சனி, 28 நவம்பர், 2009

எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான்

படித்த இளைஞர்கள் பொருளீட்டுவதற்கெனப் பன்னாட்டு நிறுவனங்களிலும் அயல்நாடுகளிலுமே பெரும்பாலும் வேலை வாய்ப்பைத் தேடுகின்றனர். சுயதொழில் செய்து பிழைக்கலாம், வாழ்க்கையில் முன்னுக்கு வரலாம் என நம்பிக் கடனை வாங்கி, அவ்வாறு கடன் வாங்கிய தொகையை மூலதனமாகக் கொண்டு தொழில் ஆரம்பிக்கும் பலர் அவ்வாறு சுயதொழில் ஆரம்பித்த பின்னர் சந்திக்கும் முதல் பிரச்சினை பணியாளர்களைத் தேடி நியமிப்பதாகும். பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கத்தினால் சாதாரணத் தொழிலாளிக்கும் கை நிறையச் சம்பளக் கிடைக்கும் நிலைமை நிலவுவதால் சுயதொழில் செய்வோரிடம் குறைந்த ஊதியத்துக்கு வேலைக்கு வர யாரும் விரும்புவதில்லை.
அது மட்டுமின்றி சாதாரணமாக வீட்டு வேலை செய்வதற்கும் ஆள் கிடைக்காமல் பலர் அல்லலுறுகின்றனர். அவ்வாறு வேலைக்கு ஆள் கிடைத்தாலும் அவர்களால் பல தொல்லைகள் விளைவதுண்டு. வேலை செய்யும் வீட்டில் உள்ளோர் தங்களது உறவினரிடத்தும் நண்பர்கள் மற்றும் அண்டை அயலாரிடத்தும் கொண்ட கருத்து வேறுபாடுகளைப் பேச்சு வாக்கில் அறியும் பணியாளர் அதனை ஊரெங்கும் பரப்பி வம்பில் மாட்டி விடுவதும் உண்டு.

இந்நிலைமையை ஆராய்கையில் மஹாகவி பாரதியாரின் கவிதை நினைவுக்கு வருகிறது.

''கூலி மிகக் கேட்பார், கொடுத்ததெலாந் தான் மறப்பார்
வேலை மிக வைத்திருந்தால் வீட்டிலே தங்கிடுவார்.
ஏனடா நீ நேற்றைக்(கு) இங்கு வரவில்லை யென்றால்,
பானையிலே தேளிருந்து பல்லாற் கடித்ததென்பார்.
வீட்டிலே பெண்டாட்டி மேற் பூதம் வந்ததென்பார்.
பாட்டியார் செத்துவிட்ட பன்னிரண்டாம் நாளென்பார்.
ஓயாமற் பொய்யுரைப்பார், ஒன்றுரைக்கவொன்று செய்வார்.
தாயாதியோடு தனியிடத்தே பேசிடுவார்.
உள் வீட்டுச் சேதியெலாம் ஊரம்பலத்(து) உரைப்பார்.
எள் வீட்டில் இல்லையென்றால் எங்கும் முரசறைவார்.
சேவகராற் பட்ட சிரம மிகவுண்டு கண்டீர்.
சேவகரில்லாவிடிலோ செய்கை நடக்கவில்லை!
இங்கிதனால் நானும் இடர் மிகுந்து வாடுகையில்
எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான்...''

என்று தொடங்கி, பிற பணியாளர்களிடம் காணப்படும் இத்தகைய குறைபாடுகளற்ற சேவகனாய் கண்ணன் தனக்கு அமைந்து தன்னையும் தன் குடும்பத்தையும் போற்றிப் பாதுகாத்ததாக மானசீகமாகக் கண்ணனைத் தன் சேவகனாகக் கொண்டு பாடிய பாடலின் முக்கியப் பகுதியை. படிக்காத மேதை திரைப்ப்டத்தில் ரங்கன் எனும் பெயருடன் தன் தாய்மாமனுக்கு சேவகனாய் அமைந்த சிவாஜி கணேசனைப் பற்றி அவரது தாய்மாமனான ரங்காராவ் எண்ணுவதாக அமைக்கப்பட்ட ஒரு அழகான காட்சியில் மிகவும் பொருத்தமான விதத்தில் படைத்துள்ளனர்.

எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான்

படம்: படிக்காத மேதை
இயற்றியவர்: மஹாகவி பாரதியார்
இசை: திரையிசைத் திலகம் கே.வி. மஹாதேவன்
பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்
ஆண்டு: 1960

எங்கிருந்தோ வந்தான்
எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான்
எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான்
இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன்
இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன் - கண்ணன்
எங்கிருந்தோ வந்தான்

சொன்னபடி கேட்பான் துணிமணிகள் காத்திடுவான்
சின்ன குழந்தைக்கு சிங்காரப் பாட்டிசைப்பான்
கண்ணை இமையிரண்டும் காப்பது போல் என் குடும்பம்
வண்ணமுறக் காக்கின்றான் வாய் முணுத்தல் கண்டறியேன் கண்ணன்

எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான்
இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன் - கண்ணன்
எங்கிருந்தோ வந்தான்

பற்று மிகுந்து வரப் பார்க்கின்றேன் கண்ணனால்
பெற்று வரும் நன்மையெல்லாம் பேசி முடியாது
நண்பனாய் மந்திரியாய் நல்லாசிரியனுமாய்
யதா யதா ஹி தர்மஸ்ய க்லானிர்பவதி பாரத
அப்யுத்தானமதர்மஸ்ய ததாத்மானம் ஸ்ருஜாம்யகம்
பண்பிலே தெய்வமாய் பார்வையிலே சேவகனாய் - ரங்கன்

எங்கிருந்தோ வந்தான் ரங்கன் ரங்கன்
இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன் - ரங்கன்
எங்கிருந்தோ எங்கிருந்தோ ரங்கன்
எங்கிருந்தோ வந்தான் ரங்கன் ரங்கன்
எங்கிருந்தோ வந்தான் ரங்கன் ரங்கன்
ரங்கா ரங்கா ரங்கா ரங்கா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக