வெள்ளி, 27 நவம்பர், 2009

வெற்றி வேண்டுமா? போட்டுப் பாரடா எதிர்நீச்சல்

கடலில் வழியாகவும் ஆற்று வழியாகவும் கப்பலிலோ, படகுகளிலோ பயணம் செய்யும் மனிதர்கள் எதிர்பாராமல் வரும் புயல், வெள்ளம் போன்ற அபாயங்கள் ஏற்படுகையில் அவர்களுள் நீச்சல் தெரிந்தவர்கள் நீந்திக் கரை சேர முயற்சி செய்கின்றனர். நீந்தத் தெரியாதவர்கள் நீரில் மூழ்கி மடிகின்றனர். இவை தவிரப் பல்வேறு காரணங்களால் ஏற்படும் வெள்ளச் சூழ்நிலைகளிலிருந்தும் மீள ஒவ்வொருவரும் நீச்சல் அறிந்திருத்தல் அவசியம்.
அது போலக் காலமெனும் கடலிலே வாழ்க்கை எனும் ஓடத்தில் பயணம் செய்யும் நாம் ஒவ்வொருவரும், இன்னல்கள் எனும் பேரலை வந்து ஓடத்தைத் துன்பங்கள் எனும் நீரில் முழ்கடிக்கையில் முயற்சியுடையவன் நீந்திக் கரை சேர்கிறான். முயற்சியற்றவன் மீள முடியாமல் தவிக்கிறான். வாழ்க்கைப் பயணத்தில் நீச்சல் கற்பது என்பது தொழில் செய்யக் கற்றுக் கொள்ளுதல் எனக் கொள்ளலாம். தொழிலுக்குத் தன்னைத் தகுதியுடையவனாகச் செய்து கொள்வதே யோகம் எனப்படும் என மஹாகவி பாரதியார் பகவத் கீதையில் குறிப்பபிட்டுள்ளார்.

வாழ்க்கைப் போராட்டத்தில் வெற்றி பெற வேண்டுமெனில் சோதனைகள் எனும் நீரோட்டத்தை எதி்த்துப் பயணிக்க எதிர்நீச்சல் போடுவது அவசியமாகிறது.

வெற்றி வேண்டுமா? போட்டுப் பாரடா எதிர்நீச்சல்

படம்: எதிர்நீச்சல்
இயற்றியவர்: கவிஞர் வாலி
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்
ஆண்டு: 1968

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு

வெற்றி வேண்டுமா? போட்டுப் பாரடா எதிர்நீச்சல்
சர்தாம் போடா தலைவிதி என்பது வெறுங்கூச்சல்
எண்ணித் துணிந்தால் இங்கு என்ன நடக்காதது
கொஞ்சம் முயன்றால் இங்கு எது கிடைக்காதது?
வெற்றி வேண்டுமா? போட்டுப் பாரடா எதிர்நீச்சல்

பிள்ளையைப் பெறுகிற அம்மாவுக்கு பத்து மாதமும் எதிர்நீச்சால்
பொறக்குற கொழந்த நடக்குற வரையில் தரையில் போடுவது எதிர்நீச்சல்
பள்ளிக்குப் பள்ளி இடத்துக்கு அலையும் அப்பனுக்கது தான் எதிர்நீச்சல்
பிள்ளைக்கு எப்படி இடம் கிடைச்சாலும் பரிட்சை வந்தா எதிர்நீச்சல் எதிர்நீச்சல்

வெற்றி வேண்டுமா? போட்டுப் பாரடா எதிர்நீச்சல்

கடற்கரையோரம் நடக்குற காதல் கல்யாணம் முடிப்பது எதிர்நீச்சல்
கணக்குக்கு மேலே பிள்ளையைப் பெத்து காலங்கழிப்பதும் எதிர்நீச்சல்
கண்மூடி வழக்கம் மண்மூடிப் போகக் கருத்தைச் சொல்லுவது எதிர்நீச்சல்
வீட்டுக்கு வீடு ஓட்டுக்கள் வாங்கி பதவிக்கு வருவது எதிர்நீச்சல் எதிர்நீச்சல்

வெற்றி வேண்டுமா? போட்டுப் பாரடா எதிர்நீச்சல்
சர்தாம் போடா தலைவிதி என்பது வெறுங்கூச்சல்
எண்ணித் துணிந்தாலின்று என்ன நடக்காதது
கொஞ்சம் முயன்றாலின்று எது கிடைக்காதது?
வெற்றி வேண்டுமா போட்டுப் பாரடா எதிர்நீச்சல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக