அன்பு நண்பர்களே,
இவ்வுலக இன்பங்களைத் துய்க்கும் ஆசையை மனிதனுக்குள் வளர்ப்பது அடிப்படையில் அவன் கண்ணால் காணும் காட்சிகள். அவ்வாறு "கண்டதே காட்சி கொண்டதே கோலம்" எனும் விதத்தில் வாழ்வதைத் தவிர்த்து தன் பகுத்தறிவை உபயோகித்து விபரீத ஆசைகளை அடக்கி நல்வழியில் நடக்காதவன் வாழ்வில் மாபெரும் துன்பங்களை அனுபவிப்பது உறுதி. இவ்வுண்மையை விளக்கப் போதுமான ஆதாரங்கள் சரித்திரங்கள் வாயிலாகவும் கதைகள், காவியங்கள் வாயிலாகவும் கிடைக்கின்றன. மனத்தின் ஆசைகளை அடக்கி ஒழுக்க சீலர்களாய் வாழ்ந்தோர் உன்னத நிலையை அடைவதையும் நாம் கண்கூடாகக் காண்கின்றோம்.
"வாழ்க்கை வாழ்வதற்கே", "இருப்பது சில நாள் அனுபவிப்போமே எது தான் குறைந்து விடும்?" என்பன போன்ற சந்தர்ப்பவாதத் தத்துவங்களைப் பேசிக்கொண்டு இளமையில் சிற்றின்பத்தை நாடிச் செல்வோர் பிற்காலத்தில் அதனால் ஏற்பட்ட கேட்டினால் மனம் வருந்தி உருக்குலைந்து போனதற்கும் நிறைய ஆதாரங்கள் உள்ளன.
வாழ்க்கை நாம் வாழ்ந்தே தீர வேண்டும், வேறு வழி கிடையாது, ஏனெனில் உலகம் நம்மைக் கேட்டு இயங்கவில்லை. நம்மைக் கேட்டு நாம் பிறக்கவில்லை. நம் செயல்கள், சொற்கள், வாழ்க்கை நிகழ்ச்சிகள் அனைத்தும் சூழ்நிலைகளைக் கொண்டே அமைகின்றன. அத்தகைய சூழ்நிலைகள் நல்லவையாகவும் நிரந்தர இன்பம் தருவனவாகவும் இருப்பதற்கு மனிதன் தனது எண்ணத்தையும் நோக்கத்தையும் அதற்கேற்றவாறு அமைத்துக்கொண்டு வாழ வேண்டும். அவ்வாறு நல்வாழ்வு வாழும் மனிதன் அனைவராலும் போற்றப்படும் உன்னத நிலையடைவது உறுதி.
இக்கருத்தை வலியுறுத்தும் இனிய பாடல்:
கேட்டு மகிழ: கண் போன போக்கிலே கால் போகலாமா?
திரைப்படம்: பணம் படைத்தவன்
பாடியவர்: T.M. சௌந்தரராஜன்
இயற்றியவர்: கவிஞர் வாலி
இசை: மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி
கண் போன போக்கிலே கால் போகலாமா?
கால் போன போக்கிலே மனம் போகலாமா?
கண் போன போக்கிலே கால் போகலாமா?
கால் போன போக்கிலே மனம் போகலாமா?
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா?
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா?
மனிதன் போன பாதையை மறந்து போகலாமா?
மனிதன் போன பாதையை மறந்து போகலாமா?
கண் போன போக்கிலே கால் போகலாமா?
கால் போன போக்கிலே மனம் போகலாமா?
நீ பார்த்த பார்வைகள் கனவோடு போகும்
நீ சொன்ன வார்த்தைகள் காற்றோடு போகும்
நீ பார்த்த பார்வைகள் கனவோடு போகும்
நீ சொன்ன வார்த்தைகள் காற்றோடு போகும்
ஊர் பார்த்த உண்மைகள் உனக்காக வாழும்
உணராமல் போவோர்க்கு உதவாமல் போகும்
உணராமல் போவோர்க்கு உதவாமல் போகும்
கண் போன போக்கிலே கால் போகலாமா?
கால் போன போக்கிலே மனம் போகலாமா?
பொய்யான சில பேர்க்குப் புது நாகரீகம்
புரியாத பல பேர்க்கு இது நாகரீகம்
முறையாக வாழ்வோர்க்கு எது நாகரீகம்
முன்னோர்கள் சொன்னார்கள் அது நாகரீகம்
முன்னோர்கள் சொன்னார்கள் அது நாகரீகம்
கண் போன போக்கிலே கால் போகலாமா?
கால் போன போக்கிலே மனம் போகலாமா?
திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்?
வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம்?
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்
இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்
கால் போன போக்கிலே மனம் போகலாமா?
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக