தத்துவ மழையில் நனைந்து சலித்த வேளையில் சற்றே ஓதுங்கி நின்று வாழ்வை மலரவைக்கும் சுகங்களில் தலையாயதான காதல் கடல் கரையோரம் இளைப்பாரலாமே.
காதல் காதல் காதல் காதற்போயின் காதற்போயின் சாதல் சாதல் சாதல் என்றார் பாரதியார். காதல் என்பது எது வரை கல்யாண காலம் வரும் வரை என்றார் அவருக்குப் பின்னர் வந்த வேறொரு புலவர். ஆனால் நோயில்லா உடல் இருந்தால் நூறு வரை காதல் வரும் என்றார் கவிஞர் கண்ணதாசன். காதலுக்கு ஜாதியில்லை மதமும் இல்லையே கண்கள் பேசும் வார்த்தையிலே பேதமில்லையே என்றும் அவர் சொன்னார்.
அரசகுமாரி ஒருத்தி தன் காதலை அரசாங்கத்தில் தளபதியாகப் பணியாற்றும் கதாநாயகனிடம் தெரிவிக்கிறாள். அவன் தங்கள் காதல் நிறைவேறாது, ராஜாவின் மகள் தன்னை நெருங்கலாகாது என்று ஒதுங்குகையில் அவளோ காதலுக்கு முன்னர் நாடும் மணிமுடியும் மற்றெல்லாமும் தூசுக்குச் சமம் என்றுரைத்து அவன் மனதில் இடம் கேட்கிறாள்.
இதோ அந்த இனிய பாடல் பி.பி. ஸ்ரீனிவாஸ், பி. சுசீலா குரலில்:
ரோஜா மலரே ராஜகுமாரி
ரோஜா மலரே ராஜகுமாரி
ஆசைக் கிளியே அழகிய ராணி
அருகில் வரலாமா? வருவதும் சரிதானா?
உறவும் முறை தானா?
வாராய் அருகே மன்னவன் நீயே
காதல் சமமன்றோ வேதம் இலையன்றோ?
காதல் நிலையன்றோ?
ஏழையென்றாலும் ராஜகுமாரன்
ராஜா மகளின் காதல் தலைவன்
உண்மை இதுவன்றோ? உலகின் முறையன்றோ?
என்றும் நிலையன்றோ?
வானத்தின் மீதே பறந்தாலும்
காக்கை கிளியாய் மாறாது
கோட்டையின் மேலே நின்றாலும்
ஏழையின் பெருமை உயராது
ஓடியலைந்து காதலில் கலந்து
நாட்டை இழந்தவர் பலரன்றோ?
மன்னவர் நாடும் மணிமுடியும்
மாளிகை வாழ்வும் தோழியரும்
பஞ்சணை சுகமும் பால் பழமும்
படையும் குடையும் சேவகரும்
ஒன்றாய் இணையும் காதலர் முன்னே
கானல் நீர் போல் மறையாதோ?
பாடும் பறவைக் கூட்டங்களே
பச்சை ஆடைத் தோட்டங்களே
விண்ணில் தவழும் ராகங்களே
வேகம் போகும் மேகங்களே.
ஓர் வழி கண்டோம் ஒருமனமானோம்
வாழிய பாடல் பாடுங்களே
ரோஜா மலரே ராஜகுமாரி
ஏழையென்றாலும் ராஜகுமாரன்
உண்மை இதுவன்றோ? உலகின் முறையன்றோ?
என்றும் நிலையன்றோ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக