வெள்ளி, 13 நவம்பர், 2009

காவிரிப் பெண்ணே வாழ்க

அன்பு நண்பர்களே,
கற்புக்கரசி என்றும் மாதர் குல மாணிக்கம் என்றும் பலவிதமாகப் பெண்களைப் புகழ்ந்து பேசும் மானுடர்கள் கண்ணகியையும், நளாயினியையும் உதாரணமாகக் காட்டி அவர்களது கணவன்மார்கள் ஒழுக்கம் தவறியவர்களாகச் சித்தரித்தது ஆணாதிக்க மனோபாவத்தைக் காட்டுவதுபோலவே நமக்குத் தெரிகிறது.

கற்பு நெறியென்று சொல்லவந்தார் இரு
கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்
வற்புறுத்திப் பெண்ணைக் கட்டிக் கொடுக்கும்
வழக்கத்தைத் தள்ளி மிதித்திடுவோம்

என்று இத்தகைய மாந்தரின் மனங்களிலே ஆழத் தைக்குமாறு கவியிருப்பாணி கொண்டு அறைந்தார் அமரகவி பாரதி.

மலரும் கொடியும் பெண்ணென்பார்
மதியும் நதியும் பெண்ணென்பார்

என்பது போல் ஆடவர் இவ்வுலகில் உள்ள இன்பம் தரும் பொருள்களெல்லாம் பெண்களுக்கொப்பானவையாகக் கூறுவது பெண்களை வெறும் போகப் பொருளாகவே கருதும் மனப்பான்மையைக் காட்டுவதாகத் தோன்ற இடமளிக்கிறது.

சிலப்பதிகாரத்தில் நடனமாதான மாதவி தனது நாட்டியத்தைக் காண வரும் ஆண்களிடையே வீசிய மாலை அவ்வமயம் அங்கிருந்த கோவலனின் கழுத்தில் விழவும் அதனால் அவள் தன் குல வழக்கப்படி கோவலனுடன் கூடி மகிழ்வதாகவும் சித்தரிக்கப் பட்டுள்ளது. இவ்வாறு மகிழ்ந்திருக்கும் கோவனும் மாதவியும் காவிரி நதியினை வாழ்த்திப் பாடுகையில் அதில் ஆடவரின் மேற்குறிப்பிட்ட குறைபாட்டை மாதவி சுட்டிக்காட்டுவதாக அமைந்துள்ள ஒரு இனிய பாடல்:

கேட்டு மகிழ: காவிரிப் பெண்ணே வாழ்க

திரைப்படம்: பூம்புஹார்
பாடியவர்கள்: சௌந்தரராஜன், சுசீலா
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
திரைக்கதை வசனம்: கலைஞர் மு. கருணாநிதி

காவிரிப் பெண்ணே வாழ்க காவிரிப் பெண்ணே வாழ்க - உன்தன்
காதலன் சோழ வேந்தனும் வாழ்க
காவிரிப் பெண்ணே வாழ்க - உன்தன்
காதலன் சோழ வேந்தனும் வாழ்க
காவிரிப் பெண்ணே வாழ்க நீ வாழ்க பெண்ணே வாழ்க

தென்குலப் பெண்ணரைத்த மஞ்சளில் குளித்தாய்
திரும்பிய திசையெல்லாம் பொன்மணி குவித்தாய்

நடையினில் பரத கலையினை வடித்தாய்
நடையினில் பரத கலையினை வடித்தாய்
நடையினில் பரத கலையினை வடித்தாய்
நறுமலர் உடையால் மேனியை மறைத்தாய்

காவிரிப் பெண்ணே வாழ்க நீ வாழ்க பெண்ணே வாழ்க

உன்னரும் கணவன் கங்கையை அணைத்து
கன்னி குமரியையும் தன்னுடன் இணைத்தான்
உன்னரும் கணவன் கங்கையை அணைத்து
கன்னி குமரியையும் தன்னுடன் இணைத்தான்

ஆயினும் உன் நெஞ்சில் பகையேதும் இல்லை
அதுவே மங்கையரின் கற்புக்கோர் எல்லை

ஆயிரம் வழிகளில் ஆடவர் செல்வார்
அதுவே கற்பென்று நம்மிடம் சொல்வார்
ஆயிரம் வழிகளில் ஆடவர் செல்வார்
அதுவே கற்பென்று நம்மிடம் சொல்வார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக