ஞாயிறு, 20 அக்டோபர், 2013

அன்பினாலே உண்டாகும் இன்பநிலை

இவ்வுலக வாழ்வு அநித்தியமானது, வாழ்வில் நாம் ஈட்டுபவை, இழப்பவை யாவும் அநித்தியமானவை, இன்று போனால் நாளை வரலாம், இன்று வந்திடில் நாளை மறையலாம், ஆனால் அன்பும் பாசமும் நித்தியமானவை, என்றும் நிலைத்திருப்பவை, நம் வாழ்வை இன்பமயமாக்குபவை. இவ்வுலகில் யாரும் தனக்கென மட்டுமே வாழ்தல் சாத்தியமில்லை. பஞ்சமா பாதகங்கள் புரிந்து பலரையும் வருத்தி வாழும் கொடியோரும் தமக்கென யாரேனும் சிலரிடமாவது அன்பும் பாசமும் கொண்டிருப்பர் என்பது நிதர்சனமான உண்மை, ஆயினும் பலருக்கு அநீதியிழைத்து சிலரிடம் அன்பு செலுத்துவோர் காணும் இன்பம் முழுமையானதாக இருக்காது. அவர்களுக்கு என்றென்றும் ஏதேனும் மனக்குறைகள் இருந்துகொண்டே இருக்கும். எதைக் கொண்டும் திருப்தியடையாமல் எந்நாளும் கவலையிலே மூழ்கியிருப்பார்கள் இத்தகைய குறைகுணத்தோர். 

வாழ்வை முழுமையாக அனுபவிக்கத் தெரிந்தவர்களே முக்தியடையும் தகுதியைப் பெறுகின்றனர். முக்தி என்பது எந்நிலையிலும் ஆத்ம திருப்தியோடு அமைதியாகத் திகழும் நிலை. முக்தி பெற ஒவ்வொருவரும் தொடர்ந்து முயற்சி செய்தாலே முடியும். கண்களை மூடிக்கொண்டு சில மணித்துளிகள் தியானம் செய்வதால் மட்டுமே முக்தியை அடைந்துவிட முடியாது. வாழ்நாள் உள்ளளவும் ஒவ்வொரு நொடியுலும் நாம் எண்ணும் எண்ணங்கள், செய்யும் செயல்கள், பேசும் பேச்சுக்கள், அறியும் விஷயங்கள் அனைத்தும் எவ்விதத்திலும் நம் மனதையோ பிறர் மனங்களையோ புண்படுத்தா வண்ணம் அமைந்திருப்பது அவசியம். அப்பொழுது அமைதி நிலைபெறும். அறிந்தோ அறியாமலோ நாம் பிறரது மனதைப் புண்படுத்த நேருமாயின் கூடிய விரைவில் நம் தவறுக்கு வருந்தி மன்னிப்புக் கோருவதே உயர்ந்த பண்பாகும். 

பெரும் செல்வந்தரான ஒரு நிலச்சுவான்தார் தன் நிலத்தில் நெடுங்காலமாக நல்ல விளைச்சல் இல்லாமல் அவதிப்படுகையில் அவரது ஜோதிடர் கூறிய அறிவுரைப்படி திருவிடைமருதூர் சிவன் கோவிலில் ஒருயாகம் செய்தார் ஆனால் ஆணவத்தினால் அவர் அந்த யாகத்தில் கலந்து கொண்ட முதியவர் ஒருவரது மனதைப் புண்படுத்தி விட்டார். ஆயினும் தான் செய்தது தவறு என்று அவர் அறியவில்லை. யாகம் முடிந்த பின்னர் அவர் பிரசாதத்தினை எடுத்துக்கொண்டு காஞ்சி பரமாச்சார்யாரிடம் சென்றார். பரமாச்சார்யார் அவர் செய்த பாபத்தைச் சுட்டிக்காட்டிப் பரிகாரம் தேடும் படி அறிவுறுத்தவே தான் செய்த தவற்றை உணர்ந்த அவர் தன்னால் அவமானப் பட்ட பெரியவரிடம் மன்னிப்பு வேண்டிப் பெறும் நோக்கத்துடன் அப்பெரியவர் இருக்கும் ஊருக்குச் சென்ற சமயம் அப்பெரியவர் இவ்வுலகை விட்டே சென்ற நிலையில் ஈமச் சடங்குகள் நடைபெறுவதைக் கண்டு மனம் புழுங்கினார். அதன் பின்னர் தான் ஈட்டிய பொருளனைத்தையும் தான தருமங்கள் செய்து வாழ்ந்தார். இருப்பினும் அவரது மனக்கவலை என்றும் நீங்கவேயில்லை.


பிற உயிர்களிடம் அன்பு செலுத்துவோம், குடும்பத்தாரை அரவணைத்துச் செல்வோம், உற்றார் உறவினருடன் ஒன்றுபட்டு வாழ்வோம், நண்பர்களுடன் இயன்ற பொழுதெல்லாம் கலந்து மகிழ்வோம். துன்பப்படுவோர்க்கு நம்மால் இயன்ற உதவிகளை செய்வோம். அகந்தையை அகற்றி அன்பும் பாசமும் மேலோங்க இன்புற்று வாழ்ந்து தன்னிறைவு பெறுவோம்.

உலகமெலாம் பருவமழை ஒத்தபடி பெய்யட்டும்!
உழவரெலாம் தானியத்தை உவப்புடனே பெருக்கட்டும்!
பல தொழில்கள் புரிகின்ற பாட்டாளி உயரட்டும்!
பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டைப் பெருக்கட்டும்!கலகங்கள் போட்டிபகை கடந்தாட்சி நடக்கட்டும்!
கல்லாமை,கடன்,வறுமை களங்கங்கள் மறையட்டும்!
நல வாழ்வை அளிக்கும் மெய்ஞ்ஞான ஒளி வீசட்டும்!
நம் கடமை அற வாழ்வின் நாட்டத்தே சிறக்கட்டும்!’’
வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!

அன்பினாலே உண்டாகும் இன்பநிலை


திரைப்படம்: பாசவலை
இயற்றியவர்: ஏ. மருதகாசி
இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராம மூர்த்தி
பாடியவர்: சி.எஸ். ஜெயராமன்
ஆண்டு: 1956

அன்பினாலே உண்டாகும் இன்பநிலை அதை
அணைந்திடாத தீபமாக்கும் பாசவலை

அன்பினாலே உண்டாகும் இன்பநிலை
அன்பினாலே உண்டாகும் இன்பநிலை அதை
அணைந்திடாத தீபமாக்கும் பாசவலை
பாசவலை பாசவலை
அன்பினாலே உண்டாகும் இன்பநிலை

சொந்தமெனும் உறவுமுறை நூலினாலே
சொந்தமெனும் உறவுமுறை நூலினாலே - அருட்
ஜோதியான இறைவன் செய்த பின்னல் வேலை
பாசவலை பாசவலை - அருட்
ஜோதியான இறைவன் செய்த பின்னல் வேலை
பாசவலை பாசவலை

அன்பினாலே உண்டாகும் இன்பநிலை

கொஞ்சுமொழி குழந்தைச் செல்வம் நிறைந்ததாலே ஏ...
கொஞ்சுமொழி குழந்தைச் செல்வம் நிறைந்ததாலே நல்ல
குலவிளக்காய் மனைவி வந்து அமைந்ததாலே நல்ல
குலவிளக்காய் மனைவி வந்து அமைந்ததாலே
தம்பி தமையன் ஒன்று சேர்ந்து வாழ்வதாலே
தம்பி தமையன் ஒன்று சேர்ந்து வாழ்வதாலே
சம்சாரத்திலே எந்த நாளும் மனசு போலே

அன்பினாலே உண்டாகும் இன்பநிலை அதை
அணைந்திடாத தீபமாக்கும் பாசவலை
அன்பினாலே உண்டாகும் இன்பநிலை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக