வெள்ளி, 13 நவம்பர், 2009

வடிவேலும் மயிலும் துணை

அம்பிகாபதி கதை கற்பனையேயல்லாது உண்மையல்ல என்று சிலர் ஆராய்ச்சி செய்து கண்டதாகக் கூறுகிறார்கள். கதையோ, கற்பனையோ எவ்வாறிருப்பினும் அதிலுள்ள இலக்கியச் சுவையை அனுபவித்தல் இனிது.
கம்பர் குலோத்துங்க சோழனின் அவைக்களப் புலவர்களுள் ஒருவராக இருந்ததாகக் கதை கூறுகிறது. அதே சபையில் ஒட்டக்கூத்தர் தலைமைப் புலவராக வீற்றிருந்ததாகவும் கூறுகிறது. ஒட்டக்கூத்தரின் இயல்பு பிற புலவர்களின் கவிதையில் குறை கூறுவதாகும். அவ்வாறிருக்க கம்பரின் மகன் அம்பிகாபதி மன்னன் மகள் அமராவதியைக் காதலிப்பது அவருக்குப் பிடிக்கவில்லை. அதனால் அவர்களது காதலை மன்னன் அறிய வைக்கப் பலவாறாக முயற்சித்தார். ஒரு முறை கம்பரும் அம்பிகாபதியும் ஒட்டக்கூத்தர் மற்றும் குலோத்துங்கனுடன் உரையாடிக்கொண்டிருக்கையில் அமராவதி அவர்களுக்குப் பருக பானங்களை ஒரு தட்டில் சுமந்து வருகிறாள். அவளது அழகில் மெய்ம்மறந்த அம்பிகாபதி தன்னை மறந்து காதல்ரசம் ததும்பும் பாடலொன்றைப் பாடத் துவங்கி,

இட்டவடி நோவ எடுத்த அடி கொப்பளிக்க வட்டில் சுமந்து மருங்கசைய

என்று இரு வரிகள் பாடிய நிலையி்ல், ஏற்படவிருக்கும் அபாயத்தை உணர்ந்த கம்பர்

- கொட்டிக்
கிழங்கோ கிழங்கென்று கூவுவாள் நாவில்
வழங்கோசை வையம் பெரும்

என்று இறுதி அடிகளைப் பாடிப் பாடலை நிறைவு செய்வதாகக் கதையில் வருகிறது. "கொட்டிக் கிழங்கென்று நாங்கள் யாரும் கேள்விப்பட்டதில்லையே" என ஒட்டக்கூத்தர் சமயத்தில் அவர்களை இக்கட்டில் மாட்டிட முயலுகையில் கம்பர் கலைவாணியை மனதில் தியானிக்க, கலைவாணி ஒரு மூதாட்டி உருவில் அரண்மனை வாசலில் வந்து நின்று, "கொட்டிக் கிழங்கோ கிழங்கு" என்று கூவுகிறாள். அக்கிழவியை உள்ளே அழைத்து அவளது கூடையில் இருந்த கொட்டிக்கிழங்குகளை மன்னனும் ஒட்டக்கூத்தரும் கண்டதால் நிகழவிருந்த விபரீதத்திலிருந்து கம்பரும் அம்பிகாபதியும் தப்பிக்கின்றனர்.

அதன் பின்னர் அம்பிகாபதி அமராவதி காதல் விவகாரம் மன்னன் காதுக்கு எட்டவே விசாரணைக்கு உத்தரவிடுகிறான் மன்னன். விசாரணையின் போது இரு தரப்பு நியாயங்களையும் கேட்ட பின் மன்னன் ஒட்டக்கூத்தரிடம் பொறுப்பை ஒப்படைக்க, அவர் ஒரு நிபந்தனை விதிக்கிறார். அதன்படி அம்பிகாபதி நூறு பாடல்களை ஓரே சமயத்தில் இயற்றி சபையில் தொடர்ந்து பாட வேண்டும், அவற்றுள் காதல் ரசமுள்ள பாடல் ஒன்றும் இருக்கக் கூடாது. அவ்வாறு பாடி அவன் தன் புலமையை நிரூபித்தால் அவன் அமராவதியை மணக்கலாம், தவறினால் மரண தண்டனை எனத் தீர்ப்பளிக்கிறார்.

அவ்வாறே அம்பிகாபதி பாட, அரசரும், ஒட்டக்கூத்தர் உள்ளிட்ட பிறரும் சபையில் அமர்ந்து கேட்கையில், திரைமறைவில் அமர்ந்து இதைக் கேட்கும் அமராவதி நூறு பாடல்களை நூறு மலர்களை ஒரு தட்டிலிருந்து இன்னொரு தட்டில் போட்டவாறு எண்ணுகிறாள். நூறாவது பாடல் முடிந்ததும் அவள் ஆவல் மிகுதியால் திரையை விலக்கி அம்பிகாபதியை நோக்கி வர, அவளைக் கண்ட மாத்திரத்தில் அம்பிகாபதி தன்னை மறந்து,

சற்றே பருத்த தனமே துவளத் தரள வடந்
துற்றேயசையக் குழையூசலாடத் துவர்கொள் செவ்வாய்
நற்றேனொழுக நடன சிங்கார நடையழகின்
பொற்றேரிருக்கத் தலையலங்காரம் புறப்பட்டதே

எனக் காதல் ரசம் சொட்டும் பாடலொன்றைப் பாடிவிடுகிறான். அவன் பாடிய நூறு பாடல்களுள் முதலாவது காப்புச் செய்யுளாதலால் அது கணக்கிலெடுத்துக் கொள்ளப் பட மாட்டாது எனக் கூறி ஒட்டக்கூத்தர் அவனுக்கு மரண தண்டனை வழங்குகிறார்.

ஒட்டக்கூத்தராக நடிக்கும் எம்.என். நம்பியார் வெளுத்துக்கட்டும் இக்காட்சியில் சிவாஜி கணேசனான அம்பிகாபதி பாடும் பாடல்:

வடிவேலும் மயிலும் துணை

திரைப்படம்: அம்பிகாபதி
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
இசை: ஜி. ராமநாதன்

வடிவேலும் மயிலும் துணை
வடிவேலும் மயிலும் துணை - சொல்
வளமார் செந்தமிழால் சந்ததமும் கந்தனைப் பாட
வடிவேலும் மயிலும் துணை

நடராஜன் அருள்பாலன் நான்மறை தொழும் சீலன்
நடராஜன் அருள்பாலன் நான்மறை தொழும் சீலன்
தடமேவும் பொழில் சூழும் தணிகைவாழும் பரமஞான குருபரன்
வடிவேலும் மயிலும் துணை

தமிழ்மாலை தனைச் சூடுவான்
தமிழ்மாலை தனைச் சூடுவான் - கொன்றைத்
தளிர்மாலை மலர் மாலை ஜெபமாலையுடன் சந்தத்
தமிழ்மாலை தனைச் சூடுவான் - கொன்றைத்
தளிர்மாலை மலர் மாலை ஜெபமாலையுடன் சந்தத்
தமிழ்மாலை தனைச் சூடுவான்

தாபமிகு வெப்பு வாதமொடு பித்த மான பிணி மொய்த்து உடம்போடு
தாபமிகு வெப்பு வாதமொடு பித்த மான பிணி மொய்த்து உடம்போடு
சாருமுயிர் துன்ப சாகரமுழன்று சாதனை இழந்து வருந்தாவுன்
சாருமுயிர் துன்ப சாகரமுழன்று சாதனை இழந்து வருந்தாவுன்
தாளையளித்திட வேணுமெனத் துதிபாடருணக்கிரி நாதனழைத்திட
தயவுடன் இசைந்து அருள்மழை பொழிந்து
முத்தைத்தரு பத்தித் திருநகையென
முதலடி உரைத்த தழைத்த கருணையை
நினைந்து நினைந்து கவிமலர் தொடுத்த

தமிழ்மாலை தனைச் சூடுவான் - கொன்றைத்
தளிர்மாலை மலர் மாலை ஜெபமாலையுடன் சந்தத்
தமிழ்மாலை தனைச் சூடுவான்

சற்றே சரிந்த குழலே துவளத் தரளவடம்
துற்றே யசையக் குழையூசலாட
சற்றே சரிந்த குழலே துவளத் தரளவடம்
துற்றே யசையக் குழையூசலாட துவர்கொள் செவ்வாய்
நற்றேனொழுக நடன சிங்கார நடையழகின்
பொற்றேரிழுக்கத் தலையலங்காரம் புறப்பட்டதே
தலையலங்காரம் புறப்பட்டதே

2 கருத்துகள்:

  1. இப்பாடல் என்ன ராகத்தில் பாடப்படுகிறது?

    பதிலளிநீக்கு
  2. இந்தப் பாடலில் மணிரங்கு (அனுபல்லவி வரை), காம்போதி (தனைச்சூடுவான் வரை), கேதாரகௌளை (சற்றே....ஊசலாட) மற்றும் சாவேரி (துவர்கொள்....புறப்பட்டதே) ராகங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

    பதிலளிநீக்கு