வெள்ளி, 13 நவம்பர், 2009

சும்மா இருந்தா சோத்துக்கு நஷ்டம்

"சும்மா இருப்பவன் மனது பேயின் பட்டரை" என்று ஒரு ஆங்கிலப் பழமொழி உண்டு. நாம உண்ணும் உணவு, உடுக்கும் உடை மற்ற்ம் இவ்வுலக வாழ்வில் அனுபவிக்கும் சுகங்கள் யாவும் நமது உழைப்பால் ஈட்டிய பொருளைக் கொண்டு அடைதலே நமக்கு சமுதாயத்தில் உரிய மரியாதையைத் தரும்.

பொருளில்லார்க்கு இவ்வுலகில்லை எனும் பழமொழி பிரசித்தம்.

கல்லானேயானாலும் கைப்பொருளொன்றுண்டாயின்
எல்லாருஞ் சென்றங் கெதிர்கொள்வர் இல்லானை
இல்லாளும் வேண்டாள் மற்றீன்றெடுத்த தாய் வேண்டாள்
செல்லாதவன் வாயிற்சொல்

எனும் ஔவையின் பாடலும் நாம் அறிந்ததே.

ஆதாரம் சக்தி என்றே அருமறைகள் கூறும்
யாதானும் தொழில் புரிவோம் யாதுமவள் தொழிலாம்

என்று பாரதியார் கூறியபடி எத்தொழிலும் எவ்விதத்திலும் குறைவன்று.

கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்
கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்
எத்தொழில் எதுவும் தெரியாமல்
இருப்பது உனக்கே சரியாமோ?

என்று நாமக்கல் வெ.ராமலிங்கம் பிள்ளை பாடியுள்ளார்.

எல்லார்க்கும் எளிது தனது தந்தையார் செய்துவரும் தொழில். இதனை "குலவிச்சை கல்லாமல் பாகம் படும்" என்றனர் நம் முன்னோர்.

இத்தகைய தொழிலின் மேன்மையைப் பாமரரும் எளிதில் அறியும் வண்ணம் விளக்கும் ஒரு இனிய பாடல்:


சும்மா இருந்தா சோத்துக்கு நஷ்டம்


திரைப்படம்: மதுரை வீரன், பாடியவர்: ஜிக்கி, இசை: ஜி. ராமநாதன்

சும்மா இருந்தா சோத்துக்கு நஷ்டம்
சோம்பல் வளர்ந்தா ஏற்படும் கஷ்டம்
சும்மா இருந்தா சோத்துக்கு நஷ்டம்
சோம்பல் வளர்ந்தா ஏற்படும் கஷ்டம்
உண்மையோடு உழைக்கோணும் தானே தன்னன்னா - மச்சான்
ஒன்று சேர்ந்து வாழோணும் தானே தன்னன்னா ஹெஹே..

படித்த வேலைக்குப் பலபேர் நோட்டம்
பாக்கி வேலைக்கு ஆள் திண்டாட்டம்
படித்த வேலைக்குப் பலபேர் நோட்டம்
பாக்கி வேலைக்கு ஆள் திண்டாட்டம்
கொடுத்த வேலையை முடிப்பது சேட்டம்
குடிசைத் தொழிலுக்கு வேணும் நாட்டம்

உண்மையோடு உழைக்கோணும் தானே தன்னன்னா - மச்சான்
ஒன்று சேர்ந்து வாழோணும் தானே தன்னன்னா ஹெஹேஹே..

அப்பன் தொழிலை அவனது பிள்ளை
சொப்பனத்திலுமே நினைப்பதுமில்லை
அப்பன் தொழிலை அவனது பிள்ளை
சொப்பனத்திலுமே நினைப்பதுமில்லை
இப்படி செய்வதினாலே தொல்லை
ஏற்பட்டதென்றால் சேர்க்கவுமில்லை

தெரிந்த தொழிலை செய்தாலே தானே தன்னன்னா - மச்சான்
தாழ்வுமில்லை அதனாலே தானே தன்னன்னா ஹெஹேஹே..

வேலை வேலை என்று ஓலமிட்டழுதா
ஆளைத் தேடி அது வீட்டுக்கு வருதா?
மூளையோடு நல்ல முயற்சி இருந்தா
வேலை செய்து பல விவரம் புரியுதா?

பாடுபட்டால் பலனுண்டு தானே தன்னன்னா - மச்சான்
பஞ்சம் தீர்க்க வழியுண்டு தானே தன்னன்னா
ஹேஹேஹே.. ஹேஹேஹே..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக