சனி, 28 நவம்பர், 2009

காவிரி பாயும் கன்னித் தமிழ் நாடு

தமிழன் இதயம்
தமிழன் என்றோர் இனமுண்டு;
தனியே அவற்கொரு குணமுண்டு;
அமிழ்தம் அவனுடைய வழியாகும்;
அன்பே அவனுடை மொழியாகும்.

அறிவின் கடலைக் கடைந்தவனாம்;
அமிர்தத் திருக்குறள் அடைந்தவனாம்;
பொறியின் ஆசையைக் குறைத்திடவே
பொருந்திய நூல்கள் உரைத்திடுவான்.

கவிதைச் சுவைகளை வடித்தெடுத்தான்;
கம்பன் பாட்டெனப் பெயர்கொடுத்தான்;
புவியில் இன்பம் பகர்ந்தவெலாம்
புண்ணிய முறையில் நுகர்ந்திடுவான்.

'பத்தினி சாபம் பலித்துவிடும்'
பாரில் இம்மொழி ஒலித்திடவே
சித்திரச் சிலப்பதி காரமதைச்
செய்தவன் துறவுடை ஓரரசன்.

சிந்தா மணி,மணி மேகலையும்,
பத்துப் பாட்டெனும் சேகரமும்,
நந்தா விளக்கெனத் தமிழ்நாட்டின்
நாகரி கத்தினை மிகக்காட்டும்.

தேவா ரம்திரு வாசகமும்
திகழும் சேக்கி ழார்புகழும்
ஓவாப் பெருங்கதை ஆழ்வார்கள்
உரைகளும் தமிழன் வாழ்வாகும்.

தாயும் ஆனவர் சொன்னவெலாம்
தமிழன் ஞானம் இன்னதெனும்;
பாயும் துறவுகொள் பட்டினத்தார்
பாடலும் தமிழன் பெட்பெனலாம்.

நேரெதும் நில்லா ஊக்கமுடன்
நிமிர்ந்திட அச்சம் போக்கிவிடும்
பாரதி என்னும் பெரும்புலவன்
பாடலும் தமிழன் தரும்புகழாம்.

கலைகள் யாவினும் வல்லவனாம்
கற்றவர் எவர்க்கும் நல்லவனாம்
நிலைகொள் பற்பல அடையாளம்
நின்றன இன்னும் உடையோனாம்.

சிற்பம் சித்திரம் சங்கீதம்
சிறந்தவர் அவனினும் எங்கேசொல்?
வெற்பின் கருங்கல் களிமண்போல்
வேலைத் திறத்தால் ஒளிபண்ணும்.

உழவும் தொழிலும் இசைபாடும்;
உண்மை ; சரித்திரம் அசைபோடும்;
இழவில் அழுதிடும் பெண்கூட
இசையோ டழுவது கண்கூடு.

யாழும் குழலும் நாதசுரம்
யாவுள் தண்ணுமை பேதமெலாம்
வாழும் கருவிகள் வகைபலவும்
வகுத்தது தமிழெனல் மிகையலவாம்.

'கொல்லா விரதம் பொய்யாமை
கூடிய அறமே மெய்யாகும்;
எல்லாப் புகழும் இவைநல்கும்;'
என்றே தமிழன் புவிசொல்லும்.

மானம் பெரிதென உயிர்விடுவான்;
மற்றவர்க் காகத் துயர்படுவான்;
தானம் வாங்கிடக் கூசிடுவான்;
'தருவது மேல்' எனப் பேசிடுவான்.

ஜாதிகள் தொழிலால் உண்டெனினும்
சமரசம் நாட்டினில் கண்டவனாம்;
நீதியும் உரிமையும் அன்னியர்க்கும்
நிறைகுறை யாமல் செய்தவனாம்.

உத்தமன் காந்தியின் அருமைகளை
உணர்ந்தவன் தமிழன்; பெருமையுடன்
சத்தியப் போரில் கடனறிந்தான்;
சாந்தம் தவறா துடனிருந்தான்.

- நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை

காவிரி பாயும் கன்னித் தமிழ் நாடு

படம்: மரகதம்
இயற்றியவர்: ஆர். பாலு
இசை: எஸ்.எம். சுப்பையா நாயுடு
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
ஆண்டு: 1959

காவிரி பாயும் கன்னித் தமிழ் நாடு
காவிரி பாயும் கன்னித் தமிழ் நாடு
கலைகளுக்கெல்லாம் தாய் வீடு
கலைகளுக்கெல்லாம் தாய் வீடு

காவியம் புகழும் சிறந்த பண்பாடு
காவியம் புகழும் சிறந்த பண்பாடு
காப்பதில் நமக்கு உண்டோ ஈடு
காப்பதில் நமக்கு உண்டோ ஈடு

காவிரி பாயும் கன்னித் தமிழ் நாடு

விண்ணை மறைத்திடும் கோபுரமே - நம்
வித்தையைக் காட்டிடும் ஓவியமே
விண்ணை மறைத்திடும் கோபுரமே - நம்
வித்தையைக் காட்டிடும் ஓவியமே
எண்ணில் அடங்கா இலக்கியமே
எண்ணில் அடங்கா இலக்கியமே
இயல் இசை நாடக இலக் கணமே

காவிரி பாயும் கன்னித் தமிழ் நாடு

கொல்லாமை பொய்யாமை நெறி கண்டே
குறளெனும் அமுதாம் தேனுண்டே
சொல்லும் செயலும் ஒன்றெனவே
வாழ்வது உலகில் தமிழினமே
வாழ்வது உலகில் தமிழினமே

காவிரி பாயும் கன்னித் தமிழ் நாடு
கலைகளுக்கெல்லாம் தாய் வீடு
கலைகளுக்கெல்லாம் தமிழ் நாடு
தமிழ் நாடு தமிழ் நாடு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக