மஹாபாரதக் கதையில் பஞ்ச பாண்டவர்களான தருமன், பீமன், அருச்சுனன், நகுலன், சஹாதேவன் எனும் ஐந்து சகோதர்களும் அவர்களது பெரியப்பாவின் மகனான துர்யோதனின் கூட்டாளியான சகுனியுடன் சூதாடியதன் விளைவாக 12 வருடங்கள் வனவாசம் செய்ய நேரிட்டது. அவ்வனவாசம் முடியும் தருவாயில் பாண்டவர்கள் தங்கியிருந்த குடிலி்ன் அருகாமையில் வசித்து வந்த ஒரு அந்தணனுடைய அரணிக்கட்டையின் மேல் மான் ஒன்று உடலை உராய்ந்து விட்டுத் திரும்பிச் செல்கையில் அவ்வரணிக்கட்டை அதன் கொம்புகளில் சிக்கிக்கொண்டதால் மான் மிரண்டு ஓடியது. அரணிக் கட்டை என்பது நெருப்பை உண்டாக்குவதற்கு உதவும் கடைக்கோலும் கீழ்க்கட்டையும் கொண்டதொரு இயந்திரம்.
அவ்வந்தணன் தனது அரணிக்கட்டையை மீட்டுத் தருமாறு பாண்டவர்களிடம் முறையிட, அவர்கள் மானைத் துரத்திக் கொண்டே வனத்துக்குள் நீண்ட தூரம் சென்றபோதிலும் மான் அகப்படவில்லை. ஓடிய களைப்பு நீங்க ஒரு மரத்தின் அடியில் சற்றே இளைப்பாறுகையில் அவர்களுக்கு மிகவும் தாகம் எடுக்கவே தருமன் சொற்படி அருகில் இருக்கும் பொய்கையில் நீர் எடுத்து வர ஒவ்வொருவராகச் சென்ற தம்பியர் யாரும் திரும்பாமையால் தருமபுத்திரன் தானே பொய்கையை அடைந்தான். அங்கே அவனது தம்பிமார் ஐவரும் மயங்கி வீழ்ந்து கிடப்பதைக் கண்டு துணுக்குற்றாலும் தாக மிகுதியால் பொய்கையில் கை வைத்ததும் அசரீரி ஒலித்த்து, "யுதிஷ்டிரனே, நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் தந்த பிறகே நீ நீரருந்தலாம் மீறினால் உன் தம்பியர் போல நீயும் மடிவாய்" என.
தருமனும் அசரீரியின் கேள்விகளுக்கு பதில் தந்தான். அவற்றுள் ஒரு கேள்வி, "உலகில் அதிசயமானது எது?" என்பதாகும். தருமன் தந்த பதிலாவது, "தினமும் தமது கண் முன்பாகவே தம்மைச் சார்ந்தவரும் பிறரும் ஒருவர் பின் ஒருவராக யமன் வாயிலுக்குச் செல்வது கண்ட பிறகும் மனிதர்கள் தாம் மட்டும் நிரந்தரமாக இவ்வுலகில் வாழ்வோம் என நினைக்கிறார்களே, அதுவே உலகில் அதிசயமானது" என்பதாகும்.
மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று
திரைப்படம்: அவன் தான் மனிதன்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
ஆண்டு: 1975
மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று
இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று
மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று
மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று
இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று
இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று
மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று
தந்தை தவறு செய்தார் தாயும் இடம் கொடுத்தாள்
தந்தை தவறு செய்தார் தாயும் இடம் கொடுத்தாள்
வந்து பிறந்து விட்டோம் வெறும் பந்தம் வளர்த்து விட்டோம்
மனது துடிக்கின்றது மயக்கம் வருகின்றது
அழுது லாபம் என்ன அவன் ஆட்சி நடக்கின்றது
மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று
காட்டு மனமிருந்தால் கவலை வளர்ந்து விடும்
காட்டு மனமிருந்தால் கவலை வளர்ந்து விடும்
கூட்டைத் திறந்து விட்டால் அந்தக் குருவி பறந்து விடும்
காலில் விலங்கு விட்டோம் கடமை என அழைத்தோம்
நாலு விலங்குகளில் தினம் நாட்டியம் ஆடுகின்றோம்
மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று
விதியின் ரதங்களிலே நாம் விரைந்து பயணம் செய்தால்
மதியும் மயங்குதடா சிறு மனமும் கலங்குதடா
கொடுக்க எதுவுமில்லை என் குழப்பம் முடிந்ததடா
கணக்கை முடித்து விட்டேன் ஒரு கவலை முடிந்ததடா
மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று
இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக