சனி, 28 நவம்பர், 2009

படைத்தானே படைத்தானே மனிதனை ஆண்டவன் படைத்தானே

"புல்லினும் அற்பமானது எது?" என்று தரும தேவதை கேட்டதற்குப் பாண்டவர்களில் மூத்தவனான யுதிஷ்டிரன் சொன்ன பதிலாவது, "கவலை" என்பதாகும். ஆனாலும் அவனும் தன் வாழ்நாளெல்லாம் கவலையிலேயே கழித்ததாக மஹாபாரதக் கதையின் வாயிலாக அறிகிறோம். நாமெல்லோரும் இவ்வுலகில் அனுதினமும் கவலைப் பட்டு வருந்தி மடிவதற்காகவே அவதரித்தோமோ?
பிறந்த குழந்தைக்குத் தன் தாயை ஒரு கணம் காணவில்லையெனில் கவலை, குறித்த நேரத்தில் பசியாறப் பாலும் உணவும் தரவில்லையெனில் கவலை. தூக்கம் வரத் தாலாட்டவில்லையெனில் கவலை. குழந்தைப் பருவம் விளையாட்டில் ஒரு வழியாகக் கழிந்ததும் தாயையும், விளையாட்டுத் தோழர்களையும் விட்டுப் பள்ளி செல்ல வேண்டுமென்ற கவலை. பள்ளியிலிருந்து வீடு திரும்பிய பின்னர் வீட்டுப் பாடங்களைப் படிக்க வேண்டுமென்ற கவலை. ஆண்டு நிறைவடைந்த நிலையில் தேர்வு எழத வேண்டுமெனும் கவலை. கல்வி முடிந்து தேராவிடில் தேரவில்லையெனும் கவலை, தேர்வுபெற்றால் உத்தியோகம் கிடைக்க வேண்டுமெனும் கவலை, காதலினால் கவலை, காதல் தோல்வியுற்றாலும் வெற்றியுற்றாலும் கல்யாணக் கவலை, கல்யாணம் செய்தபின்னர் பிள்ளைப் பேற்றைப் பற்றிய கவலை. கவலையோ கவலை.

முற்காலத்தில் (1960களில்) அப்பா அலுவலுக்குச் செல்ல அம்மா வீட்டிலிருப்பாள் வேளாவேளைக்கு சோறும் பிற பதார்த்தங்களும் வாய்க்கு ருசியாகச் சமைத்துப் போடுவாள். மாலை தந்தை பணி முடிந்து வீடு திரும்புகையில் தின்பண்டங்கள் வாங்கி வருவார். அதனை சுவைத்த பின்னர் ஏதோ சில பாடம் படித்துவிட்டுப் படுத்துறங்கி வாழ்வை எளிதாகக் கழிக்கும் நிலை இருந்தது. ஐந்து வயது வரையில் பள்ளிக்கூடம் கிடையாது. ஐந்து வயதில் நேரடியாக ஒண்ணங்கிளாஸ் சேர வேண்டும். அதன் பின்னர் 10 வருடங்கள் படித்தாலே போதும் நல்ல உத்தியோகம் பெற்று விரைவில் திருமணம் செய்து வாழ்வை சுகமாகக் கழிக்கலாம்.

காலம் செல்லச் செல்ல எல்.கே.ஜி., யு.கே.ஜி., கிரீச் என்று பிறந்து இரண்டு வயது நிறைவடையும் முன்னரே பிள்ளையை எங்காவது கொண்டு தள்ளிவிட்டுக் கணவனும் மனைவியும் இருவருமே பணி செய்து சம்பாத்திக்க வேண்டிய சூழ்நிலை (ஏழையை வாழ வைப்பதாகச் சொல்லி ஏலம் போட்டு, ஏழைகளின் எண்ணிக்கையை அதிகரித்து, விலைவாசியை ஏற்றி, தான் மட்டும் சொத்து சேர்த்த அரசியல்வாதிகளுக்கு நன்றி! "ஏழையாய் வாழ வைப்பதாக அவர்கள் சொன்னதை நாம் சரியாகக் கேட்கவில்லையோ?" என ஓட்டுப் போட்டு ஆட்சியை ஒப்படைத்தபின்னர் கவலைப்பட்டு என்ன பயன்?)

படைத்தானே படைத்தானே மனிதனை ஆண்டவன் படைத்தானே

படம்: நிச்சய தாம்பூலம்
இயற்றியவர்: கவியரசு கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
ஆண்டு: 1961

படைத்தானே படைத்தானே மனிதனை ஆண்டவன் படைத்தானே
வளர்த்தானே வளர்த்தானே மனதினில் கவலையை வளர்த்தானே
படைத்தானே படைத்தானே மனிதனை ஆண்டவன் படைத்தானே

கொடுத்தானே கொடுத்தானே பழரசம் ஆண்டவன் கொடுத்தானே
பிரித்தானே பிரித்தானே மனதையும் கவலையும் பிரித்தானே

படைத்தானே படைத்தானே மனிதனை ஆண்டவன் படைத்தானே

குரங்காய் இருந்த மனிதன் மனதில் குழப்பம் ஏதுமில்லை
குடும்பம் மனைவி அண்ணன் தம்பி கூட்டம் சிறிதுமில்லை
ஆசை பாசம் காதலில் விழுந்தான் அமைதியைக் காணவில்லை
அலைந்தான் தவித்தான் துடித்தான் மடிந்தான் யாருக்கும் லாபமில்லை

படைத்தானே படைத்தானே மனிதனை ஆண்டவன் படைத்தானே
வளர்த்தானே வளர்த்தானே மனதினில் கவலையை வளர்த்தானே
படைத்தானே படைத்தானே மனிதனை ஆண்டவன் படைத்தானே

தன்னந்தனியே பிறந்தவன் நெஞ்சில் சஞ்சலம் இல்லையடா
இன்னொரு உயிரை தன்னுடன் சேர்த்தால் என்றும் தொல்லையடா
இத்தனை சிறிய மனிதனின் தலையில் எத்தனை சுமைகளடா
இருபதில் தொடங்கி எழுபது வரைக்கும் என்றும் மயக்கமடா

படைத்தானே படைத்தானே மனிதனை ஆண்டவன் படைத்தானே
வளர்த்தானே வளர்த்தானே மனதினில் கவலையை வளர்த்தானே
படைத்தானே படைத்தானே மனிதனை ஆண்டவன் படைத்தானே
வளர்த்தானே வளர்த்தானே மனதினில் கவலையை வளர்த்தானே
மனதினில் கவலையை வளர்த்தானே
ம்...ம்ம்ம்ம்ம்ம்..ம்ம்ம்ம்ம்ம்...ம்ம்ம்ம்ம்ம்..ம்ம்ம்ம்ம்.

1 கருத்து: