ஞாயிறு, 20 அக்டோபர், 2013

எத்தனை எத்தனை இன்பமடா

உலகிலுள்ள ஜீவராசிகளுள் மிகவும் உயர்ந்தவர்கள் மனிதர்கள் எனவும் மனிதர்கள் ஆறறிவு படைத்தவர்கள் எனவும் நாம் பெருமிதம் கொள்கிறோம், ஆனால் நாம் வாழும் முறையும் நடந்துகொள்ளும் விதமும் அதற்கு ஏற்றாற்போல் உள்ளனவா என்று சிந்தித்துப் பார்க்கையில் நமக்குள்ளே ஐயம் எழுகிறது, உண்மையிலேயே  நாம் ஆறறிவு படைத்தவர்களா என. சிற்றெரும்புகள் சாரை சாரையாகச் சென்று உணவு எங்கிருந்தாலும் அதைத் தம் மறைவான இருப்பிடத்துக்குக் கொண்டு சேர்க்க ஒன்று சேர்ந்து உழைக்கின்றன. பகிர்ந்துண்டு வாழ்கின்றன. நம்மில் அனேகர் தினமும் காலையில் காக்கைகளுக்கு உணவளித்த பின்னரே உண்கிறோம். அவ்வாறு நாம் அளிக்கும் உணவைக் காக்கைகள் தன் இனத்தைக் காகா என்று கூவியழைத்து ஒன்று சேர்ந்து உண்கின்றன. ஏனைய பிற உயிரினங்களும் இவ்வாறே உணவைத் தம் இனத்துடன் சேர்ந்து உண்கின்றன. நாம் என்ன செய்கிறோம்?

 நெற்றி வியர்வை நிலத்தில் விழப் பாடுபட்டு உழைத்து மனித குலத்தவர்க்கு உணவை உற்பத்தி செய்யும் விவசாயிகளின் விளைபொருட்களை மிகவும் குறைந்த விலைக்கு இடைத் தரகர்கள் மூலம் வாங்கி அவற்றைப் பத்து மடங்கு விலைக்கு சந்தையில் விற்கிறோம். விவசாயிகளின் வயிற்றில் அடிக்கிறோம். அவர்கள் தம் விளைநிலங்களை விற்கத் தூண்டி அந்நிலங்களை அழிக்கிறோம். நாட்டையும் நாட்டு மக்களையும் காக்க்கவென்று நாம் தேர்ந்தெடுக்கும் அரசியல்வாதிகள் தம் கடமையை மறந்து சுயநலம் பேணுவதையும் தாம் மட்டும் பெரும்பொருள் சேர்த்து வாழ நாட்டு மக்களை வறுமையில் வாடவிட்டுப் பின் அவர்களைப் பிச்சையெடுக்கும் நிலைக்குத் தள்ளுவதற்கொப்பாக இலவச அரிசி என்றும் ஏழைகள் மறுவாழ்வு  பெற உதவுகிறோம் என்று நலத்திட்ட உதவிகள் எனும் பெயரில் மேலும் கொள்ளையடித்து விலைவாசியை ஏற்றி சமுதாயத்தை சீர்குலைக்கின்றனர். 

முறையாக ஆட்சி நடைபெற்றால் அனைவருக்கும் கல்வியும், வேலை வாய்ப்பும், மருத்துவ உதவியும் தவறாது கிடைக்கும் எனும் நிலையிருக்கையில் சாதி மதங்களின் பெயரால் இட ஒதுக்கீடு எனப் பாகுபாடு செய்து மக்களிடையே ஒற்றுமை குலையக் காரணமாகும் அரசியல்வாதிகளின் சூழ்ச்சியை உணராமல் நாம் நம்முள்ளே சண்டை செய்து வேற்றுமையை வளர்க்கிறோம்.

இவ்வுலகில் இல்லாததொன்றில்லை. இயற்கை வளங்கள் எல்லாம் நமக்கே சொந்தம். அவற்றை முறையாகப் பகிர்ந்துண்டு வாழ்வோமெனில் அனைவருக்கும் வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தும் உறுதியாகக் கிடைக்கும் என்பதை உணராமல் நாம் ஒவ்வொருவர் பெயரிலும் சொத்து சேர்க்கவும் பிறரை விட வசதியான வாழ்வு வாழவும் மட்டும் பாடுபடுகிறோம். இத்தகைய சுயநல முயற்சிகளில் மனதைச் செலுத்தி இயற்கை வளங்கள் அழிக்கப்படுவதைக் கண்டும் காணாமல் வாழ்கிறோம். பதவியிலிருப்பவர்கள் ஆற்று மணலை தினமும் அள்ளிச் சென்று நிலத்தடி நீர் வற்றச் செய்வதும் ஆறுகள் வற்றிப் போகச் செய்வதும் கண்கூடாகத் தெரிந்தும் நாம் இத்தகைய முறைகேடுகளைத் தடுக்க ஒன்று சேர்ந்து போராடுவதில்லை. 

இறைவன் நமக்கு அளித்துள்ள இன்பங்களை அனுபவிக்காமல் நம்மிடம் இல்லாததை நினைத்து ஏங்குவதும் வாழ்நாளை வீணாக்கி நம்மை நாமே துன்புறுத்திக் கொள்வதுடன் பிறரையும் துன்பத்துக்குள்ளாக்குவதும் நம் அறிவுக்கு அழகல்லவே. உலகைக் காக்க நம்மாலியன்றதைச் செய்தோமெனில் நமது தேவைகள் தானாகவே பூர்த்தியாகும் எனும் உண்மையை அனைவரும் உணர்ந்து சுயநலம் விடுத்து எல்லோரும் ஒன்றுபட்டு உலக நலக் கருதி உழைத்து உயர்வதே ஆறறிவு படைத்த மனிதகுலத்துக்குப் பெருமை சேர்க்கும்.

பகுத்துண்டு பல்லுயி ரோம்புதல் ஆன்றோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை.


திரைப்படம்: ஆசை முகம்
இயற்றியவர்: கவிஞர் வாலி
இசை: எஸ்.எம். சுப்பையா நாயுடு
பாடியவர்: பி.பி. ஸ்ரீநிவாஸ்

எத்தனை எத்தனை இன்பமடா இவை
எல்லாம் உனக்கே சொந்தமடா
எத்தனை எத்தனை இன்பமடா இவை
எல்லாம் உனக்கே சொந்தமடா

மரம் படைத்தான் ஒரு கொடி படைத்தான் அந்த
மரத்தைத் தழுவி அதைப் படர வைத்தான் படர வைத்தான்
மரம் படைத்தான் ஒரு கொடி படைத்தான் அந்த
மரத்தைத் தழுவி அதைப் படர வைத்தான்
மலர் படைத்தான் நறுமணங் கொடுத்தான் அதில்
வடியும் தேனையும் உனக்களித்தான்
மலர் படைத்தான் நறுமணங் கொடுத்தான் அதில்
வடியும் தேனையும் உனக்களித்தான்

எத்தனை எத்தனை இன்பமடா இவை
எல்லாம் உனக்கே சொந்தமடா

உன்னைப் படைத்தான் ஒரு பெண்ணைப் படைத்தான் காதல்
உறவு கொள்ளவும் வழிவகுத்தான் வழிவகுத்தான்
உன்னைப் படைத்தான் ஒரு பெண்ணைப் படைத்தான் காதல்
உறவு கொள்ளவும் வழிவகுத்தான்
பொன்னைப் படைத்தான் பல பொருள் படைத்தான் இந்த
பூமியில் சொர்க்கம் காண வைத்தான்
பொன்னைப் படைத்தான் பல பொருள் படைத்தான் இந்த
பூமியில் சொர்க்கம் காண வைத்தான்

எத்தனை எத்தனை இன்பமடா இவை
எல்லாம் உனக்கே சொந்தமடா

கண் கொடுத்தான் நீ காண்பதற்கு பல
காட்சி தந்தான் கண்டு களிப்பதற்கு களிப்பதற்கு
கண் கொடுத்தான் நீ காண்பதற்கு பல
காட்சி தந்தான் கண்டு களிப்பதற்கு
மனங் கொடுத்தான் ஒன்றை நினைப்பதற்கு நல்ல
மதி கொடுத்தான் எண்ணிப் பார்ப்பதற்கு
மனங் கொடுத்தான் ஒன்றை நினைப்பதற்கு நல்ல
மதி கொடுத்தான் எண்ணிப் பார்ப்பதற்கு

எத்தனை எத்தனை இன்பமடா இவை
எல்லாம் உனக்கே சொந்தமடா

ஆஹஹஹாஹஹா ஆஹஹஹா ஓஹோ 
ஹோஹொஹோஹொஹோ ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக