திங்கள், 21 அக்டோபர், 2013

ஆடாத மனமும் உண்டோ?

நாம் இவ்வுலகில் இருக்கும் வரை மகிழ்ச்சியோடு வாழ வேண்டுமெனில் எதற்கும் கவலைப் படாதிருக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். இங்கே நமது என்று தனியே ஏதுமில்லை. இவ்வுலகம் முழுமையும் நமதே என்ற பரந்த எண்ணத்துடன் இவ்வுலகையும் உலக மாந்தரையும் பிற உயிரினங்களையும் நேசித்து ஒழுகுதல் நம் உள்ளத்தில் என்றும் மகிழ்ச்சி நிலவ வழிகோலும். உலகமென்கையில் அதில் தீமைகளும் இருக்கும் அனேக நன்மைகளும் இருக்கும். நன்மைகளை நாடிச் சென்றடைதல் வேண்டும். தீமைகளை விலக்க வேண்டும். ஆனால் எதற்கும் அஞ்சுவதும் கவலை கொள்வதும் ஆன்மாவை வருத்தும்.

வடகோடிங் குயர்ந்தென்னே, சாய்ந்தா லென்னே,
வான் பிறைக்குத் தென்கோடு பார்மீ திங்கே
விடமுண்டுஞ் சாகாம லிருக்கக் கற்றால்,
வேறெதுதான் யாதாயின் எமக்கிங் கென்னே?
திடங்கொண்டு வாழ்ந்திடுவோம், தேம்பல் வேண்டா;
தேம்புவதில் பயனில்லை, தேம்பித் தேம்பி
இடருற்று மடிந்தவர்கள் கோடி கோடி
எதற்கு மினி அஞ்சாதீர் புவியி லுள்ளீர்!

எனும் மஹாகவி பாரதியின் வழிகாட்டுதலைக் கடைபிடித்து வாழ்வில் நமது சக்திக்கு ஏற்றவாறு முயற்சி செய்து நன்மை தரும் விஷயங்களை நாட வேண்டும். ஆசைகளை அழிக்க வேண்டுமென்று முற்றுமுணர்ந்த ஞானிகள் போல் தம்மைக் காட்டிக்கொள்வோர் கூறும் பொய்த் தத்துவத்தைப் புறக்கணித்து ஆசைகளே இந்த உலகில் வாழ நமக்குறுதுணையாக விளங்கும் ஆதாரங்கள் என்பதை உணர்ந்து நியாயமான வகையில் நாம் பயன்பெற ஏற்ற, நம் சக்தியைக் கொண்டு நிறைவேற்றத் தக்க ஆசைகளை மனதில் இருத்திக் கொள்ளுதல் வேண்டும். இனிய கானங்களைக் கேட்டும் பாடியும் மகிழ்வதும், நண்பர்களுடன் ஒன்று கலந்து களிப்பதும், நம் மனதுக்கேற்ற வாழ்க்கைத் துணையை நாடியடைந்து, காதல் கொள்வதும், மனம் விரும்பும் துணைவரை மணம் செய்து கொண்டு இல்லற இன்பம் துய்ப்பதும், நற்புத்திரப் பேறடைவதும். நம் பிள்ளைகளுக்காக நமது வாழ்வை அர்ப்பணிப்பதும் ஆசைகளேயன்றோ?

ஒருவனுக்கு அழகில் சிறந்தவளும், நாட்டியத்தில் தேர்ந்தவளும், அன்பொடு பழகுபவளுமான ஒரு பெண் காதலியாகக் கிடைத்தால் அவன் அடையும் இன்பத்துக்கு அளவேயில்லை. அவனும் அவளுக்கேற்றவாறு தானும் இசையிலும் நடனத்திலும் பயிற்சி பெற்றிருப்பின். அவ்வின்பம் இரட்டிப்பாகுமன்றோ? அத்தகைய மனம் கவர்ந்த காதலி நடனமாட அவளது நாட்டியத்திற்குத் தானே இசை பாடும் வாய்ப்புஒருவனுக்கு அமையுமானால் அவளது நடனம் கண்டு அவனது மனம் ஆனந்தக் கூத்தாடுமன்றோ? 

ஆடாத மனமும் உண்டோ?

திரைப்படம்: மன்னாதி மன்னன்
இயற்றியவர்: ஏ. ம்ருதகாசி
இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி
பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன், எம்.எல். வசந்தகுமாரி
ஆண்டு: 1960

ஆடாத மனமும் உண்டோ? நடை
யலங்காரமும் அழகு சிங்காரமும் கண்டு
ஆடாத மனமும் உண்டோ? நடை
யலங்காரமும் அழகு சிங்காரமும் கண்டு
ஆடாத மனமும் உண்டோ? 

நாடெங்கும் கொண்டாடும் புகழ்ப்பாதையில் வீர
நடை போடும் திருமேனி தரும் போதையில்
நாடெங்கும் கொண்டாடும் புகழ்ப்பாதையில் வீர
நடை போடும் திருமேனி தரும் போதையில்

ஆடாத மனமும் உண்டோ? நடை
அலங்காரமும் அழகு சிங்காரமும் கண்டு
ஆடாத மனமும் உண்டோ?

வாடாத மலர் போலுன் விழி பார்வையில் கை
வளை ஓசை தரும் இன்ப இசைக் கார்வையில்
வாடாத மலர் போலுன் விழி பார்வையில் கை
வளை ஓசை தரும் இன்ப இசைக் கார்வையில்
ஈடேதுமில்லாத கலைச் சேவையில் தனி
இடம் கொண்ட உமைக் கண்டும் இப்பூமியில்
ஈடேதுமில்லாத கலைச் சேவையில் தனி
இடம் கொண்ட உமைக் கண்டும் இப்பூமியில்

ஆடாத மனமும் உண்டோ? 

இதழ் கொஞ்சும் கனியமுதை விஞ்சும் 
குரலில் குயில் அஞ்சும் உனைக் காணவே
இதழ் கொஞ்சும் கனியமுதை விஞ்சும் 
குரலில் குயில் அஞ்சும் உனைக் காணவே
பசும் தங்கம் உமது எழில் அங்கம் 
அதனசைவில் பொங்கும் நயம் காணவே
பசும் தங்கம் உமது எழில் அங்கம் 
அதனசைவில் பொங்கும் நயம் காணவே
முல்லைப் பூவில் ஆடும் கரு வண்டாகவே
முகில் முன்னே ஆடும் வண்ண மயில் போலவே
முல்லைப் பூவில் ஆடும் கரு வண்டாகவே
முகில் முன்னே ஆடும் வண்ண மயில் போலவே
அன்பை நாடி உன்தன் அருகில் வந்து நின்றேன்
இன்பமென்னும் பொருளை இங்கு கண்டேன்
தன்னை மறந்து உள்ளம் கனிந்து
இந்நாள் ஒரு பொன்னாள் எனும் மொழியுடன்
தேனாறு பாய்ந்தோடும் கலைச் செல்வமே தரும்
திகட்டாத ஆனந்த நிலை தன்னிலே
தேனாறு பாய்ந்தோடும் கலைச் செல்வமே தரும்
திகட்டாத ஆனந்த நிலை தன்னிலே

ஆடாத மனமும் உண்டோ? நடை
அலங்காரமும் அழகு சிங்காரமும் கண்டு
ஆடாத மனமும் உண்டோ? 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக