ஆதிகாலம் தொட்டே மனிதன் பல விதமான கனவுகளிலும் கற்பனைகளிலும் திளைத்து அவற்றில் தான் அனுபவிக்க இயலாதவற்றை வேறொருவர் அனுபவித்ததாகக் காட்டும் பல விதமான ஸ்வாரஸ்யமான கதைகள் புனைந்து அந்தக் கதைகளைப் பிறருடன் பகிர்ந்து கொண்டு வந்திருக்கிறான்.
நாளடைவில் மனிதன் விஞ்ஞான அறிவு வளர்ச்சி பெற்று இயற்கையின் பல ரகசியங்களை அறிந்து அவற்றைப் பல கருவிகளின் துணையுடன் பிரயோகித்து, தான் கனவுகளிலும் கற்பனையில் கண்டவற்றை நிஜ வாழ்வில் நிகழ்த்திக் காட்டிப் பல அற்புதங்களைப் புரிந்து வந்திருக்கிறான்.
புஷ்பக விமானத்தைக் கதைகளில் காட்டிய மனிதன் காலப்போக்கில் ஆகாய விமானத்தைக் கண்டு அதன் மூலம் மனிதர்கள் உலகெங்கிலும் பறந்து செல்லும் வசதியைப் படைத்தான். மாயக்கண்ணாடியைக் கற்பனைக் கதைகளில் காட்டியவன் பின்னர் விண்வெளி ஆராய்ச்சயின் வாயிலாக செயற்கைக் கோள்களையும் பிற சாதனங்களையும் கண்டுபிடித்த நிலையில் உலகின் பல பகுதிகளில் வாழும் மனிதர்கள் ஒருவரையொருவர் தமது இருப்பிடத்திலிருந்தே கண்டு உரையாடும் அதிசயத்தை கணிணியின் உதவியுடனும் வெப் காமெராவின் உதவியோடும் நிகழ்த்திக் காட்டினான்.
சாகா வரத்துடன் என்றும் 16 வயதுடன் இளைஞனாக வாழும் மார்க்கண்டேயன் எனும் கதாபாத்திரத்தைப் புராண கதைகளில் படைத்த மனிதன் எதிர்காலத்தில் உண்மையாகவே மார்க்கண்டேயன் போல் பிறரும் வாழும் வழியையும் காணக்கூடும். "மண் மீது மாளாமல் மார்க்கண்டேயன் போல் வாழ்தல்' சாத்தியம் என்று மஹாகவி பாரதியார் தாம் எழுதிய பகவத் கீதை உரையில் குறிப்பிட்டுள்ளார். அமரகவியல்லவா? அவர் சொன்ன வாக்குப் பலிக்கும் என உறுதியாக நம்பலாம்.
மஹாபாரதக் கதைகளில் மேற்குறிப்பிட்டது போல் இடம் பெறும் மூடிய பெட்டி வடிவிலான ஒரு மாயக்கண்ணாடி திறந்த நிலையில் அதன் முன்னர் நிற்பவரின் மனதில் யார் இருக்கிறாரோ அவரைக் காட்டவல்லது. அதன் முன் பலராமன் நிற்கையில் அது அவரிடம் கதாயுதப் பயிற்சி பெற்ற பிரிய சீடனான துரியோதனனைக் காட்டும், கண்ணன் நிற்கையில் சகுனியைக் காட்டும். பின்னர் பலராமனின் மகளான வத்சலாவிடம் அதைக் கொடுக்க அவள் தனது தனியறையில் அதனைத் திறந்து பார்க்க அது அவளது மனதில் நின்ற அபிமன்யுவைக் காட்டும். அக்காட்சியில் இடம் பெறும் பாடல்:
நீ தானா என்னை நினைத்தது?
படம்: மாயா பஜார்
இயற்றியவர்: தஞ்சை டி.என். ராமையா தாஸ்
இசை: கண்டசாலா
பாடியோர்: கண்டசாலா, ஜிக்கி
ஆண்டு: 1957
நீ தானா? ஆ...
நீ தானா என்னை நினைத்தது? நீ தானா என்னை அழைத்தது?
நீ தானா என் இதயத்திலே நிலை தடுமாறிட உலவியது?
நீ தானா?
நீ தானே என்னை நினைத்தது? நீ தானே என்னை அழைத்தது?
நீ தானே என் இதயத்திலே நிலை தடுமாறிட உலவியது?
நீ தானே?
கனவினிலே ஒரு நினைவாகி - என்
நினைவினிலே ஒரு கனவாகி
கனவோ நினைவோ காண்பது மாயையோ?
கலவர மேவிடும் நிலவரமானேன்
நீ தானா என்னை நினைத்தது? நீ தானா என்னை அழைத்தது?
நீ தானா என் இதயத்திலே நிலை தடுமாறிட உலவியது?
நீ தானா?
கண்களில் நிலவும் காய்ந்திடவே இனி
என் மனதில் மணம் கமழ்ந்திடவே
கண்களில் நிலவும் காய்ந்திடவே இனி
என் மனதில் மணம் கமழ்ந்திடவே
கண்ணையும் மனதையும் கவர்ந்திடவே மெய்
காதலினாலே மகிழ்ந்திடவே
நீ தானே என்னை நினைத்தது? நீ தானே என்னை அழைத்தது?
நீ தானே என் இதயத்திலே நிலை தடுமாறிட உலவியது?
நீ தானே? நீ தானே?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக