சனி, 28 நவம்பர், 2009

புருஷ்ன் வீட்டில் வாழப்போகும் பொண்ணே

ஒரு பெண் திருமணம் முடித்துப் புகுந்த வீடு செல்கையில் தன் கணவனின் பெற்றோரைத் தன் பெற்றோராக அடைகிறாள், அவர்களுக்கு ஒரு மகளாகவும் ஆகிறாள். அதனாலேயே அவள் மருமகள் என அழைக்கப்படுகிறாள். மருமகள் என்றால் மருவி வந்த மகள் என்று பொருள் கொள்ளலாம். என் வீட்டுக்கு விளக்கேற்ற மருமகள் வந்து விட்டாள் என அவளது மாமனாரும் மாமியாரும் பிற உறவினர்களிடமும் நண்பர்களிடமும் கூறி அகமகிழ்வது மரபு. விளக்கேற்றுவதென்றால் அதுவரை அவர்களது வீட்டில் இருந்த சிறு சிறு துன்பங்களாகிய இருளை நீக்கி ஒளிகொடுப்பதென்று பொருள் கொள்ளலாம்.
தன் கணவனும் தான் புகுந்த வீடும் செழிப்பாக விளங்குவதற்குப் பாடுபடுவதும், அவ்வீட்டிலுள்ள அனைவர் வாழ்விலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி வாழ்வை வளமாக்குதலும் ஒரு பெண்ணின் இன்றியமையாத கடமைகளாகும். அக்கடமைகளை முறையாக ஒரு பெண் நிறைவாற்றுவாளேயானால் அவளது வாழ்வும் வளம் பெற்று அவள் மிகவும் பெறுமை பெறுவாள்.

புருஷ்ன் வீட்டில் வாழப்போகும் பொண்ணே

திரைப்படம்: பானை பிடித்தவள் பாக்கியசாலி
இயற்றியவர்: தஞ்சை ராமையா தாஸ்.
இசை. எஸ்.வி. வெங்கட்ராமன், எஸ். ராஜேஸ்வரராவ்
பாடியவர்: திருச்சி லோகநாதன்
ஆண்டு: 1958

புருஷ்ன் வீட்டில் வாழப்போகும் பொண்ணே தங்கச்சி கண்ணே - சில
புத்திமதிக சொல்லுறன் கேளு முன்னே தங்கச்சி கண்ணே - சில
புத்திமதிக சொல்லுறன் கேளு முன்னே

அரசன் வீட்டுப் பொண்ணாக இருந்தாலும் - அம்மா
அகந்தை கொள்ளக் கூடாது எந்நாளும்

புருஷ்ன் வீட்டில் வாழப்போகும் பொண்ணே தங்கச்சி கண்ணே - சில
புத்திமதிக சொல்லுறன் கேளு முன்னே

மாமனாரை மாமியாளை மதிக்கணும் - உன்னை
மாலையிட்ட கணவனையே துதிக்கணும்
சாமக் கோழி கூவையிலே முழிக்கணும் - குளிச்சு
சாணம் தெளிச்சு கோலம் போட்டு சமையல் வேலை துவக்கணும்

புருஷ்ன் வீட்டில் வாழப்போகும் பொண்ணே தங்கச்சி கண்ணே - சில
புத்திமதிக சொல்லுறன் கேளு முன்னே

கண்ணால் பேசும் பயக முன்னே நில்லாதே - நீ
காணாததைக் கண்டேனுன்னு சொல்லாதே
கண்ணால் பேசும் பயக முன்னே நில்லாதே - நீ
காணாததைக் கண்டேனுன்னு சொல்லாதே - இந்த
அண்ணே சொல்லும் அமுதவாக்குத் தள்ளாதே - நம்ம
அப்பன் பாட்டன் பேரைக் கெடுத்துக் கொள்ளாதே

புருஷ்ன் வீட்டில் வாழப்போகும் பொண்ணே தங்கச்சி கண்ணே - சில
புத்திமதிக சொல்லுறன் கேளு முன்னே

புருஷன் உயிரை மீட்டுத் தந்தவ பொண்ணுதான் - ஓடும்
பொழுதை அங்கே நில்லுன்னு சொன்னவ பொண்ணுதான்
அரசன் நடுங்க நீதி சொன்னவ பொண்ணுதான் - அவுங்க
ஆஸ்திக் கணக்கு சொன்னாக் கற்பு ஒண்ணுதான்
ஆஸ்திக் கணக்கு சொன்னாக் கற்பு ஒண்ணுதான்

புருஷ்ன் வீட்டில் வாழப்போகும் பொண்ணே தங்கச்சி கண்ணே - சில
புத்திமதிகள் சொல்லுறன் கேளு முன்னே

புருஷன் கூட நீ இருந்து பூவும் மணமும் போல் மகிழ்ந்து
கூரைச் சேலையும் தாலியும் மஞ்சளும்
குங்குமப் பொட்டும் நகையும் நட்டும்
கொறைஞ்சிடாம நெறைஞ்சு கிட்டு ஆஆஆஆ ஆஆஆஆஆஆஆ
மக்களைப் பெத்து மனையப் பெத்து மக்க வயத்திலே பேரனைப் பெத்து
பேரன் வயத்திலே புள்ளையப் பெத்து நோயில்லாம நொடியில்லாம
நூறு வயசு வாழப்போற தங்கச்சி - நமக்கு
சாமி துணை இருக்கு தங்கச்சி - நமக்கு
சாமி துணை இருக்கு சாமி துணை இருக்கு தங்கச்சி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக