அன்பு நண்பர்களே,
தாயோடறுசுவை போம் தந்தையோடு கல்விபோம்
சேயோடு யாம் பெற்ற செல்வம்போம் மாய வாழ்வு
உற்றாருடன் போம் உடன் பிறப்பால் தோள் வலி போம்
பொற்றாலியோடு எவையும் போம்
என்றாள் ஔவை மூதாட்டி.
ஒருவன் உலக வாழ்வை அனுபவிக்க அடிப்படையானவள் தாய், வாழ வழிகாட்டுபவன் தந்தை. இதனாலேயே இந்திய மக்கள் அனைவரும் சுதந்திரமாய் வாழ வழிகாட்டிய மஹாத்மா தேசத்தின் தந்தை எனப் போற்றப்படுகிறார்.
சிறு குழந்தைகள் தம் தேவைகளைத் தந்தையரிடம் கேட்டுப் பெறுவது வழக்கம். அவர்களது உலகம் ஒரு சின்னஞ்சிறு உலகம். வளர்ந்து பெரியவர்களாகி, தாய் தந்தையரை அல்லது அவர்களது ஆதரவை இழந்த மானிடர்கள் தங்கள் தேவைகளை யாரிடம் கேட்பது? ஏற்பது இகழ்ச்சி என்பதால் மற்ற மனிதரிடம் கேட்டுப் பெறுவதற்கு நாம் ஒவ்வொருவரும் மிகவும் தயங்குகிறோம். ஆனால் நம் அனைவரையும் ரக்ஷித்துக் காக்கும் ஆண்டவனிடம் கேட்டுப் பெறத் தயங்க வேண்டியதில்லை.
ஆண்டவன் எங்கு இருக்கிறான் என்பது தெரியாவிடினும் ஆண்டவன் என ஒருவன் எங்கோ இருக்கின்றான் அல்லது எங்கும் இருக்கின்றான் என்ற உள்ளுணர்வு நம் ஒவ்வொருவரிடமும் உண்டு, ஆண்டவன் என ஏதும் கிடையாது என மறுதலித்துப் பேசும் நாத்திகரைத் தவிர. அத்தகைய நாத்திகரும் மனம் ஒப்பி வழிபடும் தெய்வங்கள் அவர்கள் மனதில் உண்டு.
நாகூர் ஹனீபா அவர்கள் பாடிய, "இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லையென்று சொல்லுவதில்லை" என்பது நாம் அனைவரும் கேட்டுள்ள இனிய ஒரு பாடல்.
நாம் அனைவரும் நம் தேவைகளைக் கேட்டுப்பெறத்தக்க இறைவன் நம் அனைவருக்கும் தந்தையல்லவா?
கேட்டு மகிழ: பிள்ளைக்குத் தந்தை ஒருவன்
திரைப்படம்: பார்த்தால் பசிதீரும்
பாடியவர்: T.M. சௌந்தரராஜன்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: மெல்லிசை மன்னர் M.S. விஸ்வநாதன்
பிள்ளைக்குத் தந்தை ஒருவன் நம்
எல்லோருக்கும் தந்தை இறைவன்
பிள்ளைக்குத் தந்தை ஒருவன் நம்
எல்லோருக்கும் தந்தை இறைவன் - நீ
ஒருவனை நம்பி வந்தாயோ? - இல்லை
இறைவனை நம்பி வ்ந்தாயோ? - நீ
ஒருவனை நம்பி வந்தாயோ? - இல்லை
இறைவனை நம்பி வ்ந்தாயோ?
பிள்ளைக்குத் தந்தை ஒருவன் நம்
எல்லோருக்கும் தந்தை இறைவன்
தாயாரைத் தந்தை மறந்தாலும் - தந்தை
தானென்று சொல்லாத போதும்
தாயாரைத் தந்தை மறந்தாலும் - தந்தை
தானென்று சொல்லாத போதும்
தானென்று சொல்லாத போதும்
ஏனென்று கேட்காமல் வருவான் - நம்
எல்லோருக்கும் தந்தை இறைவன் இறைவன்
பிள்ளைக்குத் தந்தை ஒருவன் - நம்
எல்லோருக்கும் தந்தை இறைவன்
உள்ளோர்க்கு செல்வங்கள் சொந்தம் - அது
இல்லார்க்கு உள்ளங்கள் சொந்தம்
உள்ளோர்க்கு செல்வங்கள் சொந்தம் - அது
இல்லார்க்கு உள்ளங்கள் சொந்தம்
இல்லார்க்கு உள்ளங்கள் சொந்தம்
இல்லாத இடம் தேடி வருவான் - நம்
எல்லோருக்கும் தந்தை இறைவன் இறைவன்
பிள்ளைக்குத் தந்தை ஒருவன் - நம்
எல்லோருக்கும் தந்தை இறைவன் - நீ
ஒருவனை நம்பி வந்தாயோ? - இல்லை
இறைவனை நம்பி வ்ந்தாயோ?
பிள்ளைக்குத் தந்தை ஒருவன் - நம்
எல்லோருக்கும் தந்தை இறைவன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக