ஞாயிறு, 20 அக்டோபர், 2013

இன்பக் கனா ஒன்று கண்டேன்

மாயா உலகிலே மனம் மயங்கி மதி கலங்கி எதற்கெடுத்தாலும் வாடுவதும் வருந்துவதுமாக ஓயாத் துயர்பட்டு உழலும் மானுடர்களே! தேக சம்பத்தால் விளைந்த ஆணவமெனும் தொழுநோய் பிடித்தும் தேம்பியலையும் மனதைத் தேற்ற வழி தெரியாமல் துயருறும் நம் துன்பங்கள் யாவும் நீக்கி இன்பமெய்த வழி ஒன்றே ஆகும். அதுவே தெய்வபக்தி. நான் என்பதும் நீ என்பதும் எனது உனதென்பதும் அறியாமையால் விளையும் பொய்த் தோற்றங்களே என்பதை உணர்ந்தால் இவ்வுலகில் உள்ள பொருட்களாலும் ஐம்புலன்களால் நாம் அடையும் சிற்றின்பங்களாலும் மயங்காமல் உள்ளத் தெளிவுபெற்று உய்யலாம். அழியும் உடல்களைத் தாங்கி ஆணவத்தாலழியும் மானுடரிடம் மெய்யன்பை எதிர்பார்த்து ஏமாற்றமடையாமல் அழியா மெய்ப்பொருளான ஆண்டவனைச் சரணடைந்து அவன் மேல் அன்பு கொண்டு அவன் அருள் மழையில் நனைந்து மகிழ்வதே பேரின்பமாகும். 

கோதை ஆண்டாள் பிள்ளைப் பிராயத்திலேயே கண்ணன் மேல் அளவிலா அன்பு கொண்டு அவனையே தன் மணாளனாக வரித்தாள். அவனுக்கு தினமும் தன் கைகளாலேயே அழகிய மலர் மாலைகளைத் தொடுத்து, அதனை அவன் அணியுமுன்னர் தான் அணிந்து மகிழ்ந்து அவன் நாமமதே மூச்சாக வாழ்ந்திருந்து அவனை அடைந்து அவனுடன் ஐக்கியமாகி மாயையிலிருந்து விடுபட்டு இறைநிலையெய்தினாள். தேவர் தலைவன் மகள் தெய்வயானையும் மலைக்குறமகள் வள்ளியும் முருகனையே மணாளனாக அடையவேண்டித் தவம் புரிந்து அவனை மணமுடித்து அவனோடு இரண்டறக் கலந்து தெய்வநிலையெய்தினர். 

பண்டைத் தமிழ்ப்புலவர்கள் இத்தகைய இறைக்காதலில் பெண்களைக் காதலியாகவும் இறைவனைக் காதலனாகவும் வைத்துத் தம் காவியங்களைப் படைத்தனர். மஹாகவி பாரதியார் இந்நிலையிலிருந்து மாறுபட்டு ஆணைக் காதலனாகவும் இறைவியைக் காதலியாகவும் வைத்துக் கவிதைகள் புனைந்தார். 

திருமணப் பருவமெய்திய ஒவ்வொருவரும் தனக்கு அமையவிருக்கும் வாழ்க்கைத் துணையை எண்ணிக் கனவு காண்பது இயல்பேயாயினும் அக்கனவுகளில் அடையும் சுகம் மிகவும் சொற்பமானதே. ஆனால் அந்த தெய்வத்தையே மணாளனாக வரித்த இப்பெண்டிர் காணும் கனவோ பேரின்பம் தரவல்லது என்பதை யாரும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இறைவன் அருள் பெற்று ஆட்கொள்ளப் படும் ஒருபக்தையின் பரவச நிலைக்கு ஈடு இணை கிடையாது. அவள் எய்தும் இன்பத்துக்கு அளவும் முடிவும் கிடையாது. என்றென்றும் நிலையான இன்பநிலை பெற விரும்புவோர் செய்யத்தக்கது இறைவனைச் சரணடைதல் ஒன்றாயாகும். இறைவன் மேல் கொள்ளும் காதலால் விளையும் இன்பம் தேக சம்பந்தம் உள்ளதல்ல, அது ஆன்மா ஆண்டவனுடன் ஐக்கியமாகும் நிலையாகும். அழகன் முருகன் மேல் ஆசை வைத்த ஒரு பக்தை பாடுவதாக அமைந்த பாடலொன்று இன்றைய பாடலாக மலர்கிறது.


இயற்றியவர்: கு.சா. கிருஷ்ணமூர்த்தி
பாடியவர்: எம்.எம். தண்டபாணி தேசிகர்

இன்பக் கனா ஒன்று கண்டேன்
இன்பக் கனா ஒன்று கண்டேன் பாங்கி
இன்பக் கனா ஒன்று கண்டேன் பாங்கி
என்னுளம் மகிழ்வு கொண்டேன் என் பாங்கி
இன்பக் கனா ஒன்று கண்டேன் பாங்கி
என்னுளம் மகிழ்வு கண்டேன் என் பாங்கி
இன்பக் கனா ஒன்று கண்டேன்

தென்பழனி ஊரன் சேவற்கொடிக் காரன்
தென்பழனி ஊரன் சேவற்கொடிக் காரன்
என்னுயிர்க் காதாரன் இரவில் எனையடைய
என்னுயிர்க் காதாரன் இரவில் எனையடைய

இன்பக் கனா ஒன்று கண்டேன்

பன்னிரு தோளழகும் பரந்த விழியழகும்
மின்னொளி வேலழகும் மேனியழகும்
பன்னிரு தோளழகும் பரந்த விழியழகும்
மின்னொளி வேலழகும் மேனியழகும் காதல்
கன்னல் மொழியழகும் களிற்றின் நடையழகும்
கன்னல் மொழியழகும் களிற்றின் நடையழகும்
பொன்மயில் தன்னழகும் புன்னகையின் அழகும்
பொன்மயில் தன்னழகும் புன்னகையின் அழகும்

இன்பக் கனா ஒன்று கண்டேன் பாங்கி
என்னுளம் மகிழ்வு கொண்டேன் என் பாங்கி
இன்பக் கனா ஒன்று கண்டேன்

தென்றல் மலர் மணத்தை வாரியிறைத்தெங்கும்
திங்கள் நடந்ததென்தன் தேகம் சிலிர்த்தது
தென்றல் மலர் மணத்தை வாரியிறைத்தெங்கும்
திங்கள் நடந்ததென்தன் தேகம் சிலிர்த்தது
அன்றிற் பேடோடு நடம் ஆடிக்களித்த போது
அன்றிற் பேடோடு நடம் ஆடிக்களித்த போது
ஆறுமுகன் வந்தென்னை அணைந்து சுகித்ததைப் போல்
ஆறுமுகன் வந்தென்னை அணைந்து சுகித்ததைப் போல்

இன்பக் கனா ஒன்று கண்டேன்

முன்னர் யான் கண்டறியா மோகக் கிளர்ச்சி பல
மூண்டது என்னுள்ளத்தில் முற்றும் எனை மறந்தேன்
முன்னர் யான் கண்டறியா மோகக் கிளர்ச்சி பல
மூண்டது என்னுள்ளத்தில் முற்றும் எனை மறந்தேன்
உன்னைக் கைவிடேன் என்றோர் உறுதிமொழியும் தந்தான்
உன்னைக் கைவிடேன் என்றோர் உறுதிமொழியும் தந்தான்
ஒப்பிவிட்டேன் நானினி தப்பிதம் ஏதுமுண்டோ?
ஒப்பிவிட்டேன் நானினி தப்பிதம் ஏதுமுண்டோ?

இன்பக் கனா ஒன்று கண்டேன்

அன்புடன் பேசி என்னை அணைத்துப் பிடித்திழுத்தான்
அதரம் கனிய முத்தம் அமுதமெனக் கொடுத்தான்
அன்புடன் பேசி என்னை அணைத்துப் பிடித்திழுத்தான்
அதரம் கனிய முத்தம் அமுதமெனக் கொடுத்தான்
துன்பம் பிறப்பிறப்பு சோர்வுமில்லாதொழித்தான்
துன்பம் பிறப்பிறப்பு சோர்வுமில்லாதொழித்தான்
தோகையே இதன் பயன் சொல்லடி நீயறிந்தால்
தோகையே இதன் பயன் சொல்லடி நீயறிந்தால்

இன்பக் கனா ஒன்று கண்டேன் பாங்கி
என்னுளம் மகிழ்வு கொண்டேன் என் பாங்கி
இன்பக் கனா ஒன்று கண்டேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக