வெள்ளி, 27 நவம்பர், 2009

தோள் கண்டேன் தோளே கண்டேன்

கவிச் சக்கரவர்த்தி கம்பர் தனது இராமாயண மஹா காவியத்தில் ஸ்ரீ ராமனின் அழகை வர்ணிக்கும் விதமாக
தோள்கண்டார் தோளே கண்டார்
தொடுகழல் கமலம் அன்ன
தாள்கண்டார் தாளே கண்டார்
தடக்கை கண்டாரும் அஃதே
வாள்கொண்ட கண்ணார் யாரே
வடிவினை முடியக் கண்டார்
ஊழ்கொண்ட சமயத்து அன்னான்
உருவுகண் டாரை ஒத்தார்.

எனும் பாடல் மூலமாக அவன் மிதிலை நகர் வீதி வழியே நடந்து செல்கையில் அவன் அழகை அங்குள்ள மங்கையர் ரசித்ததை எடுத்துரைக்கிறார்.

ராமபிரானின் தோள்கள், கழல் எனும் ஆபரணத்தை அணிந்த தாமரை மலரையொத்த பாதங்கள், திடமான கைகள் என ஒவ்வொரு அங்கத்தையும் பார்த்த பெண்கள் அவ்வங்கத்தை விட்டுப் பார்வையை நீக்க விரும்பாத அளவு அதன் வனப்பால் ஈர்க்கப் பட்டதால் வேறோர் அங்கத்தைப் பார்க்கவில்லையாதலால் அவர்களுள் யாரும் ராமனின் முழு உருவத்தையும் ரசிக்க இயலாத நிலையிலிருந்தனராம்.

இவ்வாறு பெண்கள் ஒரு ஆடவனின் அழகை ரசித்தது போல் ஒரு ஆடவன் தன் மனம் கவர்ந்த பெண்ணொருத்தியின் அழகை ரசித்து மகிழும் சூழ்நிலைக்குத் தக்க பாடல் ஒன்றை இயற்ற வேண்டியிருந்த தருணத்தில் பழந்தமிழ் இலக்கியங்களைச் சுவைத்து, அவற்றின் சாற்றைப் பிழிந்து தனது பாடல்களில் அள்ளித்தந்த கவியரசர் கண்ணதாசன் கவிச்சக்கரவர்த்தியின் இப்பாடலை மனதில் கொண்டு இதே பாணியில் எழுதியதோர் இனிய பாடல்:

தோள் கண்டேன் தோளே கண்டேன்

திரைப் படம்: இதயக் கமலம்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியவர்: பி.பி. ஸ்ரீனிவாஸ், பி. சுசீலா
ஆண்டு: 1965

தோள் கண்டேன் தோளே கண்டேன்
தோளிலிரு கிளிகள் கண்டேன்
வாள் கண்டேன் வாளே கண்டேன்
வட்டமிடும் விழிகள் கண்டேன்
தோள் கண்டேன் தோளே கண்டேன்
தோளிலிரு கிளிகள் கண்டேன்
வாள் கண்டேன் வாளே கண்டேன்
வட்டமிடும் விழிகள் கண்டேன்
தோள் கண்டேன் தோளே கண்டேன்

கட்டாத மேகம் கட்டி வந்த கூந்தல்
எட்டாத நிலவு எட்டி வந்த போது ஆ..ஆ..
கட்டாத மேகம் கட்டி வந்த கூந்தல்
எட்டாத நிலவு எட்டி வந்த போது எட்டி வந்த போது

தோள் கண்டேன் தோளே கண்டேன்
தோளிலிரு கிளிகள் கண்டேன்
வாள் கண்டேன் வாளே கண்டேன்
வட்டமிடும் விழிகள் கண்டேன்
தோள் கண்டேன் தோளே கண்டேன்

செண்டு வண்ணச் சிட்டு சின்ன முல்லை மொட்டு
குங்குமப் பொட்டு கொஞ்சும் நெஞ்சைத் தொட்டு ஆ..ஆ..
செண்டு வண்ணச் சிட்டு சின்ன முல்லை மொட்டு
குங்குமப் பொட்டு கொஞ்சும் நெஞ்சைத் தொட்டு
கொஞ்சும் நெஞ்சைத் தொட்டு தொட்டு

தோள் கண்டேன் தோளே கண்டேன்
தோளிலிரு கிளிகள் கண்டேன்
வாள் கண்டேன் வாளே கண்டேன்
வட்டமிடும் விழிகள் கண்டேன்
தோள் கண்டேன் தோளே கண்டேன்

தேடி வந்த திங்கள் திங்களில் செவ்வாய்
செவ்வாயின் வெள்ளி சேர்த்தெடுத்தேன் அள்ளி ஆ..ஆ..
தேடி வந்த திங்கள் திங்களில் செவ்வாய்
செவ்வாயின் வெள்ளி சேர்த்தெடுத்தேன் அள்ளி
சேர்த்தெடுத்தேன் அள்ளி அள்ளி

தோள் கண்டேன் தோளே கண்டேன் ஆ..
தோளிலிரு கிளிகள் கண்டேன் ஆ..
வாள் கண்டேன் வாளே கண்டேன் ஆ..
வட்டமிடும் விழிகள் கண்டேன் ஆ..
தோள் கண்டேன் தோளே கண்டேன் ஆ..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக