சனி, 28 நவம்பர், 2009

பணம் பந்தியிலே குணம் குப்பையிலே

ஒருவன் எவ்வளவு அறிவாளியாக இருந்தாலும் அவனிடம் வாழ்வை வளமாக வாழத் தேவையான அளவு பணம் இல்லை எனில் அவன் சமுதாயத்தில் உரிய மதிப்பைப் பெறுவதில்லை.
"செல்வாக்கு இல்லையென்றால் சொல்வாக்குக்கு மதிப்பேது? பணமில்லாதவன் பிணம், பொருளில்லார்க்கிவ்வுலகமில்லை, பொருள் படைத்தவனிடம் சென்று அவனைப் பாடி, புகழ்ந்து, பரிசு பெற்றால் தான் கல்வி கற்றவன் வறுமையின்றி வாழ முடியும்."

"செல்வம் தானே உலகில் சிறந்தது, அதற்கு நிகரேது? கல்வியின் அறிவே இல்லாத ஒருவன் செல்வச் சிறப்போடு சீமானாக வாழ்வானாகில் படித்த புலவன் அவனிடம் சென்று பாடி, புகழ்ந்து பரிசுகள் பெறுவதை இன்று உலகில் காண்கின்றோமே, அது மட்டுமா? விரகரிருவர் புகழ்ந்திட வேண்டும், விரல்கள் நிறைய மோதிரம் வேண்டும், அரையது தன்னில் பஞ்சேனும் பட்டேனும் இருந்தால் அவரின் கவிதை நஞ்சாய், வேம்பாய் இருந்தாலும் நன்று,"

என்று சரஸ்வதி சபதம் திரைப்படத்தில், ஏ.பி. நாகராஜன் அவர்கள் எழுதி, நாரதர் வேடமேற்று நடித்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் கூறும் வசனங்கள் நினைவுக்கு வருகின்றன.

ஆகையால், நாம் ஒவ்வொருவரும் தன்னிறைவோடு வாழத்தேவையான பணத்தை நாம் முயன்று உழைப்பால் ஈட்டுதல் மிகவும் அவசியமாகும். நம்மிடம் பொருள் இல்லாத நிலையைச் சொல்லி மற்றவரிடம் உதவி கேட்கும் நிலை இழிந்த நிலையென்று சான்றோர்கள் கூறியுள்ளனர்.

இல்லாமை சொல்லி ஒருவர் தம்பால் சென்றிழிவு பட்டு
நில்லாமை நெஞ்சில் நினைகுவிரேல் நித்தம் நீடுதவம்
கல்லாமை கற்ற கயவர் தம்மோடொரு காலத்திலும்
செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே.

என்று அபிராமி பட்டர் அபிராமி அந்தாதியி்ல் கூறியதை நினவில் நிறுத்தி இறையருளை வேண்டி, உண்மையும் நேர்மையும் துணையாகக் கொண்டு உழைத்தால் நிச்சயம் உயர்வுண்டு.

பணம் பந்தியிலே குணம் குப்பையிலே

படம்: பணம் பந்தியிலே
இயற்றியவர்: கவிஞர் கா.மு. ஷெரிஃப்
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்

பணம் பந்தியிலே குணம் குப்பையிலே - இதைப்
பார்த்து அறிந்து நடக்காதவன் மனிதனில்லே
பிழைக்கும் மனிதனில்லே
பணம் பந்தியிலே குணம் குப்பையிலே - இதைப்
பார்த்து அறிந்து நடக்காதவன் மனிதனில்லே
பிழைக்கும் மனிதனில்லே

ஒண்ணுந்தெரியா ஆளானாலும் பணமிருந்தாலே - அவனை
உய்ர்த்திப் பேச மனித கூட்டம் நாளும் தப்பாதே
ஒண்ணுந்தெரியா ஆளானாலும் பணமிருந்தாலே - அவனை
உய்ர்த்திப் பேச மனித கூட்டம் நாளும் தப்பாதே
என்ன அறிவு இருந்திட்டாலும் பணமில்லாத ஆளை
என்ன அறிவு இருந்திட்டாலும் பணமில்லாத ஆளை - உலகம்
எந்த நாளும் மனிதனாக மதிக்க மாட்டாதே

பணம் பந்தியிலே குணம் குப்பையிலே - இதைப்
பார்த்து அறிந்து நடக்காதவன் மனிதனில்லே
பிழைக்கும் மனிதனில்லே

ஆளை ஆளு புகழ்வதெல்லாம் பணத்துக்காகத் தான் - பணம்
அகன்று விட்டால் புகழ்ந்த கூட்டம் இகழும் உண்மை தான்
ஏழ்மை நிலை வந்தால் நேசர் யாரும் இல்லை
ஏழ்மை நிலை வந்தால் நேசர் யாரும் இல்லை - இதை
எண்ணிப் பார்த்து நடக்காதவன் அடைவான் தொல்லை

பணம் பந்தியிலே குணம் குப்பையிலே - இதைப்
பார்த்து அறிந்து நடக்காதவன் மனிதனில்லே
பிழைக்கும் மனிதனில்லே

உன்னால் உயர்ந்த நிலையடைந்தோர் நிறைய பேர்கள் உண்டு - அவர்கள்
உனது நிலை தாழ்ந்த பின்பு ஒதுங்குவார்கள் கண்டு
மண்ணாய் அவரை மதித்து நீயும் துணிவுமே கொண்டு
மண்ணாய் அவரை மதித்து நீயும் துணிவுமே கொண்டு - நாளும்
முயன்று மேலும் பாடுபட்டால் வெற்றியும் உண்டு

பணம் பந்தியிலே குணம் குப்பையிலே - இதைப்
பார்த்து அறிந்து நடக்காதவன் மனிதனில்லே
பிழைக்கும் மனிதனில்லே
பணம் பந்தியிலே குணம் குப்பையிலே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக