வெள்ளி, 27 நவம்பர், 2009

இறைவன் இருக்கின்றானா? மனிதன் கேட்கிறான்

சரீர சம்பந்தத்தால் உணர்கின்ற மாயங்களால் மதிமயங்கிய மனிதர்கள் தம் உள்ளேயே இறைவன் இருப்பதை அறியாமல் வெளியே எங்கெங்கோ தேடுகிறார்கள். தன் மனதில் தோன்றியவாறெல்லாம் பல வடிவங்களைக் கற்பித்து அவையே இறை என்று தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்வதுடன் பிறரையும் ஏமாற்றுகிறான் அறிவிற் குறைந்த மனிதன்.
உள்ள தனைத்திலும் உள்ளொளி யாகி
ஒளிர்ந்திடும் ஆன்மாவே-இங்கு,
கொள்ளற் கரிய பிரமமென் றேமறை
கூவுதல் கேளீரோ?

இறைத் தன்மைகளான அன்பும் அறிவும் பெறாத மனிதன் இறைவனைக் காண்பதெங்கே? நீ இறைவனை நோக்கி ஓர் அடி எடுத்து வைத்தால் இறைவன் உன்னை நோககிப் பல அடிகள் எடுத்து வைக்கிறான் என மெய்ஞ்ஞானிகள் கூறுகின்றனர். இறைவனை நோக்கிய பயணத்திற்கு இன்றியமையாத பக்தி, கருணை, உண்மை, நேர்மை, அடக்கம், உள்ளத்துறுதி முதலான நற்பண்புகள் அமையப் பெறாத மனிதன் இறைவனை ஒருபோதும் காணமாட்டான்.

இறைவன் இருக்கின்றானா? மனிதன் கேட்கிறான்

படம் : அவன் பித்தனா?
பாடியவர் : டி.எம்.எஸ்., சுசீலா
இயற்றியவர் : கவிஞர் கண்ணதாசன்
இசை : ஆர். பார்த்தசாரதி
ஆண்டு: 1966

இறைவன் இருக்கின்றானா?
இறைவன் இருக்கின்றானா? மனிதன் கேட்கிறான் - அவன்
இருந்தால் உலகத்திலே எங்கே வாழ்கிறான்? எங்கே வாழ்கிறான்?
நான் ஆத்திகனானேன் அவன் அகப்படவில்லை
நான் நாத்திகனானேன் அவன் பயப்படவில்லை

மனிதன் இருக்கின்றானா?
மனிதன் இருக்கின்றானா? இறைவன் கேட்கிறான் - அவன்
இருந்தால் உலகத்திலே எங்கே வாழ்கிறான்? எங்கே வாழ்கிறான்?
நான் அன்பு காட்டினேன் அவன் ஆட்கொள்ளவில்லை
இந்தத் துன்பம் தீர்க்கவும் அவன் துணை வரவில்லை

கண்ணிலே உறுதியில்லை காதலுக்கோர் நீதியில்லை
ஒரு நாள் இருந்த மனம் மறு நாள் இருப்பதில்லை
குடிசையில் ஓர் மனது கோபுரத்தில் ஓர் மனது
கூடாத சேர்க்கை எல்லாம் கூடினால் பல மனது

மனிதன் இருக்கின்றானா?

பார்ப்பவன் குருடனடி படிப்பவன் மூடனடி
உள்ளதை சொல்பவனே உலகத்தில் பித்தனடி
நீரோ கொதிக்குதடி நெருப்போ குளிருதடி
வெண்மையைக் கருமை என்று கண்ணாடி காட்டுதடி

இறைவன் இருக்கின்றானா?

ஒன்றையே நினைத்திருந்தும் ஒன்றாக வாழ்ந்திருந்தும்
பெண்ணாகப் பிறந்தவரை கண்ணாக யார் நினைத்தார்?
இருந்தால் இருந்த இடம் இல்லையேல் மறந்து விடும்
இவர்தான் மனிதர் என்றால் இயற்கையும் நின்றுவிடும்

மனிதன் இருக்கின்றானா?

சந்தேகம் பிறந்து விட்டால் சத்தியமும் பலிப்பதில்லை
சத்தியத்தைக் காப்பவனும் சாட்சி சொல்ல வருவதில்லை
வழக்கும் முடியவில்லை மனிதரின் தீர்ப்பும் இல்லை
மனிதனை மறந்து விட்டு வாழ்பவன் இறைவன் இல்லை

இறைவன் இருக்கின்றானா?
மனிதன் இருக்கின்றானா?
இறைவன் இருக்கின்றானா? மனிதன் கேட்கிறான் - அவன்
இருந்தால் உலகத்திலே எங்கே வாழ்கிறான் ? எங்கே வாழ்கிறான் ?

1 கருத்து: