ஞாயிறு, 20 அக்டோபர், 2013

உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்

நாம் அனைவரும் வாழ்வில் வெற்றி பெற விழைந்து முயற்சிக்கிறோம் என்றாலும் வாழ்வின் நோக்கம் என்ன என்பதை நாம் அறிவதில்லை. வாழ்வின் ரகசியமும் நமக்குத் தெரியாது, ஆனால் நாம் ஒவ்வொருவரும் எல்லாம் தெரிந்த ஞானி போல் பிறருக்கு அறிவுரை வழங்கத் தயங்குவதில்லை. முற்றும் துறந்த ஞானியர் போல் வேடந்தரித்த பலரும் மனித சமுதாயத்தில் கலந்து மற்றவர்களை ஞான மார்க்கத்தில் இட்டுச் செல்ல முயற்சி செய்வதாகக் கூறிக்கொண்டு தாமும் பொருள் ஒன்றையே தேடி அஞ்ஞானத்தில் உழல்கின்றனர். இத்தகைய மாந்தர்கள் தம் வாழ்வில் ஒரு நாளும் வெற்றி பெறுவதில்லை. எவ்வளவு பொருள் சேர்த்த போதிலும் அவ்வாறு சேர்த்த பொருளைக் கொண்டு அவர்களும் பயனடைவதில்லை பிறரும் பயனடைய அனுமதிப்பதில்லை. தங்கள் வாழ்நாளை வீணாளாக்கி மடிகின்றனர் இத்தகைய வேடதாரிகள்.

வாழ்க்கை என்றோ ஒரு நாள் தொடங்கி என்றோ ஒரு நாள் முடிவதல்ல. வாழ்க்கை நம் பிறப்புக்கு முன்னரும் இருந்தது. நம் இறப்புக்குப் பின்னரும் நிச்சயம் இருக்கும். அதில் எவ்வித மாற்றமுமில்லை, காரணம் உலகில் ஆக்கம் அழிவு என்பன யாவும் மாயத் தோற்றங்களே. விஞ்ஞான ரீதியாகவும் இவ்வுண்மை நிரூபிக்கப் பட்டு அறிஞர்கள் அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்டதாகும். ஞானமும் விஞ்ஞானமும் ஆத்மாவின் சக்தியால் பெறப்படுபவை, அழியாத் தன்மையவை, இப்பிறவியில் நாம் கொண்ட உடலோடு நாம் அடைந்த ஞானமும் விஞ்ஞானமும் அழிவதில்லை வரும் பிறவியில் நாம் இப்பிறவியிலடைந்த ஞானத்தை மூலதனமாகக் கொண்டு மேலும் விருத்தியடைய வாய்ப்புள்ளது. ஞான மார்க்கத்தின் உச்சமாவது தன்னையறிதல். அதன் லக்ஷணம் பரோபகாரம். தன்னையறிந்த ஞானி பிறரைப் போல் பொருளிலும் அநித்தியமான உறவுகளிலும் சிற்றின்பத்திலும் மனதைச் செலுத்தித் துயருறுவதில்லை, மாறாக ஞானத்தை அடைய விரும்பியும் வழி தெரியாமல் தவிக்கும் மற்றவர்க்கு ஞான மார்க்கத்தைக் காட்டி வழிநடத்துவார். அது மட்டுமின்றி உலகில் பல வகைகளிலும் துயருறும் உயிர்களுக்கு உதவிப் பிறரது துயர் துடைப்பதையே தம் வாழ்வின் லட்சியமாகக் கொள்வார். அதே லட்சியப் பாதையில் தன் அன்பர்களையும் வழிநடத்திச் செல்வார். 

பண்டைய புராணங்களில் இடம்பெற்ற பல மாமுனிவர்கள் மட்டுமின்றி புத்தர், ஏசு, காந்தி முதலான சரித்திர புருஷர்களும் வாழ்ந்த வாழ்க்கையை அறிகையில் மெய்ஞானிகளின் தன்மையும் செயல்பாடும் நமக்குத் தெளிவாகப் புரியும். வாழ்வில் நாம் வெற்றி பெற வேண்டுமெனில் முதலில் நாம் யாரென்று அறிய வேண்டும். அதற்கு முதற்கண் ஐம்புலன்களால் அனுபவிக்கும் இன்ப துன்பங்களில் மதிமயங்கி மனம் பேதலிக்காமல் தெளிவான அறிவு பெற்றுத் திகழ வேண்டும். நாம் யாரென்று நாம் அறிகையில் நாம் இவ்வுலகத்து வாழ்வில் ஏற்படும் அனைத்து சூழ்நிலைகளிலும் போராடி வெற்றி பெறலாம்.

உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்

திரைப்படம்: வேட்டைக் காரன்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்

உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்
உலகத்தில் போராடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம்
உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்
உலகத்தில் போராடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம்

மானம் பெரியதென்று வாழும் மனிதர்களை 
மானென்று சொல்வதில்லையா? தன்னைத் 
தானும் அறிந்து கொண்டு ஊருக்கும் சொல்பவர்கள்
தலைவர்கள் ஆவதில்லையா? 
மானம் பெரியதென்று வாழும் மனிதர்களை 
மானென்று சொல்வதில்லையா? தன்னைத் 
தானும் அறிந்து கொண்டு ஊருக்கும் சொல்பவர்கள்
தலைவர்கள் ஆவதில்லையா?

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்
உலகத்தில் போராடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம்

லரலார லரலார லரலாராரி லாராரிரார 

மாபெரும் சபைகளில் நீ நடந்தால் உனக்கு
மாலைகள் விழ வேண்டும் ஒரு
மாற்றுக் குறையாத மன்னவன் இவனென்று
போற்றிப் புகழ வேண்டும்
மாபெரும் சபைகளில் நீ நடந்தால் உனக்கு
மாலைகள் விழ வேண்டும் ஒரு
மாற்றுக் குறையாத மன்னவன் இவனென்று
போற்றிப் புகழ வேண்டும்

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்
உலகத்தில் போராடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம்

ஹூ ஹூ ஹூ ஹூ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக