வெள்ளி, 27 நவம்பர், 2009

கண்ணன் வருவான் கதை சொல்லுவான்

தாய்மார்கள் கோகுலத்துக் கண்ணனைத் தங்கள் குழந்தையாக பாவித்து வழிபடுவது வழக்கத்தில் இருந்து வருகிறது. கண்ணன் பிறந்த தினமான கோகுலாஷ்டமி நாளில் வீட்டு வாசலில் இருந்து பூஜை அறை வரையிலும் குழந்தை கண்ணனின் பாதங்களை அரிசி மாவினால் கோலமிட்டு மகிழ்ந்து, அன்று உப்பு சிகடை, வெல்லச் சிகடை என்று பலகாரங்கள் செய்து குழந்தைகளுக்கும் பிற குடும்பத்தவருக்கும் தந்து தாமும் உண்டு மகிழ்வர் நம் அன்னையர்
உண்ண உண்ணத் தெவிட்டாதே -- அம்மை
உயிரெனும் முலையினில் உணர்வெனும் பால்;
வண்ணமுற வைத்தெனக்கே -- என்றன்
வாயினிற்கொண் டூட்டுமோர் வண்மையுடையாள்,

கண்ணனெனும் பெயருடையாள் -- என்னைக்
கட்டிநிறை வான் எனுந்தன் கையி லணைத்து
மண்ணெனுந்தன் மடியில் வைத்தே -- பல
மாயமுறுங் கதைசொல்லி மனங்களிப் பாள்.

இன்பமெனச் சிலகதைகள் -- எனக்
கேற்றமென்றும் வெற்றியென்றும் சில கதைகள்
துன்பமெனச் சிலகதைகள் -- கெட்ட
தோல்வியென்றும் வீழ்ச்சியென்றுஞ் சிலகதைகள்
என்பருவம் என்றன்விருப்பம் -- எனும்
இவற்றினுக் கிணங்கவென் னுளமறிந்தே
அன்பொடவள் சொல்லிவருவாள்; -- அதில
அற்புதமுண் டாய்ப்பர வசமடைவேன்.

என்று கண்ணனைத் தன் தாயாகக் கண்டு பாடினார் பாரதியார்.

கண்ணன் புல்லாங்குழலெடுத்து ஊதினால் அவ்விசையைக் கேட்டு புல்வெளியில் பல இடங்களில் மேயச் சென்ற மாடுகள் அனைத்தும் கண்ணை இருக்குமிடம் தேடி வந்திடுமாம். வேணுகானத்தைக் கேட்டால் கோபியர்களும் கோபிகைகளும் தங்கள் பணிகள் அனைததியும் நிறுத்திவிட்டு மனம் மயங்கி அக்குழலிசையில் லயிப்பராம்.

அத்தகைய கண்ணன் வந்து தன் குழந்தைக்குத் தாலாட்டுப் பாடித் தூங்க வைத்து, புல்லாங்குழலில் பாட்டிசைத்து, பாலூட்டி சீராட்டி மகிழ்விக்க வேண்டுமென விரும்பிப் பாடுகிறாள் ஒரு பெண்.

கண்ணன் வருவான் கதை சொல்லுவான்

படம்: பஞ்சவர்ணக் கிளி
இயற்றியவர்: கவிஞர் வாலி
இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி
பாடியவர்: பி. சுசீலா
ஆண்டு: 1965

கண்ணன் வருவான் கதை சொல்லுவான்
வண்ண மலர்த் தொட்டில் கட்டித் தாலாட்டுவான்
குழலெடுப்பான் பாட்டிசைப்பான்
வலம்புரிச் சங்கெடுத்துப் பாலூட்டுவான்
வலம்புரிச் சங்கெடுத்துப் பாலூட்டுவான்

பச்சை வண்ணக் கிளி வந்து பழம் கொடுக்க
பட்டு வண்ணச் சிட்டு வந்து மலர் கொடுக்க
கன்னங்கரு காக்கை வந்து மை கொடுக்க
கண்ணன் மட்டும் கன்னத்திலே முத்தம் கொடுக்க
முத்தம் கொடுக்க முத்தம் கொடுக்க

தத்தித் தத்தி நடக்கையில் மயில் போலே
திக்கித் திக்கிப் பேசுகையில் குயில் போலே
கொஞ்சிக் கொஞ்சி எடுக்கையில் கொடடி போலே
அஞ்சி அஞ்சி விழுவாய் மடி மேலே

ஆரிரோ ஆரிராரி ஆரிராரி ஆராரோ
ஆராரோ ஆரிராரி ராரிராரி ராரிரோ
ஆரிராரி ராரிராரி ஆராரோ ஆரிராரி ராரிராரி ஆராரோ

உனக்கென்றும் எனக்கென்றும் உறவு வைத்தான்
இருவரின் கணக்கிலும் வரவு வைத்தான்
ஒருவரின் குரலுக்கு மயங்க வைத்தான்
உண்மையை அதிலே உறங்க வைத்தான்
உறங்க வைத்தான் உறங்க வைத்தான்

தத்தித் தத்தி நடக்கையில் மயில் போலே
திக்கித் திக்கிப் பேசுகையில் குயில் போலே
கொஞ்சிக் கொஞ்சி எடுக்கையில் கொடி போலே
அஞ்சி அஞ்சி விழுவாய் மடி மேலே

ஆரிரோ ஆரிராரி ஆரிராரி ஆராரோ
ஆராரோ ஆரிராரி ராரிராரி ராரிரோ
ஆரிராரி ராரிராரி ஆராரோ ஆரிராரி ராரிராரி ஆராரோ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக