ஆண்டாண்டு காலமாக நம்மை அடிமைகளாக ஆட்டிப் படைத்த ஆங்கிலேயர்கள் அனைவரையும் நாட்டை விட்டு விரட்டி சுதந்திர இந்தியாவை மஹாத்மா காந்தி உள்ளிட்ட நம் முன்னனோர்களான பல தன்னிகரில்லாத் தலைவர்கள் உருவாக்கிய பின்னர் சில காலம் நாடு சுபிட்சமடையும் முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருந்தது.
மனிதர்களுக்கு சுதந்திரம் பெற்றுத் தந்த இத்தலைவர்கள் மரங்களுக்கும் சுதந்திரம் பெற்றுத் தந்தனர். எவ்வாறு என்று கலைவாணர் இத்தெருக்கூத்தில் விளக்குகிறார்.
அவ்வாறு அரும்பாடு பட்டு அவர்கள் பெற்றுத் தந்த சுதந்திரம் இன்று இருக்கிறதா என்பது கேள்விக்குறியே. இத்தெருக்கூத்தில் கலைவாணர் குழுவினர் எடுத்துரைப்பவற்றை இன்றைய நாட்டு நிலைமையுடன் ஒப்பிட்டுப் பார்க்க உண்மை விளங்கும்.
நாட்டுக்கு சேவை செய்ய நாகரிகக் கோமாளி வந்தானையா
படம்: நல்ல தம்பி
இயற்றியவர்: என்.எஸ். கிருஷ்ணன்
பாடியவர்: என்.எஸ். கிருஷ்ணன், டி.ஏ. மதுரம்
ஆண்டு: 1949
நாட்டுக்கு சேவை செய்ய நாகரிகக் கோமாளி வந்தானையா
நாட்டுக்கு சேவை செய்ய நாகரிகக் கோமாளி வந்தானையா
ஆட்டமாடி பாட்டுப் பாடி அழகான ஜதையோடு வந்தானையா
ஆட்டமாடி பாட்டுப் பாடி நல்ல அழகான ஜதையோடு வந்தானையா
சிரிக்க வைத்து நாட்டை செழிக்க வைக்கும் சீர்திருத்தக் கோமாளி வந்தானையா
சிரிக்க வைத்து நாட்டை செழிக்க வைக்கும் சீர்திருத்தக் கோமாளி வந்தானையா
மோட்டாவை விட்டிறங்கி வந்தானையா
முன்குடுமி திருத்தி கிட்டு வந்தானையா
ராட்டினம் போல் சுழன்று வந்தானையா நம்ம
ராஜ்ஜியத்தை சுத்திப் பாத்து வந்தானையா
தச்சோம் திரிச்சோம் ஜரிகை செம்பட்டு வெம்பட்டு கிளிஞ்சது போ
ஹங், ஐயா கோமாளியாரே
என்ன ஏமாளியாரே
உங்கள ஒண்ணு கேக்கறேன் பதில் சொல்லுங்க.
ஒண்ணென்ன ஒம்பது கேளும் பதில் சொல்றேன்.
அந்தக் காலத்துலே...
நிறுத்தும், அந்தக் கால சங்கதி நமக்கு வேண்டாம், இந்தக் காலத்தைப் பத்திக் கேளும்.
சரி, இந்தக் காலத்துல தான் எங்க பாத்தாலும் பொய்யும் பொரட்டும்,
நிறுத்தும், பொய்யு்ம் பொரட்டும் நீங்க சொன்ன அந்தக் காலத்தில. இந்தக் காலம் நீதியான காலமையா நேர்மையான காலம். இன்னுஞ் சொல்றேன் கேளும்.
அன்னியர்கள் நமையாண்டதந்தக் காலம்
நம்மை நாமே ஆண்டு கொள்வதிந்தக் காலம்
பேசுதற்கும் உரிமையற்ற தந்தக் காலம்
பிரச்சாரப் பெருமையுற்ற திந்தக் காலம்
மனுசனை மனுசன் ஏச்சுப் பொழைச்சது அந்தக் காலம்
அது அந்தக் காலம்
மடமை நீங்கி நமதுடைமை கோருவது இந்தக் காலம்
நெனெச்சதை எல்லாம் எழுதி வைத்தது அந்தக் காலம்
அது அந்தக் காலம் எதையும்
நேரில் கண்டே நிச்சயிப்பது இந்தக் காலம்
மழை வருமென்றே மந்திரம் ஜெபிச்ச தந்தக் காலம்
அது அந்தக் காலம் மழையைப்
பொழிய வைக்கவே யந்திரம் வந்தது இந்தக் காலம்
இழிகுலமென்றே இனத்தை வெறுத்ததந்தக் காலம்
அது அந்தக் காலம் மக்களை
இணைத்து அணைக்க முயற்சி பண்ணுவதிந்தக் காலம்
த்ரோபதை தனை துகிலை உரிஞ்சான் அந்தக் காலம்
அது அந்தக் காலம் பெண்ணைத்
தொட்டுப் புட்டா சுட்டுப் புடுவான் இந்தக் காலம் பெண்ணைத்
தொட்டுப் புட்டா சுட்டுப் புடுவான் இந்தக் காலம்
சாத்திரம் படிப்பது அந்தக் காலம் சரித்திரம் படிப்பது இந்தக் காலம்
கோத்திரம் பாப்பது? அந்தக் காலம் குணத்தைப் பாப்பது? இந்தக் காலம்
பக்தி முக்கியம் அந்தக் காலம் படிப்பு முக்கியம்
கத்தி தீட்டுவது? அந்தக் காலம் புத்தி தீட்டுவது? இந்தக் காலம்
பெண்ணைப் பேயெனப் பேசி அணைச்சான் அந்தக் காலம்
அது அந்தக் காலம் - வாழ்வின்
கண்ணில் ஒன்றாய் எண்ணி நடப்பது இந்தக் காலம் வாழ்வின்
கண்ணில் ஒன்றாய் எண்ணி நடப்பது இந்தக் காலம்
பலே பலே, ஐயா கெட்டிக்காரக் கோமாளியாரே, இன்னைக்கு நடக்கப் போகும் இந்திரசபா எனும் கூத்திலே ஆசீர்வாதம் தாங்கும்படியா உம்மைக் கேட்டுக்கொள்கிறேன்.
நமஸ்காரம்
ஆசீர்வாதம்
ஆசி எனக்கு, வாதம் உமக்கு.
ராஜ ராஜ மஹாராஜதா பைரவின்னு இங்கே வந்தேனே ஏ..ஏ..ஏ..ஏ...ஏ..
தேவ தேவ சரச சரச தீனநாதரேந்திர
ஆவலாலே ஆயிரங்கண் அணிந்த ரூப சுந்தர
ஆலாதி அமுதமுண்டோ ஐராதி தன்னைக் கொண்டோ?
தேவ தேவ சரச சரச தீனநாதரேந்திர
ஐயா, கேளுமையா இந்திர பூபதியே, நாரதர் சபையை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்.
சந்தோஷம், நாரதரே நமஸ்கரிக்கிறேன்.
கல்யாண், கல்யாண்.
தாங்கள் இந்த சபைக்கு வருவதற்கு ஏன் இவ்வளவு தாமதம்?
ஆஹா, அதை என்னவென்று சொல்லுவேன்? பூலோகத்தில் நடக்கும் புதுமைகளைக் கண்டு என் மனம் புளகாங்கிதமடைந்தது.
அப்படி என்ன புதுமை கண்டீர்?
அதை சபையில் பவிஸ்தாரமாகச் சொல்லுவதற்கு பூலோகத்திலிருந்து ஒரு நரன், ஒரு நரை இருவரை அழைத்துக் கொண்டு வந்திருக்கிறேன். இதோ பாருங்கள்.
ஏ கோமாளி மச்சான்
என்ன?
இது எந்த இடங்கறேன்?
இது அந்திரத்திலே இருக்கும் இந்திரலோகம், பளா பளா
ஆத்தாடி, இந்த மனுஷன் என்னாங்கறேன் இப்படி இருக்காரு?
மனுசன் இல்லேடியம்மா, இவங்க எல்லாம் தேவரு, அவரு தேவருக்கு அரசரு, இந்திரன்.
ஓஹோ, பொட்டி மகன் இந்திரரு இவுரு தானா? அகலிகை மேல ஆசைப்பட்டு, ஒடம்பெல்லாம்..
சட், யார் நீங்கள்?
பட், மனுஷன்
எந்த ஊர்?
தருமம் தழைத்தோங்கும் தமிழ் நாடு, பளா பளா.
எங்கள் நாட்டை விடப் பெரிதா? மளா மளா.
பெரிதல்ல, பெருமை வாய்ந்தது.
எந்த வகையில்?
சொல்றேன் கேளுங்கோ.
கலை முதலாக தொழில் முறை யாவும் காத்து வளர்ப்பது தமிழ்நாடு
கலை முதலாக தொழில் முறை யாவும் காத்து வளர்ப்பது தமிழ்நாடு
முதல் முதலாக நல்லவை யாவும்
முதல் முதலாக நல்லவை யாவும் முயன்று முடிப்பது தமிழ்நாடு
கலை முதலாக தொழில் முறை யாவும் காத்து வளர்ப்பது தமிழ்நாடு
பாட்டால் உணர்த்தி ஊட்டும் கவி பாரதி சேர் தமிழ்நாடு
நாட்டு மக்கள் முன்னேற்றம் தனை நாடியே கவிதை பாடிவைத்த தமிழ்
கலை முதலாக தொழில் முறை யாவும் காத்து வளர்ப்பது தமிழ்நாடு
உலகம் வியக்க சுதேச கப்பல் ஓட்டியதும் தமிழ் நாடு
திலகமெனப் புகழ் ஓங்கும் எங்கள் சிதம்பரம் பிள்ளை செயல்புரிந்த தமிழ்
கலை முதலாக தொழில் முறை யாவும் காத்து வளர்ப்பது தமிழ்நாடு
உலகில் முதலில் கள்ளை ஒழித்ததும் எம் தமிழ்நாடு
உத்தமர் காந்தியின் சொல்லை நன்றாய் உணர்ந்து நடப்பதில் எமக்கீடில்லை
கலை முதலாக தொழில் முறை யாவும் காத்து வளர்ப்பது தமிழ்நாடு
கள்ளை ஒழித்து கண்ணியம் பெற்றது எங்கள் நாடு.
பூலோகத்தில், மதுவை ஒழித்து விட்டார்களா? ஆச்சர்யம் ஆச்சர்யம், நரனே, முன்னொரு சமயம் அமெரிக்கா என்னும் நாட்டில் இந்த மதுவிலக்கு செய்து ஃபெய்லியர் ஆகிவிடவில்லையா?
ஃபெய்லியர், அப்படி என்றால்?
தோல்வி.
தோல்வி, எங்கள் நாடிலே அப்படி நடக்காது. ஏனென்றால் குடிப்பது பாபம் என்று நினைக்கும் நாடு. குடித்தேன் என்று சொல்ல வெட்கப் படும் நாடு. ஆகையினாலே நாங்கள் வெற்றி பெறுவது நிச்சயம், நிச்சயம், நிச்சயம்.
இதை நான் நம்ப முடியாது, பெண்ணே, உண்மையில் உங்கள் நாட்டில் மதுவை ஒழித்து விட்டார்களா? சொல்.
குடிகெடுத்த குடி ஒழிஞ்சது அடி தடி சண்டை அது கொறைஞ்சது
ஆணும் பெண்ணும் புத்தியறிஞ்சது எங்க நாட்டிலே அக்டோபர் ரெண்டுக்கு மேலே
குடிகெடுத்த குடி ஒழிஞ்சது அடி தடி சண்டை அது கொறைஞ்சது
ஆணும் பெண்ணும் புத்தியறிஞ்சது எங்க நாட்டிலே அக்டோபர் ரெண்டுக்கு மேலே
தாலிக் கயிறு தனியா இருக்கும் தங்கமிருக்காது அதிலே தங்கமிருக்காது
தண்ணி குடிக்க தகரக் கொவள செம்புமிருக்காது வீட்டிலே செம்புமிருக்காது
பாலு வாங்க குழந்த பசிக்குப் பணமிருக்காது கையிலே பணமிருக்காது
பாழுங்கள்ளக் குடிப்பது மட்டும் நாளுந்தப்பாது எந்த நாளுந்தப்பாது
கூலிக் காசில் சோளம் வாங்கிக் கூழுக் காச்ச வச்சிருப்பா
ஆளதந்தா அம்பள தான் அதையும் வித்துக் குடிப்பான்
கடைக்குப் போவான் கள்ளக் குடிப்பான் காரியமில்லாம சண்டைக்குப் போவான்
வடைய ரண்டை வாங்கிக்குவான் வழி நெடுக பேசிக்குவான்
வந்து கதவைத் தட்டுவான் வாயிலே வந்ததைத் திட்டுவான்
வாழ்வின் சுகத்தை விரும்பும் பெண்ணை வஞ்சகக் காரி என்றுரைப்பான் அவன்
வாரிசுக்காக சிசுவைத் தாங்கும் வயித்திலெ எட்டி மிதிப்பான்
அப்பப்பா, இந்தக் கள்ளுக் குடிய நம்ம
நாட்ட விட்டு ஒழிச்ச அந்த நல்ல மனுஷன் காலுக்கு
கோடி கோடி கோடி கோடி கோடி கோடி கும்பிடு.
(கை தட்டல்)
பெண்ணே, மது ஒழிந்தது பெண்களுக்குத் தான் மிகவும் நன்மை என்று உன்னால் தெரிந்து கொண்டேன்.
ம்ம்ம்ம் ஆண்களுக்கும் நல்லது தான்.
அது எப்படி?
மது ஒழிவதற்கு முன்னாலே நான் பாதி வேளை மிருகமாகத் தானே இருந்தேன்.
மனுஷனாகிப் போனேன் இப்ப நான் மனுஷனாகிப் போனேன்
மனுஷனாகிப் போனேன் இப்ப நான் மனுஷனாகிப் போனேன்
பனமரப் பாலு பட்டை பிராந்தி பக்கம் வந்தால் எடுக்குறேன் வாந்தி
மனுஷனாகிப் போனேன் இப்ப நான் மனுஷனாகிப் போனேன்
இரண்டாம் தேதி வருவதற்கு முன்னே அக்டோபர் மாதம்
இரண்டாம் தேதி வருவதற்கு முன்னே என் கண்ணுக்குன்னை
இரண்டாளாகத் தெரிஞ்சது பெண்ணே என் கண்ணுக்குன்னே
இரண்டாளாகத் தெரிஞ்சது பெண்ணே
சுருண்டு சுருண்டுதான் சும்மாப் படுப்பேன்
சுதிய விட்டுக் கூடப் பாட்டுகள் படிப்பேன்
வரண்ட காரவடை வாத்து முட்டை கரு
வாட்டைத் தின்ன வாய் நாத்தம் நீங்கி நான்
மனுஷனாகிப் போனேன் இப்ப நான் மனுஷனாகிப் போனேன்
மது, அருந்திய உடனே ஞாபகம் வருவது மாது. நாரதரே, நான் கூட அகலிகை வீட்டுக்குச் சென்று சில தவறுகள் செய்ததற்குக் காரணமாக இருந்தது இந்த மது தான். நரனே இதற்கு என்ன செய்வது?
குடிச்சுப் பழகனும் குடிச்சுப் பழகனும்
படிச்சுப் படிச்சு சொல்லுறாங்கோ குடிச்சுப் பழகனும்
படிச்சுப் படிச்சு சொல்லுறாங்கோ குடிச்சுப் பழகனும்
ஐயையோ! என்னாங்க இது? குடிச்சுப் பழகணும்னு சொல்றீங்களே?
ஆமாம் பழகணும், இல்லாமப் போன மறக்க முடியாது. அதாவது, இந்தக் குடியை ஒழிச்சாங்களே, அவங்க மனசு சந்தோஷப் படணும்னா, எல்லோரும் ஒத்துமையா
குடிச்சுப் பழகனும் குடிச்சுப் பழகனும்
படிச்சுப் படிச்சு சொல்லுறாங்க பாழுங்கள்ளை நீக்கிப் பாலைக்
குடிச்சுப் பழகனும்
படிச்சுப் படிச்சு சொல்லுறாங்க பாழுங்கள்ளை நீக்கிப் பாலைக்
குடிச்சுப் பழகனும் பாலைக் குடிச்சுப் பழகனும்
பாலு வாங்கப் பணமில்லேன்னா டீயைக் குடிச்சுக்கோ
டீயும் கெடுதலுன்னு தெரிஞ்சா மோரைக் குடிச்சுக்கோ
மோரு நமக்குக் கெடைக்கல்லே
நீராகாரம் இருக்கவே இருக்கு குடிச்சுப் பழகணும் குடிச்சுப் பழகணும்
காலையில் பல் தேய்த்த உடன் கண்டிப்பாக நீராகாரம் குடிச்சுப் பழகணும்
காலையில் பல் தேய்த்த உடன் கண்டிப்பாக நீராகாரம் குடிச்சுப் பழகணும்
வாஸ்தவம் தான், ஒழித்து விட வேண்டிய விஷயம் தான். நாரதரே, இன்று முதல் நம் தேவலோகத்தில் யாரும் மது அருந்தக் கூடாதென்று சொல்லும், மீறி அருந்துவார்களேயானால், அவர்களை நரகக் குழியில் கொண்டு போய்த் தள்ளிவிடும் படி நான் கட்டளையிட்டதாகச் சொல்லும். நரனே, நீ கொஞ்ச காலம் இங்கே தங்கியிருந்து, சொர்க்கலோகத்திற்கும், நரகலோகத்துக்கும் சென்று இந்த மதுவிலக்குப் பிரச்சாரம் செய்வாயாக.
ஐயையோ, என் மச்சான் உன்னை நரகலோகத்துக்குப் போகச் சொல்றாரே இவரு.
ஹஹஹஹ, பிரச்சாரத்துக்கு எங்கே போனா தான் என்ன, பெண்ணே, நீ சொர்க்க லோகத்துக்குப் போ, ஏன்னா அங்கே கொஞ்ச ஆளுக தான் இருக்கும், நரகத்துல ரொம்பப் பேர் இருப்பாங்க, நான் அங்கே போய் பிரச்சாரம் பண்ணிட்டு வரேன்.
மதுவை ஒழிப்போம் மதியை வளர்ப்போம் மதுவை ஒழிப்போம் மதியை வளர்ப்போம்.
விடுதலை விடுதலை விடுதலை விடுதலை விடுதலை விடுதலை
உடலை வாட்டும் நோய்களுக்கும் தலைவலிக்கும் இன்று முதல்
விடுதலை விடுதலை விடுதலை
பகலும் இரவும் பொங்கிக் கிடந்த பல்லாக்களுக்கும் விடுதலை
பகலும் இரவும் பொங்கிக் கிடந்த பல்லாக்களுக்கும் விடுதலை
பயந்து பயந்து ஏறி இரங்கும் பாட்டாளிக்கும் விடுதலை
பயந்து பயந்து ஏறி இரங்கும் பாட்டாளிக்கும் விடுதலை
ஜெகத்தை வெறுக்கச் செய்யும் கஞ்சா சிறுமிகளுக்கும் விடுதலை
ஜெகத்தை வெறுக்கச் செய்யும் கஞ்சா சிறுமிகளுக்கும் விடுதலை
முகத்தை மூடும் துணிக்கும் கள்ளு மொந்தைகளுக்கும் விடுதலை
முகத்தை மூடும் துணிக்கும் கள்ளு மொந்தைகளுக்கும் விடுதலை
பனை மரத்துக்கும் விடுதலை பனை மரத்துக்கும் விடுதலை,
தென்னை மரத்துக்கும் விடுதலை தென்னை மரத்துக்கும் விடுதலை
பனை மரத்துக்கும் தென்னை மரத்துக்கும் ஈச்ச மரத்துக்கும் விடுதலை
விடுதலை விடுதலை விடுதலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக