ஞாயிறு, 20 அக்டோபர், 2013

உள்ளத்திலே உரம் வேணுமடா

வாழ்க்கை என்பது ஒரு போராட்டம். அதில் நாமெல்லோரும் நம்மையறியாமல் தள்ளப்பட்டுள்ளோம். இங்கே தனது இலக்கு எது என்பதைத் தெளிவாக உணர்பவன் வெற்றியடைகிறான். இலக்கில்லாமல் இன்ப நாட்டம் கொண்டு அலைபவன் தோல்வியடைகிறான். ஒவ்வொருவரும் தன் வாழ்வின் இலக்கை நிர்ணயிக்கையில் அது ஒரு மாபெரும் வெற்றியைத் தேடித்தருவதாக அமைத்துக்கொள்தல் அவசியம். அத்தகைய வெற்றி தன் ஒருவருக்கு மட்டுமின்றித் தன்னைச் சேர்ந்த பலருக்கும் ஏனைய சமுதாயத்தினருக்கும் நன்மை பயப்பதாக அமையுமாகில் அது புகழைத் தேடித் தருகிறது. பிறரது நலன் கருதாமல் தனது சுகம் ஒன்றை மட்டுமே கருதி நிர்ணயிக்கப்படும் இலட்சியம் புகழைத் தராது மாறாகப் பிறர் நம்மை இகழ்ந்து வெறுத்தொதுக்கும் நிலையை ஏற்படுத்தக்கூடும். உதாரணத்துக்கு மருத்துவத் துறையில் ஆராய்ச்சி செய்யும் ஒருவர் தன் ஆராய்ச்சியின் வாயிலாகப் புதிய மருந்தொன்றைக் கண்டுபிடிக்கையில் அம்மருந்து சொற்ப செலவிலோ இலவசமாகவோ உலகிலுள்ள மக்கள் அனைவருக்கும் பயன்படுமானால் அவர் அடையும் புகழுக்கு அளவேயில்லை. மாறாகத் தன் கண்டுபிடிப்பு பெரும் தொகை செலவழித்து மருத்துவ சிகிச்சை பெற முன்வருவோர்க்கு மட்டுமே பயன் பட்டு அதனால் பெரும் செல்வம் ஈட்ட அவர் முற்படுவாரெனில் அவர் பொருள் ஒன்றைத் தவிர வேறு எவ்விதப் பயனையும் அடைய மாட்டார், புகழையும் அடையார்.

இலக்கை நிர்ணயித்த பின்னர் அதனை அடையப் பாடுபட வேண்டும். எந்த ஒரு உன்னத இலட்சியத்தையும் ஒருவர் அடைய முயல்கையில் ஏனைய அனைவரும் அவருக்கு உறுதுணையாயிருப்பர் என்பதற்கு எவ்வித உத்தரவாதமுமில்லை. மாறாக அவர் தனது இலட்சியத்தை அடைய விடாமல் அவரது முயற்சிகளுக்கு முட்டுக் கட்டை போட்டு அவரைத் தோல்விப்பாதையில் செலுத்தப் பலர் முற்படக்கூடும். அவரது முயற்சியை எள்ளி நகையாடி அவமரியாதை செய்யக்கூடும். அத்தகைய தீய சக்திகளின் முயற்சிகளுக்கு பலியாகாமல் தன் இலட்சியப் பாதையில் தொடர்ந்து செல்லஒருவர்க்கு மிகவும் இன்றியமையாதவை உள்ளத்துறுதியும் உண்மை உழைப்பும் அனைவரிடமும் கொள்ளும் ஒற்றுமை உணர்வுமே ஆகும்.

மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்டுஞ்சார்
எவ்வெவர் தீமையு மேற்கொள்ளார் - செவ்வி
அருமையும் பாரா ரவமதிப்புங் கொள்ளார்
கருமமே கண்ணாயி னார்

எனும் குமரகுருபரர் நீதி நெறி விளக்கப் பாடல் தரும் அறிவுரைகளை மனதில் நிலைநிறுத்தித் தன் முயற்சியை என்றும் கைவிடாது தொடர்ந்து தன் இலட்சியப் பாதையில் பயணம் செய்பவர் வெற்றியடைவது உறுதி.

உள்ளத்திலே உரம் வேணுமடா

திரைப்படம்: விஜயபுரி வீரன்
இயற்றியவர்: கே. ஆத்மநாதன்
இசை: டி.ஆர். பாப்பா
பாடியவர்: ஏ.எம். ராஜா

உள்ளத்திலே உரம் வேணுமடா
உள்ளத்திலே உரம் வேணுமடா
உண்மையிலே திறம் காணுமடா
ஒற்றுமையால் வெற்றி ஓங்குமடா

உள்ளத்திலே உரம் வேணுமடா
உள்ளத்திலே உரம் வேணுமடா
உண்மையிலே திறம் காணுமடா
ஒற்றுமையால் வெற்றி ஓங்குமடா

வல்லவன் போலே பேசக்கூடாது
வானரம் போலே சீறக்கூடாது
வல்லவன் போலே பேசக்கூடாது
வானரம் போலே சீறக்கூடாது
வாழத் தெரியாமலே கோழைத்தனமாகவே
வாலிபத்தை விட்டு விடக் கூடாது
வாழத் தெரியாமலே கோழைத்தனமாகவே
வாலிபத்தை விட்டு விடக் கூடாது

மானம் ஒன்றே பிரதானமென்றே
மறந்து விடாதே வாழ்வினிலே
மானம் ஒன்றே பிரதானமென்றே
மறந்து விடாதே வாழ்வினிலே

உள்ளத்திலே உரம் வேணுமடா
உள்ளத்திலே உரம் வேணுமடா
உண்மையிலே திறம் காணுமடா
ஒற்றுமையால் வெற்றி ஓங்குமடா

வண்டியும் ஒரு நாள் ஓடத்திலேறும்
ஓடமும் ஒரு நாள் வண்டியிலேறும்
வண்டியும் ஒரு நாள் ஓடத்திலேறும்
ஓடமும் ஒரு நாள் வண்டியிலேறும்
ஏட்டுச் சுரைக்காயெல்லாம் மூட்டை கட்டியாகணும்
நாட்டினிலே வீரம் பொங்கும் நாள் வரணும்
ஏட்டுச் சுரைக்காயெல்லாம் மூட்டை கட்டியாகணும்
நாட்டினிலே வீரம் பொங்கும் நாள் வரணும்

மானம் ஒன்றே பிரதானமென்றே
மறந்து விடாதே வாழ்வினிலே
மானம் ஒன்றே பிரதானமென்றே
மறந்து விடாதே வாழ்வினிலே

உள்ளத்திலே உரம் வேணுமடா
உள்ளத்திலே உரம் வேணுமடா
உண்மையிலே திறம் காணுமடா
ஒற்றுமையால் வெற்றி ஓங்குமடா

உள்ளத்திலே உரம் வேணுமடா
உள்ளத்திலே உரம் வேணுமடா
உண்மையிலே திறம் காணுமடா
ஒற்றுமையால் வெற்றி ஓங்குமடா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக