சுக முனிவர் ஒரு சமயம் "கடவுளே, கடவுளே யோ!" என்று கூவிக்கொண்டு போகையில் அங்கிருந்த மலை, சுனை, மேகம், நதி, ஓடை, மரம், செடி, கொடி, மலர், பறவை, விலங்கு அனைத்தும் "ஏன்? ஏன்?" என்று கேட்டனவாம். இதைத் தாயுமானவர், "அங்கமே நின் வடிவமான சுகர் கூப்பிட நீ எங்கும் 'ஏன்? ஏன்?' என்றதென்னே பராபரமே" என்று சொல்கிறார்.
"சொல்லடா ஹரி யென்ற கடவுளெங்கே?
'சொல்'லென்று ஹரண்யன் தான் உறுமிக்கேட்க
நல்லதொரு மகன் சொல்வான் 'தூணி லுள்ளான்,
நாராயணன் துரும்பினுள்ளா' னென்றான்,
வல்லமை சேர் கடவுளிலா இடமொன்றில்லை,
மகா சக்தி யில்லாத வஸ்து இல்லை,
அல்ல லில்லை, அல்ல லில்லை, அல்ல லில்லை,
அனைத்துமே தெய்வ மென்றா லல்ல லுண்டோ?"
என்று மஹாகவி பாரதியார் சொல்கிறார்.
பக்தர்களுக்குள் நான் பிரஹலாதன் எனக் கண்ணன் தனது கீதையில் உரைக்கிறான். பிரஹலாதன் அன்பு வடிவானவன் என்பதை இரண்யன் சரித்திரத்திலிருந்து அறிகிறோம். இறைவன் இல்லாத இடமில்லை. இறைவனைக் காண வேண்டின் அகக்கண்ணைத் திறந்து வைத்து அன்பு நெறியில் செல்ல வேண்டும். அப்பொழுது இயற்கையின் ரகசியம் புரியும். அனைத்து உயிரினங்களுடனும் உள்ளுணர்வால் தொடர்பு கொள்ள இயலும். இதனையே ஆத்ம சக்தி என்பர்.
கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும்
படம்: ஆனந்தி
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியவர்: பி. சுசீலா
ஆண்டு: 1965
கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும்
கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும்
நெஞ்சிலே ஆசை வந்தால் நீரிலும் தேனூறும்
கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும்
நெல்லிலே மணியிருக்கும் நெய்யிலே மணமிருக்கும்
பெண்ணாகப் பிறந்து விட்டால் சொல்லாத நினைவிருக்கும்
சொல்லாத நினைவிருக்கும்
கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும்
பிள்ளையோ உன் மனது இல்லையோ ஒர் நினைவு?
முன்னாலே முகமிருந்தும் கண்ணாடி கேட்பதென்ன?
கண்ணாடி கேட்பதென்ன?
கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும்
சொந்தமோ புரியவில்லை சொல்லவோ மொழியுமில்லை
எல்லாமும் நீயறிந்தால் இந்நேரம் கேள்வியில்லை
இந்நேரம் கேள்வியில்லை
கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக