ஞாயிறு, 20 அக்டோபர், 2013

தை பொறந்தா வழி பொறக்கும்

பழையன கழிதலும் புதியன புகுதலும் வேண்டி போகிப் பண்டிகையுடன் தொடங்கும் இப்பொங்கல் திருநாள் தமிழ் மக்கள் அனைவருக்கும் நல்வாழ்வை நல்கும் விதமாக அமைய இறைவனை வேண்டுகிறேன்.


இந்திய மாநிலங்களுக்கிடையேயான நதி நீர்ப் பங்கீடு தொடர்பான பிரச்சினைகளுள் தமிழ்நாட்டுக்கும் கர்நாடக மாநிலத்துக்குமிடையே நிலவி வரும் காவிரி நீர்ப் பிரச்சினையே பெரிதென எண்ணி வந்த நிலையில் அதனை விடவும் மிகப்பெரியதான பிரச்சினையாக உருவெடுத்துள்ளது தமிழகத்துக்கும் கேரளத்துக்கும் இடையேயான முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினை. பருவமழை நன்கு பெய்யும் காலங்களில் போதிய அளவு நீர் காவிரி நதியிலிருந்து தமிழக விவசாயிகளுக்குக் கிடைப்பதால் அந்த ஆண்டு காவிரிப் பிரச்சினை எழுவதில்லை. ஆனால் அதற்கு மாறாக முல்லைப் பெரியாறிலிருந்து தமிழகத்துக்குத் தண்ணீர் கிடைக்காமல் செய்ய வழி தேடுகின்றனர் கேரள அரசியல்வாதிகள். இப்பிரச்சினையில் உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பையும் மதிக்காமல் கேரள மாநில அரசு செயல்படுவதால் இரு மாநில மக்களிடையே தீராத பிரச்சினை உருவாக வழி வகுத்துள்ளது. ஆண்டாண்டு காலமாகத் தமிழகத்திலிருந்து சபரிமலைக்குச் செல்லும் ஐயப்ப பக்தர்கள் தாக்கப்படுகின்றனர். தமிழகத்துக்கு வரும் கேரள மக்கள் தாக்கப் படுகின்றனர். கேரளாவுக்கு வழக்கமாகத் தமிழகத்திலிருந்து கொண்டு செல்லும் உணவு முதலிய அத்தியாவசியப் பொருட்கள் செல்ல முடியாத சூழ்நிலையை உருவாக்கி இரு மாநில மக்களும் துன்புறும் நிலையை விளைவித்து வேடிக்கை பார்க்கும் அரசியல்வாதிகளின் சூழ்ச்சியை இரு மாநில மக்களும் உணர வேண்டும்.

முன்பிருந்தது போலவே இரு மாநில மக்களும் சகோதர பாவனையுடன் பழகவும் தமிழக விவசாயிகளுக்குத் தொடர்ந்து முல்லைப் பெரியாறிலிருந்து நீர் கிடைத்து விவசாயம் செழித்து இரு மாநில மக்களும் தவறாது பயன் பெறவும் உரிய சூழ்நிலை உருவாக வேண்டும்.

ஆற்று மணல் கொள்ளை தடுக்கப் படல் வேண்டும். அதனால் ஏற்படும் நிலத்தடி நீர்க் குறைபாடு நீங்க வேண்டும். ஆலைக் கழிவுகளால் நதி நீர் மாசுபடுவது தடுக்கப் பட வேண்டும். சிறிது காலத்திற்கு முன்பு வரை இருந்தது போல் சுத்தமான குடிநீர் நதிகளிலிருந்தும் கிணறுகளிலிருந்தும் மக்கள் அனைவருக்கும் தடையின்றிக் கிடைக்க வழி ஏற்பட வேண்டும். விவசாயிகளது விளைநிலங்கள் செயற்கை உரங்களாலும், பூச்சிக் கொல்லி மருந்துகளின் பாதிப்பாலும் நச்சுத் தன்மையடைவது தடுக்கப் பட்டுப் பண்டைய இயற்கை விவசாய முறையை அனைத்து விவசாயிகளும் நடைமுறைப்படுத்தி விளைச்சல் பெருக வழி ஏற்பட வேண்டும்.

விவசாயிகள் கடன் சுமையாலும், இடைத்தரகர்களினால் ஏற்படும் வருவாய் இழப்பாலும் வருந்தும் நிலை மாற வேண்டும். உழைப்பவர் உயரும் நிலை வர வேண்டும். மத்தியிலும் மாநிலத்திலும் நல்லாட்சி நிலவ வேண்டும். மக்கள் யாவரும் எல்லா வளங்களும் குறைவின்றி நிறையப் பெற்று சுகவாழ்வு வாழ வேண்டும். விலைவாசிகள் குறைய வேண்டும். நம் வருங்கால சந்ததிகள் இவ்வுலகில் நாம் வாழ்ந்ததை விடவும் அதிக வசதிகளோடும் மகிழ்ச்சியோடும் ஒற்றுமை உணர்வுடன் நீளாயுள் பெற்று வாழ வேண்டும்.

பொங்கல் திருநாள் எல்லாருக்கும் எல்லா நலன்களையும் அருளப் பிரார்த்திப்போம்.

அருட் பேராற்றல் கருணையினால் உடல் நலம் நீளாயுள், நிறை செல்வம் உயர் புகழ் மெய்ஞானம் ஓங்கி வாழ்க!  அருட் பேராற்றல் இரவும் பகலும், எல்லா நேரங்கலிலும், எல்லா இடங்கலிலும், எல்லாத் தொழில்களிலும், 
உறுதுணையாகவும், பாதுகாப்பாகவும், வழி நடத்துவதாகவும் அமையுமாக! 

வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
 


திரைப்படம்: தை பிறந்தால் வழி பிறக்கும்
இயற்றியவர்: ஏ. மருதகாசி
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா

தை பொறந்தா வழி பொறக்கும் தங்கமே தங்கம்
தங்கச் சம்பா நெல் விளையும் தங்கமே தங்கம்
தை பொறந்தா வழி பொறக்கும் தங்கமே தங்கம்

ஆடியிலே வெதை வெதைச்சோம் தங்கமே தங்கம்
ஐப்பசியில் களையெடுத்தோம் தங்கமே தங்கம்
கார்த்திகையில் கதிராச்சு தங்கமே தங்கம்
கார்த்திகையில் கதிராச்சு தங்கமே தங்கம்
கழனியெல்லாம் பொன்னாச்சு தங்கமே தங்கம்

தை பொறந்தா வழி பொறக்கும் தங்கமே தங்கம்
தங்கச் சம்பா நெல் விளையும் தங்கமே தங்கம்
தை பொறந்தா வழி பொறக்கும் தங்கமே தங்கம்

கன்னியரின் மனசு போலே தங்கமே தங்கம்
கல்யாணமாகுமடி தங்கமே தங்கம் ஆமா
கன்னியரின் மனசு போலே தங்கமே தங்கம்
கல்யாணமாகுமடி தங்கமே தங்கம்
வண்ண மணி கைகளிலே தங்கமே தங்கம்
வண்ண மணி கைகளிலே தங்கமே தங்கம் ஆமா
வளையல்களும் குலுங்குமே தங்கமே தங்கம்

தை பொறந்தா வழி பொறக்கும் தங்கமே தங்கம்
தங்கச் சம்பா நெல் விளையும் தங்கமே தங்கம்
தை பொறந்தா வழி பொறக்கும் தங்கமே தங்கம்

சுத்தச் சம்பா நெல்லு குத்தி தங்கமே தங்கம்
முத்ததிலே சோறு பொங்கி தங்கமே தங்கம்
குத்து வெளக்கேத்தி வச்சு தங்கமே தங்கம்
குத்து வெளக்கேத்தி வச்சு தங்கமே தங்கம்
கொண்டாடி மகிழ்ந்திடுவோம் தங்கமே தங்கம்

தை பொறந்தா வழி பொறக்கும் தங்கமே தங்கம்
தங்கச் சம்பா நெல் விளையும் தங்கமே தங்கம்
தை பொறந்தா வழி பொறக்கும் தங்கமே தங்கம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக