வெள்ளி, 27 நவம்பர், 2009

ஒடிவது போல் இடை இருக்கும் இருக்கட்டுமே

கவிஞர்கள் ஒரு பெண்ணின் அழகை வர்ணிக்கையில் முக்கியமாக அவளது இடை பற்றிக் குறிப்பிடத் தவறுவதில்லலை. ஒரு பெண் நாட்டியமாடுகையில் அவளது இடையசைவே அனைத்திலும் மேலாக அனைவரது கருத்தையும் கவரவல்லது. சாமுத்ரிகா லக்ஷணப் படி ஒரு பெண்ணுக்கு இடை மெலிதாக இருத்தல் அவசியம். பெண்ணின் இடையைப் பூங்கொடிக்கும், மயிரிழைக்கும், சிவபெருமானின் சிறு வாத்தியமான உடுக்கைக்கும் இணையாகக் கொண்டு பல புலவர்கள் பாடியுள்ளனர்.
பவளக் கொடியில் பழுத்த செவ்வாயும் பனி முறுவல்
தவளத் திருநகையும் துணையா எங்கள் சங்கரனைத்
துவளப் பொருது துடியிடை சாய்க்கும் துணை முலையாள்
அவளைப் பணிமின் கண்டீர் அமராவதி ஆளுகைக்கே

என்று அந்தப் பராசக்தியை வர்ணித்துப் பாடுகையில் அபிராமி பட்டர் அவளது இடை உடுக்கையைப் போன்றுள்ளதெனக் குறிப்பிடுகின்றார்.

சூதளவளவெனும் இளமுலை துடியளவளவெனும் நுண்ணிடை
காதளவளவெனும் மதர்விழிக் கடையமுதனையவர் திறமினோ

என்று கலிங்கத்துப் பரணியில் வரும் கடைதிறப்பு பகுதியில் இடம்பெற்ற பாடலில் பெண்ணின் இடைக்கு உடுக்கையை உவமையாகக் கூறுகிறார் செயங்கொண்டார்.

இழையொன்றிரண்டு வகிர்செய்த நுண்ணிடை ஏந்திய பொற்
குழையொன்றிரண்டு விழியணங்கே கொண்ட கோபந்தணி
மழையொன்றிரண்டுகைப் பாணாபரணன் நின் வாயில் வந்தால்
பிழையொன்றிரண்டு பொறாரோ குடியியிற் பிறந்தவரே

என்று தன் சிஷ்யையான சோழ நாட்டு அரசி அரசன் மேல் கொண்ட கோபத்தைத் தணிக்க வேண்டி்ப் பாடிய பாடலில் மயிரிழை ஒன்றை இரண்டாக வகிர்ந்தால் எவ்வளவு இருக்குமோ அவ்வளவே உள்ள இடையுடைய பெண்ணே என வர்ணித்துள்ளார்.

சங்ககாலப் புலவர்களுக்கு சற்றும் இளைக்காத தற்காலப் புலவர்களும் இப்பான்மையைத் தொடர்ந்தே கவிதை புனைகின்றனர்.

ஒடிவது போல் இடை இருக்கும் இருக்கட்டுமே

படம்: இதயத்தில் நீ
இயற்றியவர்: வாலி
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியவர்: பி.பி. ஸ்ரீனிவாஸ்
ஆண்டு: 1960

ஒடிவது போல் இடை இருக்கும் இருக்கட்டுமே ஹோய் - அது
ஒய்யார நடை நடக்கும் நடக்கட்டுமே ஹோய் - ஆஹா
ஒடிவது போல் இடை இருக்கும் இருக்கட்டுமே ஹோய் - அது
ஒய்யார நடை நடக்கும் நடக்கட்டுமே

சுடுவது போல் கண் சிவக்கும் சிவக்கட்டுமே - கண்
சுட்டு விட்டால் கவி பிறக்கும் பிறக்கட்டுமே கண்
சுட்டு விட்டால் கவி பிறக்கும் பிறக்கட்டுமே - ஆஹா

ஒடிவது போல் இடை இருக்கும் இருக்கட்டுமே - அது
ஒய்யார நடை நடக்கும் நடக்கட்டுமே

தொடுவது போல் கை துடிக்கும் துடிக்கட்டுமே - இளம்
தோகை நெஞ்சில் இடம் பிடிக்கும் பிடிக்கட்டுமே - - இளம்
தோகை நெஞ்சில் இடம் பிடிக்கும் பிடிக்கட்டுமே - ஆஹா
தொடர்வது போல் கால் தொடரும் தொடரடடுமே - கொஞ்சம்
தொடர்ந்து வந்தால் கொடி படரும் படரட்டுமே

கொடி மலர் போல் இதழ் விரியும் விரியட்டுமே - அது
குளிர் நிலவாய் நகை புரியும் புரியட்டுமே - அது
குளிர் நிலவாய் நகை புரியும் புரியட்டுமே

ஆஹாஹா ஆஹஹஹஹா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக