வெள்ளி, 27 நவம்பர், 2009

கல்யாண நாள் பார்க்கச் சொல்லலாமா?

வாழ்க்கையில் நாம் தொடர்ந்து பல பண்டிகைகளையும் வைபவங்களையும் அனைவருடன் கொண்டாடி மகிழ்கிறோம். மனித வாழ்வில் மிகவும் இன்றியமையாத வைபவம் திருமணமாகும். "இல்லறமல்லது நல்லறமன்று" என ஔவை மூதாட்டி மொழிந்தது போலவே, "உரிய வயதில் திருமணம் செயது கொள்ளாதவன் ஒரு சமூக விரோதியாக மாற வாய்ப்புள்ளது" என கிரேக்கப் பேரறிஞர் பிளேட்டோ கூறியுள்ளதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன்.
திருமணம் ஒருவருக்கு வாழ்க்கைத் துணையை அமைத்துக் கொடுப்பதால் ஏனைய அனைத்து வைபவங்களைக் காட்டிலும் அதிகப் படியான அக்கரையுடனும் முன்யோசனையுடனும் தீர்க்கமாக ஆலோசித்து ஆராய்ந்து வாழ்க்கைத் துணையை அமைத்துக் கொள்வது இன்றியமையாதது. இத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக மேற்கொள்ளாமல் அவசரத்தினால் முக்கியமான விஷயங்களை கவனிக்கத் தவறி, திட்டமிடாது மணவாழ்க்கையை அமைத்துக் கொள்வோர் திருமணத்திற்குப் பின்னர் மன நிறைவான வாழ்க்கையை வாழ்வர் என்பதற்கு உத்தரவாதம் கிடையாது.

ஒருவர் தனது குடும்பத்தாருக்கென சொந்தமாக ஒரு வீட்டைக் கட்டுகையில் எவ்வாறு அனைவரது தேவைகளையும் மனதில் கொண்டு அவற்றைப் பூர்த்தி செய்யத்தக்க வகையில் திட்டமிட்டு செயல்படுகிறாரோ அதே போல் தனது புத்திரர்கள் மற்றும் புத்திரிகளுக்குத் திருமணம் செய்து வைக்கையிலும் திட்டமிட்டு செயல்பட வேண்டும்.

இதனைக் கருத்தில் கொண்டே, "வீட்டைக் கட்டிப் பார் கல்யாணத்தைப் பண்ணிப் பார்." என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளனர். திருமணத் திட்டத்தில் மிகவும் முக்கியமானது திருமண நாள் குறித்தல். திருமணம் நடைபெறும் நாள் திருமணத்திற்கு வருவோரும் வாழ்த்துச் சொல்வோரும் நல்ல நாள் எனக் கருதும் நாளாக இருக்க வேண்டும். திருமண நாள் சரியாகக் குறிக்கவில்லையெனில் சில அன்பர்களது அதிருப்தியைப் பெற நேருவதால் அங்கே மகிழ்ச்சி குறைய வாய்ப்புள்ளது.

திருமண நாள் குறித்த பின்னர் பெற்றோர், உற்றார், உறவினர் அனைவரது மனங்களும் அந்நாள் என்று வரும் என்று எதிர்பார்த்துக் காத்திருப்பது ஒரு சுகமான அனுபவம். அதனிலும் மேலாக மணமகனுக்கும் மணமகளுக்கும் விளையும் இத்தகைய எதிர்பார்ப்பு பல கனவுகளை அவர்கள் மனதில் உருவாக்கி கனவுலகில் சஞ்சாரம் செய்ய வைப்பது இயல்பு.

அது சரி, ஒருவர் மேல் ஒருவர் காதல் கொண்ட ஆண் மகனும் பெண் மகளும் தமது திருமணத்துக்கு நாள் குறிப்பது குறித்த எண்ணங்களை ஒருவரோடொருவர் பரிமாறிக்கொள்ளும் அனுபவம் எப்படி இருக்கும்?

கல்யாண நாள் பார்க்கச் சொல்லலாமா?

படம்: பறக்கும் பாவை
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா
ஆண்டு: 1966

கல்யாண நாள் பார்க்கச் சொல்லலாமா? - நாம்
கையோடு கை சேர்த்துக் கொள்ளலாமா?
செல்லாத இடம் நோக்கிச் செல்லலாமா?
சிந்தாமல் சிதறாமல் அள்ளலாமா?

கல்யாண நாள் பார்க்கச் சொல்லலாமா? - நாம்
கையோடு கை சேர்த்துக் கொள்ளலாமா?

வண்ண மணி மண்டபத்தில் துள்ளி விழுவோமா?
மந்திரத்தில் கண் மயங்கிப் பள்ளி கொள்ளுவோமா?
சொன்னவர்கள் சொன்னபடி அள்ளி வருவோமா?
தொட்டு வரும் தென்றலுக்கு தூது விடுவோமா?

கல்யாண நாள் பார்க்கச் சொல்லலாமா? - நாம்
கையோடு கை சேர்த்துக் கொள்ளலாமா?

கண்ணாடி பார்த்தபடி கதை படிப்போமா?
பொன்னான கன்னங்களில் படம் வரைவோமா?
நடந்ததை நினைத்தபடி ரசித்திருப்போமா?
நாளை இன்னும் அதிகம் என்று பிரிந்திருப்போமா?

கல்யாண நாள் பார்க்கச் சொல்லலாமா? - நாம்
கையோடு கை சேர்த்துக் கொள்ளலாமா?

சந்திரனைத் தேடிச் சென்று குடியிருப்போமா?
தமிழுக்குச் சேதி சொல்லி அழைத்துக் கொள்வோமா?
அந்திப் பட்டு வானத்திலே வலம் வருவோமா?
அங்கும் ஒரு ராஜாங்கம் அமைத்திருப்போமா?

கல்யாண நாள் பார்க்கச் சொல்லலாமா? - நாம்
கையோடு கை சேர்த்துக் கொள்ளலாமா?
செல்லாத இடம் நோக்கிச் செல்லலாமா?
சிந்தாமல் சிதறாமல் அள்ளலாமா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக