வெள்ளி, 27 நவம்பர், 2009

சொல்லடி அபிராமி சொல்லடி அபிராமி

ஒரு பாடலில் இறுதிச் சொல்லை அடுத்த பாடலின் முதற் சொல்லாக வைத்துப் பல பாடல்களைக் கோவையாகப் பாடுவது அந்தாதி என அறியப் படுகிறது. இத்தகைய பாடல்களும் திருக்கடவூர் அபிராமி பட்டர் அருளிச் செய்த அபிராமி அந்தாதி மிகவும் பிரசித்தமானது.
பட்டர் ஆலயத்தில் மோன நிலையிலிருக்கையில் அப்போதைய சோழ நாட்டு மன்னன் இரண்டாம் சரபோஜி ராவ் போன்ஸ்லே ஆலய தரிசனத்துக்கு வர, யோக நிலையிருந்த பட்டர் மன்னரைக் கவனிக்கவில்லை. இது கண்ட மன்னன் அவரிடம் சென்று, "இன்று என்ன திதி?" என வினவ, பட்டர் அன்னையின் முகதரிசனத்தை மனதில் கண்டு "பௌர்ணமி" எனச் சொல்கிறார். அன்று உண்மையில் அமாவாசை. மன்னவன் மீண்டும், "இன்று பௌர்ணமியானால் இரவில் முழு நிலவு வானில் வர வேண்டுமல்லவா? நிலவு வருமா?" என்று கேட்க, "வரும்" என்று யோக நிஷ்டையிலிருந்தவாறே கூறி விடுகிறார் பட்டர்.

தன்னை அவர் பரிகாசம் செய்வதாகத் தவறாக எண்ணிய மன்னன், "இன்றிரவு முழு நிலவு வரவில்லையெனில் நீர் மரண தண்டனை பெறுவீர்" எனக் கூறிச் சென்றவன் பட்டரை அந்தரத்தில் தொங்கும் ஊஞ்சல் போன்றதொரு பலகையின் மேல் நிறுத்தி வைத்து அதன் கீழே நெருப்பு மூட்டி நிலவு வராமை கண்டதும் அவருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற ஆயத்தம் செய்துவிடுகிறான்.

அபிராமியை மனதில் துதித்து

உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம் உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம் மாதுளம் போது மலர்க்கமலை
துதிக்கின்ற மின்கொடி மென்கடிக் குங்கும தோயமென்ன
விதிக்கின்ற மேனி அபிராமி என்றன் விழுத்துணையே.

என்ற பாடலில் துவங்கி

குழையைத் தழுவிய கொன்றையந்தார் கமழ் கொங்கைவல்லி
கழையைப் பொருத திருநெடுந்தோளும் கருப்பு வில்லும்
விழையப் பொரு திறல் வேரியம் பாணமும் வெண் நகையும்
உழையைப் பொரு கண்ணும் நெஞ்சில் எப்போதும் உதிக்கின்றவே

என்ற பாடலில் முதல் பாடலின் முதல் வார்த்தை இறுதிப் பாடலின் இறுதி வார்த்தையாக முடியுமாறு நூறு பாடல்களைப் பாடுகிறார்.

விழிக்கே அருளுண்டு அபிராமவல்லிக்கு; வேதம் சொன்ன
வழிக்கே வழிபட நெஞ்சுண்டு எமக்கு; அவ்வழி கிடக்க
பழிக்கே சுழன்று, வெம்பாவங்களே செய்து, பாழ்நரகக்
குழிக்கே அழுந்தும் கயவர்தம்மோடு என்ன கூட்டு இனியே?

என்ற 79-ஆம் பாடலைப் பாடுகையில் அம்பிகைத் தன் காதில் அணிந்திருந்த ஸ்ரீசக்ர ரூபமாகிய 'தாடங்கம்' என்னும் திருத்தோட்டினை எடுத்து விண்ணில் வீச அது பூரண சந்திரனாகத் தோற்றமளிக்கிறது. தமிழ்த் திரையில் இக்காட்சியை அருமையாகப் படமெடுத்துள்ளனர். இக்காட்சியில் மேற் சொன்ன அபிராமி அந்தாதி பாடல்களுக்கு பதிலாகக் கவிஞர் கண்ணதாசன் அபிராமி அந்தாதியின்

மணியே மணியின் ஒளியே ஒளிரும் அணிபுனைந்த வணியே
அணியும் அணிக்கழகே அணுகாதவர்க்குப் பிணியே
பிணிக்கு மருந்தே அமரர் பெரும் விருந்தே
பணியேன் ஒருவரை நின் பத்மபாதம் பணிந்த பின்னே

என்ற வேறொரு பாடலை முதல் பத்தியாகக் கொண்டு எழுதிய ஜனரஞ்சகமான பாடல் இடம் பெறுகிறது.

அன்னையின் திருப்பெயரைச் சொல்லும் அப்பாடலும் அருமையானதே.

சொல்லடி அபிராமி சொல்லடி அபிராமி

படம்: ஆதி பராசக்தி
இயற்றியவர்ள: கவிஞர் கண்ணதாசன்
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்

மணியே மணியின் ஒளியே ஒளிரும் அணிபுனைந்த வணியே
அணியும் அணிக்கழகே அணுகாதவர்க்குப் பிணியே
பிணிக்கு மருந்தே அமரர் பெரும் விருந்தே
பணியேன் ஒருவரை நின் பத்மபாதம் பணிந்த பின்னே

சொல்லடி அபிராமி சொல்லடி அபிராமி - வானில்
சுடர் வருமோ எனக்கு இடர் வருமோ?
பதில் சொல்லடி அபிராமி வானில்
சுடர் வருமோ எனக்கு இடர் வருமோ?
பதில் சொல்லடி அபிராமி
நில்லடி முன்னாலே நில்லடி முன்னாலே - முழு
நிலவினைக் காட்டு உன் கண்ணாலே

சொல்லடி அபிராமி

பல்லுயிரும் படைத்த பரமனுக்கே - சக்தி
படைத்ததெல்லாம் உன்தன் செயலல்லவோ?
பல்லுயிரும் படைத்த பரமனுக்கே - சக்தி
படைத்ததெல்லாம் உன்தன் செயலல்லவோ? - நீ
சொல்லுக்கெல்லாம் சிறந்த சொல்லல்லவோ? - நீ
சொல்லுக்கெல்லாம் சிறந்த சொல்லல்லவோ? - இந்த
சோதனை எனக்கல்ல உனக்கல்லவோ?

சொல்லடி அபிராமி

வாராயோ ஒரு பதில் கூறாயோ? - நிலவென
வாராயோ அருள் மழை தாராயோ?
வாராயோ ஒரு பதில் கூறாயோ? - நிலவென
வாராயோ அருள் மழை தாராயோ?

வானம் இடிபடவும் பூமி பொடிபடவும்
நடுவில் நின்றாடும் வடிவழகே
கொடிகளாட முடிகளாட குடிபடை
எழுந்தாட வரும் கலையழகே
பிள்ளை உள்ளம் துள்ளும் வண்ணம் பேரிகை
கொட்டி வர மத்தளமும் சத்தமிட

வாராயோ ஒரு பதில் கூறாயோ நிலவென
வாராயோ அருள் மழை தாராயோ?

செங்கையில் வண்டு கலிம் கலிம் என்று
ஜெயம் ஜெயம் என்றாட - இடை
சங்கதமென்று சிலம்பு புலம்பொடு
தண்டை கலந்தாட - இரு
கொங்கை கொடும்பகை வென்றனமென்று
குழைந்து குழைந்தாட - மலர்ப்
பங்கயமே உனைப் பாடிய பிள்ளை முன்
நிலவு எழுந்தாட
விரைந்து வாராயோ எழுந்து வாராயோ
கனிந்து வாராயோ

காளி பயங்கரி சூலி மதாங்கினி கண்களில் தெரிகின்றாள்
கண்கள் சிவந்திடும் வண்ணம் எழுந்தொரு காட்சியைத் தருகின்றாள்
வாழிய மகன் இவன் வாழிய என்றொரு வாழ்த்தும் சொல்கின்றாள்
வானகம் வையகம் எங்கணுமே ஒரு வடிவாய்த் தெரிகின்றாள்
அன்னை தெரிகின்றாள் என் அம்மை தெரிகின்றாள்
அன்னை தெரிகின்றாள் என் அம்மை தெரிகின்றாள்
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக