செவ்வாய், 24 நவம்பர், 2009

கல்யாணத் தேன் நிலா காய்ச்சாத பால் நிலா

"நீலவான் ஆடைக்குள் உடல் மறைத்து
நிலாவென்று காட்டுகின்றாய் ஒளி முகத்தைக்!
கோலமுழு தும்காட்டி விட்டால் காதற்
கொள்ளையிலே இவ்வுலகம் சாமோ? வானச்
சோலையிலே பூத்ததனிப் பூவோ நீதான்!
சொக்கவெள்ளிப் பாற்குடமோ, அமுத ஊற்றோ!
காலைவந்த செம்பரிதி கடலில் மூழ்கிக்
கனல்மாறிக் குளிரடைந்த ஒளிப் பிழம்போ!
என்று பாவேந்தர் பாரதிதாசன் வியந்து போற்றி மகிழ்ந்து பாடிய வெண்ணிலா விண்ணில் நிலவும் இரவுப் பொழுதினை ரசித்து மகிழாத கவிகளுமில்லை காதலர்களுமில்லை. குழந்தைகள் முதல் கிழவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் மனதுக்கினிய வஸ்து ஒன்றுண்டென்னில் அது வானத்தில் மிதந்து வரும் நிலவன்றி வேறில்லை. குறிப்பாகக் காதல் வயப்பட்ட இளைஞன் ஒருவன் அக்குளிர் நிலவை விண்ணில் மட்டுமன்றி நேரில் தங்கள் காதலியின் முகத்திலும் கண்டு மகிழ்கிறான்.

"பொங்கி வரும் பெரு நிலவு போன்ற ஒளி முகமும்
புன்னகையின் புது நிலவு போற்ற வரும் தோற்றம்"

என்று இக்கருத்தை ஏற்றிச் சொல்கிறார் மஹாகவி பாரதி.

வானிலே வரும் வெண்ணிலவு தன் காதலி வடிவில் வாழ்வில் தன்னுடன் வந்தால் ஒருவனுக்கு அதனை விடவும் வேறேது சொர்க்கம்?

கல்யாணத் தேன் நிலா காய்ச்சாத பால் நிலா

திரைப்படம்: மௌனம் சம்மதம்
இயற்றியவர்: புலமைப் பித்தன்
இசை: இளையராஜா
பாடியோர்: கே. ஜே. ஜேசுதாஸ், சித்ரா
ஆண்டு: 1990

கல்யாணத் தேன் நிலா காய்ச்சாத பால் நிலா
நீ தானே வான் நிலா என்னோடு வா நிலா
தேயாத வெண்ணிலா உன் காதல் கண்ணிலா?
ஆகாயம் மண்ணிலா?..
கல்யாணத் தேன் நிலா காய்ச்சாத பால் நிலா

தென்பாண்டிக் கூடலா தேவாரப் பாடலா?
தீராத ஊடலா தேன் சிந்தும் கூடலா?
என் அன்புக் காதலா எந்நாளும் கூடலா?
பேரின்பம் நெய்யிலா நீ தீண்டும் கையிலா?
பாற்போமே ஆவலா? வா வா நிலா

கல்யாணத் தேன் நிலா காய்ச்சாத பால் நிலா
நீ தானே வான் நிலா என்னோடு வா நிலா

உன் தேகம் தேக்கிலா தேன் உன்தன் வாக்கிலா?
உன் பார்வை தூண்டிலா நான் கைதிக் கூண்டிலா?
சங்கீதம் பாட்டிலா நீ பேசும் பேச்சிலா?
என் ஜீவன் என்னிலா உன் பார்வை தன்னிலா?
தேனூறும் வேர்ப்பலா உன் சொல்லிலா?..

கல்யாணத் தேன் நிலா காய்ச்சாத பால் நிலா
நீ தானே வான் நிலா என்னோடு வா நிலா
தேயாத வெண்ணிலா உன் காதல் கண்ணிலா?
ஆகாயம் மண்ணிலா?..
கல்யாணத் தேன் நிலா காய்ச்சாத பால் நிலா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக