரிந்தாள் சுற்றிப் பறந்தாள் பிள்ளைப் பருவத்திலே ஏஏ..ஏஏ..ஏஏ..ஏஏ..
துள்ளித் திரிந்தாள் சுற்றிப் பறந்தாள் பிள்ளைப் பருவத்திலே - நாண
வெள்ளத்திலே இவள் உள்ளம் மிதப்பது கன்னிப் பருவத்திலே - நாண
வெள்ளத்திலே இவள் உள்ளம் மிதப்பது கன்னிப் பருவத்திலே
கன்னிப் பருவத்திலே

கண்களில் ஏறிப் பெண்மையில் ஓடிய காதலை விட்டுவிடு
கண்களில் ஏறிப் பெண்மையில் ஓடிய காதலை விட்டுவிடு
நங்கைப் பருவம் வேதனை தந்தால் - இள
நங்கைப் பருவம் வேதனை தந்தால் நாணத்தை விட்டுவிடு - நெஞ்சே
நாணத்தை விட்டுவிடு

உற்றவர் கண்ணும் பெற்றவர் கண்ணும் உண்மை அறிவதில்லை
உற்றவர் கண்ணும் பெற்றவர் கண்ணும் உண்மை அறிவதில்லை - இதைக்
கற்றவர் அல்லால் மற்றவார் யாரும் காரணம் சொன்னதில்லை - இதைக்
கற்றவர் அல்லால் மற்றவார் யாரும் காரணம் சொன்னதில்லை

தென்றல் உறங்கிடும் நேரத்திலும் நம் சிந்தை உறங்காது - புவி
எங்கும் உறங்கிடும் காலத்திலும் நம் கண்கள் உறங்காது - புவி
எங்கும் உறங்கிடும் காலத்திலும் நம் கண்கள் உறங்காது
தென்றல் உறங்கிடும் நேரத்திலும் நம் சிந்தை உறங்காது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக