செவ்வாய், 17 ஜனவரி, 2012

உல்லாசம் தேடும் எல்லோரும் ஓர் நாள்

நாம் இவ்வுலகில் பிறந்த போது நம்முடன் எதனையும் கொண்டு வரவில்லை. இவ்வுலகை விட்டு நிச்சயமாக் ஒரு நாள் செல்கையில் எதனையும் கொண்டு போகப் போவதுமில்லை. இங்கு பிறக்கு முன் நாம் இருந்தோமா இல்லையா என்பதும் தெரியாது. இறந்த பின்னர் இருப்போமா, மாட்டோமா என்பதும் தெரியாது. காலத்தின் கொத்தடிமைகளாக ஏதோ சொற்பகாலம் ஒரு மாயத் தோற்றம் கொண்ட உலகில் வாழ்ந்து மறையும் நாம் நம் அற்பமான நிலையை மறந்து மமதையால் பிறரை விடவும் உயர்வானவராக நம்மை நாமே எண்ணிக்கொண்டு பிறரை மதியாது, பிறர் மேல் அன்பு செலுத்தாது நம் சுகம் ஒன்றே பெரிதென எண்ணி வாழ்கிறோம்.

அவ்வாறான சுயநல வாழ்வு வாழ்வோமெனில் நாம் இவ்வுலகில் இருக்கும் போதும் நம்மை உலகத்தார் யாரும் மதிக்க மாட்டார்கள். நம் உற்றார், உறவினரும் உடன்பிறந்தோருமே நம்மை இழிவாக எண்ணி இகழ்வார்கள். நாம் இறந்த பிறகும் பழியே மிஞ்சும். நம்மை அனைவரும் மறந்து போவார்கள். ஏதோ ஒரு சிலர் நம்மை ஏதோ ஒரு சமயம் நினைவுகூர்ந்தாலும் நம்மை ஏளனமே செய்வர்.

சுயநலத்தை ஒதுக்கிவிட்டு உலக நன்மையையே பெரிதெனக் கொண்டு சேவை செய்தோமெனில் நம்மை யாவரும் நாம் வாழ்கின்ற காலத்திலும் மறைந்த பின்னரும் என்றும் மிகுந்த அன்புடனும் மரியாதையுடனும் நினைவு கொள்வர். நாம் செய்கின்ற ஒவ்வொரு செய்கையும் நம் வருங்கால சந்ததியினரின் நல்வாழ்வுக்கு வழிகோலுவதாக அமைய வேண்டும். பெரும்பொருள் சேர்த்து அதைக்கொண்டு வானளாவிய கட்டடத்தைக் கட்டிக் குடியிருந்து வாழ்வை சுகமாக அனுபவிக்க விழைகையில் சுற்றுப்புறத்தில் தேங்கிய சாக்கடைகளும், குப்பை மேடுகளும் சூழ்ந்திருந்தால் நாமும் ஆரோக்யமாக வாழ இயலாது நம்மைச் சுற்றியுள்ள மக்களும் நல வாழ்வு பெற இயலாது. வீடுகளிலிருந்தும், வணிக நிறுவனங்கள் மற்றும் ஆலைகளிலிருந்தும் தினந்தோறும் வெளியேறும் குப்பைகளும், கழிவு நீரும், புகையும் பூமியையும் காற்று மண்டலத்தையும் தொடர்ந்து மாசு படுத்துகின்றன.

சுற்றுச் சூழலைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பிலிருக்கும் அரசுத் துறையினர் முறையாகத் தம் கடமையை நிறைவேற்றுகின்றனரா என்பதைத் தொடர்ந்து கண்காணித்து முறையாக நிறைவேற்றாவிடில் நினைவுறுத்தி அனைவரும் நன்மை பெற உதவுவது நம் ஒவ்வொருவரது கடமையாகும். இதற்கு நாம் முதலில் சமுதாய ரீதியில் ஒன்றுபட வேண்டும். நிச்சயம் ஒவ்வொரு ஊரிலும் சமுதாயப் பணியைத் தலையாய கடமையாகக் கொண்டு வாழ்வோர் இருக்கின்றனர். அவர்களுடன் நாமும் இணைந்து சேவை செய்தல் உலக நலன் பெருக வழிவகுக்கும்.

பெறற்கரிய மானுடப் பிறவியைப் பெற்ற நாம் வாழ்நாளில் கருணையுள்ளவராக விளங்கி பொதுநலத்தைப் பேணி வாழ்வோமெனில் மனிதருள் தெய்வமெனப் போற்றப்பெற்று இறைநிலையை எய்தலாம். என்றோ ஒரு நாள் நாம் சொல்லாமல் இறைவனடியையே சேர்வது நிச்சயமாதலால் வாழ்நாளில் உள்ளத் தூய்மையுடன் விளங்குதல் நலம்.

உல்லாசம் தேடும் எல்லோரும் ஓர் நாள்

உல்லாசம் தேடும் எல்லோரும் ஓர் நாள்
சொல்லாமல் போவார் அல்லாவிடம்

உல்லாசம் தேடும் எல்லோரும் ஓர் நாள்
சொல்லாமல் போவார் அல்லாவிடம்
அவர் அன்றாடம் தேடும் செல்வங்காளாலே
பின்னோர்கள் சந்தோஷம் கொண்டாடுவார்
அவர் அன்றாடம் தேடும் செல்வங்காளாலே
பின்னோர்கள் சந்தோஷம் கொண்டாடுவார்

உல்லாசம் தேடும் எல்லோரும் ஓர் நாள்
சொல்லாமல் போவார் அல்லாவிடம்

தாயாரின் கையிருந்து சம்சாரம் கைக்கு வந்து
நோயாகும் முதுமை கொண்டு கண் மூடுவார்

ஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆ
ஆஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆ

தாயாரின் கையிருந்து சம்சாரம் கைக்கு வந்து
நோயாகும் முதுமை கொண்டு கண் மூடுவார்
அதை ஓர் நாளும் எண்ணாமல் ஆடுவார்
ஒன்றோடு மற்றொன்றை நாடுவார்
அதை ஓர் நாளும் எண்ணாமல் ஆடுவார்
ஒன்றோடு மற்றொன்றை நாடுவார்

உல்லாசம் தேடும் எல்லோரும் ஓர் நாள்
சொல்லாமல் போவார் அல்லாவிடம்

குலை ஈன்ற வாழை மாண்டு போகும் விரைவிலே
அதன் இளையன் கன்று வளர்ந்து பொங்கும் உலகிலே
குலை ஈன்ற வாழை மாண்டு போகும் விரைவிலே
அதன் இளையன் கன்று வளர்ந்து பொங்கும் உலகிலே

தினம் தோன்றும் வாழ்வில் மனிதரெல்லாம் ஒரு முறை
இந்தத் துணையை எண்ணிப் பார்க்க வேணும் மனதிலே

உல்லாசம் தேடும் எல்லோரும் ஓர் நாள்
சொல்லாமல் போவார் அல்லாவிடம்
அவர் அன்றாடம் தேடும் செல்வங்காளாலே
பின்னோர்கள் சந்தோஷம் கொண்டாடுவார்
உல்லாசம் தேடும் எல்லோரும் ஓர் நாள்
சொல்லாமல் போவார் அல்லாவிடம்

சலசல ராகத்திலே

1962-63 ஆண்டுகளில் நான் நான்காம்-ஐந்தாம் வகுப்புகள் படிக்கையில் என் தந்தை தாயுடனும் சகோதர சகோதரிகளுடன் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த கிணத்துக்கடவு எனும் ஊரின் அருகில் 2 கி.மீ. தூரத்தில் அமைந்திருந்த பகவதி பாளையம் எனும் ஒரு சிறு கிராமத்தில் வசித்தேன். அப்போது நாங்கள் குடியிருந்த வீட்டுக்கு மாத வாடகை ரூ 10/- இப்பொழுது 10 ரூபாய்க்கு ஒருவர் ஒரு வேளை உணவும் வாங்க முடியாது. எங்கள் வீடு அக்கிராமத்தில் இருந்த முக்கியப் பிரமுகரது வயலின் அருகாமையில் இருந்தமையால் பள்ளி சென்று வந்தபின் நான் பொழுதைக் கழிப்பது அவ்வயலிலும் அருகிலுள்ள மரங்கள் நிறைந்த பகுதியிலுமே என வாழ்க்கை இயற்கையோடு இயைந்து இன்பகரமாக இருந்தது. வயலில் பெரும்பாலும் கரும்பு பயிரிடுவர். ஒரு பயிர் அறுவடை முடிந்ததும் வேறு ஏதேனும் தானியப் பயிரை விதைத்து அப்பயிற் முழு வளர்ச்சி அடையுமுன்பே மண்ணுடன் சேர்த்து உழுதுவிடுவர். சிறிது காலம் கழித்து மீண்டும் கரும்பு பயிரிடுகையில் மண்ணுடன் சேர்த்து உழப்பட்ட பயிர்கள் மண்ணோடு மண்ணாக மக்கி, கரும்புப் பயிருக்கு உரமாக ஆகிவிடும். கரும்பு அறுவடை முடிந்த பின்னர் வயலின் அருகிலே இருந்த ஒரு கொட்டகையில் அக்கரும்பைச் சாறாகப் பிழிந்து பெரிய வாயகண்ட பாத்திரங்களில் காய்ச்சி, சில இரசாயனப் பொடிகளைக் காய்ச்சிய பாகின் மேல் தூவ அப்பாகிலுள்ள அழுக்குகள் யாவும் பொங்கி மேலெழுந்து ஓரமாக ஒதுங்கியவுடன் அவற்றை நீக்கி விட்டுப் பின் தூய பாகினை வெல்லம் செய்யும் அச்சுக்களில் ஊற்றி ஆற விடுவர்.

அச்சமயங்களில் அங்கே இருந்து வேடிக்கை பார்க்கும் எனக்கு சூடான வெல்லம் கிடைக்கும். அதன் சுவையே அலாதி. அவ்வயலில் ஒரு கிணறுண்டு. அக்கிணற்றிலிருந்து நீரை இறைக்க கபிலை என அழைக்கப்படும் ஒரு பாத்திரத்தை ஏற்றத்தில் கயிறு கொண்டு கட்டு, இரு மாடுகளைக் கொண்டு இறைத்து வயலுக்குப் பாய்ச்சுவர். கிணற்றின் அருகாமையில் இருக்கும் ஒரு பெரிய தொட்டியில் நீர் முதலில் நிரம்பிப் பின் அத்தொட்டியின் அடி பாகத்தில் பொருத்திய ஒரு சிறு குழாய் வழியே நீர் வயலுக்குப் பாயும். எனது குளியல் தினம் தோறும் அந்தத் தண்ணீர்த் தொட்டியிலேயே நிறைவேறும். நான் நீச்சல் கற்றுக்கொண்டது அத்தொட்டியிலேயே ஆகும்.

வயலின் நண்டுகள் நிறைந்திருக்கும் எனக்கு அமைந்த ஓரிரு நண்பர்களுடன் சேர்ந்து அந்த நண்டுகளை வேடிக்கை பார்ப்பதும் உண்டு. அக்கிராமத்தின் நுழைவாயிலில் ஒரு பெரிய அரசமரமும் அதனைச் சுற்றி ஒரு பெரிய திண்ணையும் இருந்தது. அத்திண்ணையில் கிராமத்தைச் சேர்ந்த பலர் அமர்ந்து உரையாடுவர். அந்த இடத்தில் அவ்வப்பொழுது திடகாத்திரமாக விளங்கிய ஒரு காளை மாட்டைக் கொண்டு பசுக்களுக்கு உடல் உறவின் வழியே கருத்தரிக்க வைப்பர். பல வீடுகளில் பசுக்களும் எருமைகளும் வளர்த்துப் பராமரித்ததால் சாணிக்குப் பஞ்சமிருக்காது. ஆங்காங்கே தெருவில் விழுந்து கிடக்கும் சாணியை அள்ளியெடுத்து வந்து வரட்டியாகத் தட்டி அடுப்பெரிக்கவும், பசுஞ்சாணியை வீட்டு வாசலை மெழுகவும். உபயோகிப்போம். தற்போது மாடுகள் எதுவும் இத்தகைய முறையில் கருத்தரிக்க வைக்கப்படுவதில்லை. மாறாக நாம் குளிர்பதனம் அருந்தப் பயன்படுத்தும் ஸ்ட்ரா போன்ற குழாய்களில் காளையின் விந்தினை குளிர் பதன நிலையில் பராமரித்து அதனைக் கொண்டே கருத்தரிக்க வைக்கப் படுகின்றன. தான் மட்டும் தாராளமாகத் தன் மனைவியுடன் வேண்டிய பொழுதெல்லாம் காதலின்பத்தைத் தவறாமல் அனுபவிக்கும் மனிதன் தனக்குத் தன் ரத்தத்தையே பாலாக்கித் தரும் பசுவுக்கு இயற்கையில் கிடைக்க வேண்டிய சுகத்தைத் தடுக்கிறான்.

பசுவின் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து கருத்தரிக்கச் செய்து அதன் இரத்தத்தைப் பாலாகக் கறந்து தானும் குடித்துப் பிறருக்கும் விற்று வயிறு வளர்க்கும் மனிதன் கறவை வற்றியவுடன் அப்பசுவை அடிமாடாகக் கேரளாவுக்கும் பிற இடங்களுக்கும் விற்றுவிடுகிறான். அவ்வாறு அடிமாடாக விற்கப்படும் பசுக்கள் பல லாரி முதலிய வண்டிகளில் ஏற்றப்பட்டும் கால்நடையாகவும் வெகுதூரம் கொண்டு செல்லப்பட்டு இறுதியில் கொலை செய்யப் படுகின்றன. இடையில் அவற்றுக்கு தாகம் தீர்க்கத் தண்ணீர் கூடத் தருவதில்லை.

இவை அனைத்திற்கும் மேலாக மனிதன் விளைநிலங்களை வீட்டு மனைகளாக வெகு வேகமாக மாற்றி வருவது மிகவும் அபாயகரமான போக்கு. இயற்கையை அழித்தால் மனிதன் வாழ இடமிருக்காது. இயற்கை அழிவைத் தடுத்து மனிதர் குலம் பன்னெடுங்காலம் வாழ வழி வகுப்பது நம் அனைவரது கடமை. ஏனெனில் நாம் ஒவ்வொருவரும் தற்போது தாங்கியிருக்கும் உடலைப் பிரிந்து மீண்டும் இதே மண்ணில் பிறந்தால் நாம் உண்ண உணவும் உயிர் வாழ உறைவிடமும் தரவல்லது இயற்கையே ஆகும். அத்துடன் பசு எர்மை முதலிய மிருகங்கள் கறவை வற்றிய பின்னரும் அவற்றை உரிய மருத்துவ வசதிகளும் தீனியும் கொடுத்து நல்ல முறையில் பராமரித்தல் வேண்டும். அதற்குரிய பலனை அவற்றின் சாணத்திலிருந்தே பெற இயலும். மாட்டு எருமைச் சாணத்திலிருந்து பயோ காஸ் எனும் எரிவாயு உற்பத்தி செய்யலாம். சாணத்தை இயற்கை உரமாக வயல்களுக்குப் பயன்படுத்தினால் நல்ல மகசூல் கிடைப்பதுறுதி. இரசாயன உரங்களையும் பலவகையான பூச்சி மருந்துகளையும் உபயோகித்து இயற்கையில் விளையும் உணவையும் விஷமாக்கிவிட்டோம் நாம்.

இயற்கையன்னையின் மடியில் ஓடிவரும் கங்கை நதியின் ஓரத்தில் ஒரு கன்னிப்பெண் அந்நதியின் அழகை ரசித்தவாறு இயற்கையில் தன் மனதை இசைத்துப் பாடும் ஒரு இன்பமான பாடல் இன்றைய பாடலாக இதோ:

சலசல ராகத்திலே

திரைப்படம்: ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
இயற்றியவர்: பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி
பாடியவர்: பி. சுசீலா
ஆண்டு: 1960

சலசல ராகத்திலே
டம்மு டும்மூ தாளத்திலே

சலசல ராகத்திலே
டம்மு டும்மூ தாளத்திலே
சத்தங்கள் போடுவதேன் கங்கையக்கா நீ
சங்கீதம் கத்துக்கொண்டதும் எங்கேயக்கா?

சலசல ராகத்திலே
டம்மு டும்மூ தாளத்திலே
சத்தங்கள் போடுவதேன் கங்கையக்கா நீ
சங்கீதம் கத்துக்கொண்டதும் எங்கேயக்கா?

ஓஓஓ ஓஓஓஓ ஓஓஓ ஓஓஓ ஓஓஓஓஓஓஓ

ஆத்துக்குள்ளே நானிருக்க அக்கரையிலே மனமிருக்க
ஆத்துக்குள்ளே நானிருக்க அக்கரையிலே மனமிருக்க
அலைமேலே அலை எழுந்து ஆளை வந்து தள்ளிடுதே
நேரத்திலே போகணும் நீண்ட கதை பேசணும்
ஆழத்தையும் தாண்டியே அன்பு முகத்தைப் பாக்கணும்
அன்பு முகத்தைப் பாக்கணும்

சலசல ராகத்திலே
டம்மு டும்மூ தாளத்திலே
சத்தங்கள் போடுவதேன் கங்கையக்கா நீ
சங்கீதம் கத்துக்கொண்டதும் எங்கேயக்கா

பச்சை மலை சாரலிலே பனியுறங்கும் பாறையிலே
பச்சை மலை சாரலிலே பனியுறங்கும் பாறையிலே
படைபோலே பறவையெல்லாம் பறந்து வந்து கூடுதே

மீனும் மீனும் மேயுதே வேடிக்கையாய்ப் பாயுதே
ஆனந்தமாய்க் கண்களும் அவரை நாடிப் போகுதே
அவரை நாடிப் போகுதே ஓஓஓஓ

சலசல ராகத்திலே
டம்மு டும்மூ தாளத்திலே
சத்தங்கள் போடுவதேன் கங்கையக்கா நீ
சங்கீதம் கத்துக்கொண்டதும் எங்கேயக்கா?

சலசல ராகத்திலே
டம்மு டும்மூ தாளத்திலே
சத்தங்கள் போடுவதேன் கங்கையக்கா நீ
சங்கீதம் கத்துக்கொண்டதும் எங்கேயக்கா?

இந்த ஆட்டுக்கும் நம்ம நாட்டுக்கும்

எல்லாம் வல்ல தெய்வமது எங்கும் உள்ளது நீக்கமற
சொல்லால் மட்டும் நம்பாதே சுயமாய்ச் சிந்தித்தே தெளிவாய்
வல்லாய் உடலில் இயக்கமவன் வாழ்வில் உயிரில் அறிவும் அவன்
கல்லார் கற்றார் செயல் விளைவாய்க் காணும் இன்ப துன்பமவன்.
அவனின் இயக்கம் அணுவாற்றல் அணுவின் கூட்டுப் பக்குவம் நீ
அவனில் தான் நீ உன்னில் அவன் அவன் யார்? நீயார்? பிரிவேது?
அவனை மறந்தால் நீ சிறியோன் அவனை அறிந்தால் நீ பெரியோன்
அவன் நீ ஒன்றாய் அறிந் த இடம் அறிவு முழுமை அ து முக்தி.

- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி

எத்தனை ஞானிகள் தோன்றி எத்தனை அறிவுரைகளை எப்படி, எங்கு, என்று வழங்கினாலும் அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச் சொல் எனும் நான்கையும் தவிர நன்னெறிகள் எவற்றையும் ஏறெடுத்தும் பாராத இந்தப் பாழும் மனிதர் கூட்டம் சுய சிந்தனையை இழந்து செம்மரியாட்டுக் கூட்டம் ஒன்றன் பின் ஒன்றாய் சாய்வது போலக் கண்மூடித்தனமாக நெறிகெட்டு வாழ்ந்து அல்லலுறுகின்றனர்.

ஏசுபிரான் எல்லோரும் பிற உயிர்களைக் கருணையுடன் பேணி இரக்க சிந்தனையுடன் வாழச் சொன்னார், ஆனால் மனிதன் ஏசுநாதர் கையிலிருக்கும் ஆட்டையே உண்டு ஏசுவையே அவமதிப்பதுடன், ஏசுவின் வழியே தான் நடப்பதாகவும் பொய்யுரைத்து, தன்னையும் ஏமாற்றிக் கொண்டு பிறரையும் ஏமாற்றிப் பெரும் பாபத்தில் விழுகிறான். அண்ணல் காந்தியடிகளின் புகழை அனுதினமும் பாடுவான், அவரது சிலைகளைப் பல்வேறு நாடு நகரங்களிலும் நிறுவுவான், அவரது பிறந்த நாளன்று அவரது சமாதிக்குச் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செய்வான், அவரது சிலைக்கு ஆளுயர மாலை அணிவிப்பான், ஆனால் அவரது கொள்கைகளையும் அவர் கடைபிடித்த வாழ்க்கை நெறிகளையும் சற்றும் பின்பற்றாது எந்நாளும் பொய்யுரைத்துப் பிறரை என்றும் ஏமாற்றியே வாழ்வான்.

நாட்டில் நல்லவர்கள் பலர் தன் கண்முன்னே இருக்கக்கண்டும் அவர்களைத் தன் தலைவராகக் கொள்ளாமல் கருப்புப் பணத்தின் உதவியுடன் கூலி கொடுத்து ஆளை அமர்த்தி, ஆடம்பரமாக மேடையமைத்து, அலங்கார வளைவுகள் வைத்து, பேருந்துகளின் மூலம் பெருங்கூட்டத்தைச் சேர்த்து ஆர்ப்பாட்டம் செய்து தன் பலத்தைக் காட்டுபவனையே தன்னிகரில்லாத் தலைவன் என்று கொண்டாடுகிறான் பேதை மனிதன். திருட்டும் புரட்டும் நிறைந்தவர்களுக்கே திரும்பத் திரும்ப வாக்களித்து மீண்டும் மீண்டும் ஏமாந்து யானை தன் தலையில் தானே மண்ணை வாரிப் போட்டுக் கொள்வது போல் கெட்டு சீரழிகிறான்.

நாயாய் மனிதன் பிறந்திருந்தாலும் நன்றியெனும் குணம் நிறைந்திருக்கும்
நரியாய் அவனே உருவெடுத்தாலும் தந்திரமாவது தெரிந்திருக்கும்
காக்கைக் குலமாய் அவதரித்தாலும் ஒற்றுமையாவது வளர்ந்திருக்கும்
காற்றாய் நெருப்பாய் நீராய் இருந்தால் கடுகளவாவது பயனிருக்கும்
ஆறறிவுடனே பேச்சும் பாட்டும் அறிந்தே மனிதன் பிறந்து விட்டான் அந்த
ஆறாம் அறிவைத் தேறா அறிவாய் அவனே வெளியில் விட்டு விட்டான்

- கவிஞர் கண்ணதாசன்

செம்மரி ஆட்டுக்கூட்டம் போல் திக்குத் தெரியாமல் செல்லுமிடமறியாது செல்லும் இப்பாழும் மனிதர்கள் திருந்துவதென்றோ அன்றே உலகம் உய்யலாகும்.

http://www.thamizhisai.com/tamil-cinema/paasavalai/intha-aattukkum.php

இந்த ஆட்டுக்கும் நம்ம நாட்டுக்கும்

இந்த ஆட்டுக்கும் த த ட்ர்ர்ர்ர்ர்ர்ர்
இந்த ஆட்டுக்கும் நம்ம நாட்டுக்கும் பெரும்
கூட்டிருக்குது கோனாரே - இதை
ஓட்டி ஓட்டித் திரிபவர்கள் ஒரு முடிவும் காணாரே
ஓட்டி ஓட்டித் திரிபவர்கள் ஒரு முடிவும் காணாரே

த அஆ த த த ட்ர்ர்ர்ர்ர்ர்ர்ரி

இந்த ஆட்டுக்கும்
இந்த ஆட்டுக்கும் நம்ம நாட்டுக்கும் பெரும்
கூட்டிருக்குது கோனாரே - இதை
ஓட்டி ஓட்டித் திரிபவர்கள் ஒரு முடிவும் காணாரே
ஓட்டி ஓட்டித் திரிபவர்கள் ஒரு முடிவும் காணாரே

தில்லாலங்கடி தில்லாலங்கடி எல்லாம் இப்படிப் போகுது
நல்லாருக்குள் பொல்லாரைப் போல் நரிகள் கூட்டம் வாழுது
தில்லாலங்கடி தில்லாலங்கடி தில்லாலங்கடி தில்லாலே

இந்த ஆட்டுக்கும்
இந்த ஆட்டுக்கும் நம்ம நாட்டுக்கும் பெரும்
கூட்டிருக்குது கோனாரே - இதை
ஓட்டி ஓட்டித் திரிபவர்கள் ஒரு முடிவும் காணாரே
ஓட்டி ஓட்டித் திரிபவர்கள் ஒரு முடிவும் காணாரே

த த ட்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரி த

கணக்கு மீறித் தின்றதாலே கனத்த ஆடு சாயுது
ஆஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
ஆஆஆஆஆஆஆஆஆஆ
கணக்கு மீறித் தின்றதாலே கனத்த ஆடு சாயுது அதைக்
கண்ட பின்னும் மந்தையெல்லாம் அதுக்கு மேலே மேயுது
பணக்கிறுக்கு தலையிலேறிப் பகுத்தறிவுந்தேயுது ஹஹாங்
பணக்கிறுக்கு தலையிலேறிப் பகுத்தறிவுந்தேயுது - இந்தப்
பாழாய்ப் போற மனிதக் கூட்டம் தானாய் விழுந்து மாயுது

இந்த ஆட்டுக்கும்
இந்த ஆட்டுக்கும் நம்ம நாட்டுக்கும் பெரும்
கூட்டிருக்குது கோனாரே இதை
ஓட்டி ஓட்டித் திரிபவர்கள் ஒரு முடிவும் காணாரே
ஓட்டி ஓட்டித் திரிபவர்கள் ஒரு முடிவும் காணாரே

தில்லாலங்கடி தில்லாலங்கடி தில்லாலங்கடி தில்லாலே
தில்லாலங்கடி தில்லாலங்கடி தில்லாலங்கடி தில்லாலே

ஹஹ த ட்ர்ர்ர்ர்ர்ர்ர்ரி த த த ஹஹ த

கருப்புத் தான் எனக்குப் புடிச்ச கலரு

இயற்கையில் இறைவன் படைப்பில் எவ்வித பேதங்களும் இன்றி எல்லா உயிரினங்களும் சமமே. இன, நிற, மொழி, மத பேதங்கள் மந்த புத்தி படைத்த மனிதரிடையே மட்டும் வழக்கத்திலுள்ளன. அறியாமையால் தன் இயற்கை அறிவை இழக்கும் மனிதர்கள் தம்மிடையே ஏற்றத் தாழ்வு பாராட்டுவதோடு பிற உயிர்களையும் நேசிக்கத் தவறுகின்றனர். இயற்கையையும் மதிக்காது இயற்கை வளங்களைத் தம் சுயநலத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளும் நோக்குடன் அழிக்கவும் தலைப்படுகின்றனர். ஆங்கிலேயரின் ஆதிக்கம் வலுவுற்று விளங்கிய காலத்தில், இந்தியா, தென்னாப்பிரிக்கா, அமெரிக்கா முதலிய நாடுகளில் ஆங்கிலேயர்களைத் தவிர மற்ற இனத்தைச் சேர்ந்த மக்கள் யாவரும் தாழ்ந்தவர்களாகரும் தீண்டத் தகாதவர்களாகவும் நடத்தப்பட்டு வந்தனர். அது மட்டுமின்றி ஆப்ரஹாம் லிங்கன் காலம் வரையிலும் அமெரிக்காவில் கறுப்பின மக்கள் மற்ற ஆங்கிலேயர்களிடம் அடிமைகளாக வாழ்ந்ததும் வரலாறு கண்ட உண்மையாகும்.

நாளடைவில் மஹாத்மா காந்தி, நெல்சன் மண்டேலா முதலிய தலைவர்கள் வழிநடத்திய அஹிம்சை வழிப் போராட்டங்களின் பலனாக உலகெங்கிலுமுள்ள மக்கள் தம்முள் இனப்பாகுபாடு பாராட்டும் மடமையினின்று மீண்டு அனைவரையும் சமபாவத்தோடு நடத்தும் மனப்பக்குவத்தை அடைந்ததனால் இன்று ஆங்கிலேயர்கள் பெரும்பான்மையாக விளங்கும் அமெரிக்காவின் ஜனாதிபதியாக கருப்பினத்தைச் சேர்ந்தவரான ஓபாமா தேர்ந்தெடுக்கப் பட்டு ஆட்சி புரிகிறார்.

நமது நாட்டிலும் முற்காலத்தில் தீண்டத்தகாதவர்களாகக் கருதப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும் சம உரிமை பெற்றுப் பல துறைகளிலும் முன்னணியில் விளங்குகின்றனர். இவ்வாறான முன்னேற்றங்கள் பல நம் கண்முன்னே நிகழ்ந்தபோதிலும் அவ்வப்போது ஒரு சில சுயநல அரசியல்வாதிகளின் போக்கால் சாதி, மத, இன மொழி பேதங்கள் தொடர்ந்து வழங்கி வருகின்றதும் நாம் அறிவோம். இத்தகைய பேதங்கள் யாவும் மறைந்து நம் நாட்டிலும் உலகெங்கிலும் உள்ள மக்கள் யாவரும் ஒனறே குலம், ஒருவனே தேவன் எனும் சமரச சன்மார்க்க நெறியைப் பேணிப் பெருமையுறும் காலம் வெகு தொலைவில் இல்லை.

ஒவ்வொரு ஆணும் பெண்ணும் தம் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கையில் நிறம் பார்த்து சிவப்பு நிறமானால் விரும்புவதும் கருப்பானால் வெறுப்பதும் என்ற மடமையும் நீங்கி உள்ளத்து உயர்வையும் பிற தகுதிகளையும் கணக்கில் கொண்டு வாழ்க்கைத் துணையைத் தேடும் மனப்பக்குவத்தையும் பெரும்பாலான மக்கள் அடைந்துள்ளனர். அத்தகைய முற்போக்கான மனோபாவம் மக்களிடையே நிலவுவதை விளக்கும் பாடலொன்று இன்றைய பாடலாக மலர்கிறது.

கருப்புத் தான் எனக்குப் புடிச்ச கலரு

திரைப்படம்: வெற்றிக்கொடி கட்டு
இயற்றியவர்: கவிஞர் வைரமுத்து
இசை: தேனிசைத் தென்றல் தேவா
பாடியவர்: அனுராதா ஸ்ரீராம்

கருப்புத் தான் எனக்குப் புடிச்ச கலரு அவன்
கண்ணு ரெண்டும் என்னை மயக்கும்
தவுசன் வாட்சு பவரு
கருப்புத் தான் எனக்குப் புடிச்ச கலரு

டண்டணக்கா டண்டணக்கா டண்டணக்கா டண்
டண்டணக்கா டண்டணக்கா டண்டணக்கா டண்

கருப்புத் தான் எனக்குப் புடிச்ச கலரு
கருப்புத் தான் எனக்குப் புடிச்ச கலரு அவன்
கண்ணு ரெண்டும் என்னை மயக்கும்
தவுசன் வாட்சு பவரு
கருப்புத் தான் எனக்குப் புடிச்ச கலரு

சாமி கருப்புத் தான் சாமி செலையும் கருப்புத் தான்
யானை கருப்புத் தான் கூவும் குயிலும் கருப்புத்தான் என்னை
ஆசைப்பட்டுக் கொஞ்சும் போது குத்துற மீசை கருப்புத் தான்
அசத்துங் கருப்புத் தான்

கருப்புத் தான் எனக்குப் புடிச்ச கலரு அவன்
கண்ணு ரெண்டும் என்னை மயக்கும்
தவுசன் வாட்சு பவரு
கருப்புத் தான் எனக்குப் புடிச்ச கலரு

ஐயே ஐயே ஐயே ஐயே ஐயே ஐயே ஐயே ஐயே

வெண்ணிலவை உலகம் பாக்க வச்ச இரவு கருப்புத் தான்
வேர்வை சிந்தி உழைக்கும் எங்க விவசாயி கருப்புத் தான்
மண்ணூக்குள்ளே இருக்குறப்போ வைரம் கூடக் கருப்புத் தான்
மதுரை வீரன் கையில் இருக்கும் வீச்சருவாள் கருப்புத் தான்
பூமியிலே முத முதலா பொறந்த மனுஷன் கருப்புத் தான்
மக்கள் பஞ்சம் தீக்கும் அந்த மழை மேகம் கருப்புத் தான்
ஒன்ன என்ன ரசிக்க வச்ச ஆங்ஆங்ஆங்ஆங்ஆங்ஆங்ஆங்
ஒன்னை என்ன ரசிக்க வைத்த கண்ணு முழி கருப்புத் தான்
கற்பு சொல்லி வந்தா என்ன கண்ணகியும் கருப்புத் தான்
தாய் வயிற்றில் நாமிருந்த
தாய் வயிற்றில் நாமிருந்த கருவறையும் கருப்புத் தான்
பணமும் கருப்புத் தான்

கருப்புத் தான் எனக்குப் புடிச்ச கலரு அவன்
கண்ணு ரெண்டும் என்னை மயக்கும்
தவுசன் வாட்சு பவரு
கருப்புத் தான் எனக்குப் புடிச்ச கலரு

உன்னைக் கண்ட நாள் முதலா வச்ச பொட்டும் கருப்புத் தான்
ரெட்டை ஜடை பின்னலிலே கட்டும் ரிப்பன் கருப்புத் தான்
பூக்கடையில் தேடினேன் பூவில்லை கருப்புத் தான்
அன்று முதல் எனக்குத் தான் பூக்கள் மீது வெறுப்புத் தான்
பாவாடை கட்டிக் கட்டி பதிஞ்ச இடம் கருப்புத் தான்
முத்தங்கேட்டுக் காத்திருக்கும் அந்த இடம் ஒனக்குத் தான்
உன்னைப் பொத்தி வச்சிருக்கும் ஆங்ஆங்ஆங்ஆங்ஆங்ஆங்ஆங்
உன்னைப் பொத்தி வச்சிருக்கும் நெஞ்சுக்குழி கருப்புத் தான்
ஊரறிய பெத்துகணும் புள்ளை பத்து கருப்பு தான்
நம்மூரு சூப்பர் ஸ்டாரு ஆங்
நம்மூரு சூப்பர் ஸ்டாரு ரஜினிகாந்தும் கருப்புத் தான்
அழகு கருப்புத் தான்

கருப்புத் தான் எனக்கும் புடிச்ச கலரு அவன்
கண்ணு ரெண்டும் என்னை மயக்கும்
தவுசன் வாட்சு பவரு
கருப்புத் தான் எனக்குப் புடிச்ச கலரு

சாமி கருப்புத் தான் சாமி செலையும் கருப்புத் தான்
யானை கருப்புத் தான் கூவும் குயிலும் கருப்புத்தான் என்னை
ஆசைப்பட்டுக் கொஞ்சும் போது குத்துற மீசை கருப்புத் தான்
அசத்துங்கருப்புத் தான்

திங்கள், 16 ஜனவரி, 2012

உலகம் சமநிலை பெற வேண்டும்

இறைவன் நாம் வாழ்வதற்கு எல்லா வளங்களையும் அளித்திருந்தும் தம்மிடையே அவற்றைப் பகிர்ந்து கொண்டு இன்பமாய் வாழ மனமின்றி சுயநலத்தால் மதிமயங்கிய மாந்தர்கள் சமுதாயத்தில் ஏற்றத் தாழ்வுகள் வளரக் காரணமாகின்றனர். இதனால் மனிதர்களுக்குள்ளே பல்வேறு வகைகளிலும் கருத்து வேறுபாடுகளும் சண்டை சச்சரவுகளும் பெருகி சமூக அமைதி குலைகிறது. மனிதர்களை மிருகங்களிடமிருந்து மேம்படுத்தி உயர்வைத் தரும் கட்டுக்கோப்பான சமுதாய அமைப்பின் சட்டதிட்டங்கள் யாவினையும் மீறி அநீதிப் பாதையில் செயல்படும் வலிமையுள்ளவர்கள் செல்வந்தர்களாக வாழ்கையில் வலிமையற்ற மனிதர்கள் குறைந்த வருவாயில் வாயைக்கட்டி வயிற்றைக் கட்டி வாழ வேண்டிய ஏழ்மையில் தள்ளப்படுகின்றனர்.

பல்வேறு காரணங்களால் சமூக நீதி நிலைபெறாமையால் ஏழைகள் மேலும் ஏழைகளாகையில் செல்வத்தர்கள் மேலும் செல்வந்தர்கலாகின்றனர். இந்நிலை தொடர்கையில் ஏழ்மையில் தள்ளப்பட்ட மனிதர்கள் மனம் நொந்து வாடும் நிலை தொடர்கிறது. இம்மன வாட்டம் நாளடைவில் பெரும் கோபமாக உருவெடுத்து அத்தகைய கோபம் முற்றுகையில் கலவரமாக வெடித்து பொது சொத்துகளுக்கு சேதாரம் ஏற்பட்டு மனிதர்கள் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டு மடியக்கூடிய அளவுக்குப் பெரும் கேடாக முடிகிறது. இத்தகைய சமூக நிலை உருவாவது ஒரு நாட்டின் வளர்ச்சியைப் பாதித்துப் பெரும் வீழ்ச்சியை சந்திக்க நேரிடுகிறது. எகிப்து, லிபியா உட்பட உலக நாடுகள் பலவற்றிலும் சமீப காலத்தில் ஏற்பட்ட கலவரங்களும் உள்நாட்டுப் போரும் நம் நாட்டில் ஏற்படாமல் தடுப்பது இந்திய மக்கள் அனைவரின் தலையாய கடமையாகும். இதற்கு ஒரே வழி சமூக நீதி நிலைநாட்டப்பட்டு மக்களிடையே நிலவும் ஏற்றத் தாழ்வுகள் குறைந்து அனைவரும் சம அந்தஸ்தைப் பெற்று அமைதியாகவும் ஒற்றுமையாகவும் வாழ ஏற்ற சூழ்நிலை உருவாக்கப்படுவதேயாகும்.

அத்தகைய சம நிலை உலகில் ஏற்பட வேண்டுமெனில் மனிதர்கள் அறியாமை இருளிலிருந்து மீண்டு அறிவொளி பெற வேண்டும். அதற்கு ஒவ்வொரு நாட்டிலும் மக்கள் நலம் பேணும் நல்லாட்சி மலர வேண்டும். உலக நாடுகளிடையே ஒற்றுமை வளர வேண்டும். போர், பகை அச்சம் நீங்கி வளர்ச்சிப்பாதையில் உலகம் செல்ல வேண்டும். போதும் என்ற மனம் கொண்டு மனிதர் யாவரும் பேராசை நீக்கி இருப்பதைக் கொண்டு தானும் சிறப்புடன் வாழ்ந்து பிறருக்கும் அளித்து உலக மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே எனும் ஒரு உன்னத நிலையில் ஒருங்கிணைந்து வாழ வேண்டும். அப்பொழுது உலகம் நிலைபெற்று இயற்கை வளங்கள் பெருகி அழிவுப்பாதையிலிருந்து மீண்டு செழிக்கும்.

உலகம் சமநிலை பெற வேண்டும்

திரைப்படம்: அகத்தியர்
பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்
இயற்றியவர்: உளுந்தூர்ப் பேட்டை சண்முகம்
இசை: குன்னக்குடி வைத்தியநாதன்
ஆண்டு: 1972
உலகம் சமநிலை பெற வேண்டும்
உயர்வு தாழ்வில்லா நிலை வேண்டும்
உலகம் சமநிலை பெற வேண்டும்
உயர்வு தாழ்வில்லா நிலை வேண்டும்
நிறைவே காணும் மனம் வேண்டும்
இறைவா அதை நீ தர வேண்டும்
நிறைவே காணும் மனம் வேண்டும்
இறைவா அதை நீ தர வேண்டும்
உலகம் சமநிலை பெற வேண்டும்
உயர்வு தாழ்வில்லா நிலை வேண்டும்

இமயமும் குமரியும் இணைந்திடவே
எங்கும் இன்பம் விளைந்திடவே
சமயம் யாவும் தழைத்திடவே
சத்தியம் என்றும் நிலைத்திடவே

உலகம் சமநிலை பெற வேண்டும்
உயர்வு தாழ்வில்லா நிலை வேண்டும்
நிறைவே காணும் மனம் வேண்டும்
இறைவா அதை நீ தர வேண்டும்
உலகம் சமநிலை பெற வேண்டும்
உயர்வு தாழ்வில்லா நிலை வேண்டும்

அறிவும் அன்பும் கலந்திடவே
அழவில் வையம் மலர்ந்திடவே

நெறியில் மனிதன் வளர்ந்திடவே
நேர்மை நெஞ்சில் நிறைந்திடவே

உலகம் சமநிலை பெற வேண்டும்
உயர்வு தாழ்வில்லா நிலை வேண்டும்
நிறைவே காணும் மனம் வேண்டும்
இறைவா அதை நீ தர வேண்டும்
உலகம் சமநிலை பெற வேண்டும்
உயர்வு தாழ்வில்லா நிலை வேண்டும்

அன்பு நடமாடும் கலைக்கூடமே

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு

எனும் குறள் வழி நின்று சுயநலம் நீக்கிப் பொதுநலம் பாராட்டும் உத்தமர்கள் பலரும் உலகில் இருப்பதாலேயே உலகில் உயிர் வாழ்க்கை நிலைபெற்று வருகிறது. சுயநலவாதிகளால் இயற்கை வளங்கள் அழிக்கப்பட்டு வரும் முறைகேடுகள் பல நிகழ்ந்த போதிலும் அவற்றை அனைவரும் அறியும் வண்ணம் எடுத்துரைத்துப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தை இத்தகைய பொதுநலவாதிகள் தொடர்ந்து விளக்கி வருவதுடன் அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதாலேயே சமுதாயம் பாதுகாக்கப் படுகிறது.

நெல்லுக்கிறைத்த நீர் வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்குமாங்கே பொசியுமாம் தொல்லுலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு
எல்லோர்க்கும் பெய்யும் மழை

எனும் ஔவை மூதாட்டியின் வாக்குக்கிணங்க சமுதாய சேவையே வாழ்க்கையாகக் கொண்டு திகழும் உன்னத மாந்தர் பலர் உள்ளதாலேயே அறியாமையால் தவறு செய்யப் புகும் பலரும் மனம் திருந்தி நல்வழி செல்லும் நிலை உருவாகியுள்ளது.

மக்களைக் காக்க வேண்டிய அரசுகள் கடந்த பல ஆண்டுகளாக அரசுத்துறையில் இயங்கி வந்த தொழில்கள் பலவற்றையும் தனியாருக்கு தாரைவார்த்ததனால் நாட்டின் வளங்கள் யாவும் சிறிது சிறிதாக சுரண்டப்படுவதுடன் வரி ஏய்ப்பு அதிகரித்து செல்வந்தர்கள் மேலும் அதிக செல்வந்தர்களாவதும் ஏழை மக்கள் மேலும் ஏழ்மைப்பட்டு அன்றாடம் உண்ண உணவுக்கு உடுக்கும் உடைக்கும், உறையும் இடத்துக்கும், குழந்தைகளின் கல்விக்கும், மருத்துவ வசதிகளுக்கும், போக்கு வரத்துக்கும் போதிய பணத்த ஈட்ட வழியின்றி விலைவாசி உயர்வினால் துன்புற்று வாடுகையில், துன்பப்படும் மக்களுக்கு தைரியமூட்டி, முறையாகத் தங்களுக்குக் கிடைக்க வேண்டிய அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள உரிய வசதிகளைப் பெறும் மார்க்கத்தை இப்பொதுநல சேவகர்கள் காட்டி வருகின்றனர்.

இப்பொதுநல வாதிகள் பலரும் ஒன்று திரண்டு ஒரு பேரியக்கத்தை உருவாக்கி செயல்படும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது மகிழ்ச்சிக்குரியதாகும். தவறு செய்யும் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் தண்டனையிலிருந்து தப்பிக்க இயலாத சூழ்நிலை சிறிது சிறிதாக உருவாகி வருவது ஆறுதல் தருவதாக உள்ளது.

மனிதர்களாகப் பிறந்த நாம் ஏன் பிறந்தோம்? நமக்கு முற்பிறவியும் மறுபிறவியும் உண்டா இல்லையா? அவ்வாறு இருந்தால் முற்பிறவியில் நாம் யாராக இருந்தோம்? மறுபிறவியில் யாராக இருப்போம்? எனபன போன்ற பல கேள்விகளுக்கும் விடை தெரியாமல் மாயையில் சிக்குண்டு இவ்வுலகம் சாஸ்வதமென்று எண்ணி பொருள் தேடுவதிலும் சிற்றின்பங்களை அனுபவிப்பதிலுமே நேரத்தை செலவழித்து அர்த்தமற்ற வாழ்க்கையை வாழ்கிறோம். இவ்வாறான சுயநல வாழ்வை நாம் வாழ்வதால் நமக்கும் பயனில்லை பிறர்க்கும் பயனில்லை. நாம் இருக்கையில் நம்மைப் பலரும் போற்ற வேண்டும், இறந்த பின்னரும் நம்மை நினைத்து மகிழ வேண்டும். அப்பொழுது தான் நாம் வாழ்ந்த வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் உண்டாகும்.

அதற்கு ஓரே வழி பொதுநலவாதிகள் உருவாக்கிய இயக்கத்தில் இணைந்து சேவை புரிவதேயாகும். அவ்வாறு நாம் பொதுநலத்தைப் பேணும் மார்க்கத்தில் செல்வோமெனில் நம்மை அனைவரும் போற்றி வணங்குவர் என்பதில் ஐயமில்லை. அனைவரிடமும் நாம் அன்பு செலுத்துகையில் அனைவரும் நம் மேல் பன்மடங்கு அன்பு செலுத்துவர்.

அன்பு தான் இன்ப ஊற்று
அன்பு தான் உலக ஜோதி
அன்பு தான் உலக மகா சக்தி!

அன்பு நடமாடும் கலைக்கூடமே

திரைப்படம்: அவன் தான் மனிதன்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியவர்: பி. சுசீலா, டி.எம். சௌந்தரராஜன்

அன்பு நடமாடும் கலைக்கூடமே ஆசை மழைமேகமே
கண்ணில் விளையாடும் எழில் வண்ணமே கன்னித் தமிழ் மன்றமே
அன்பு நடமாடும் கலைக்கூடமே ஆசை மழைமேகமே
கண்ணில் விளையாடும் எழில் வண்ணமே கன்னித் தமிழ் மன்றமே

மாதவிக் கொடிப்பூவின் இதழோரமே மயக்கும் மதுச்சாரமே
மாதவிக் கொடிப்பூவின் இதழோரமே மயக்கும் மதுச்சாரமே
மஞ்சள் வெயில் போலும் மலர் வண்ண முகமே மன்னர் குலத் தங்கமே
பச்சை மலைத்தோட்ட மணியாரமே பாடும் புது ராகமே

அன்பு நடமாடும் கலைக்கூடமே ஆசை மழைமேகமே
கண்ணில் விளையாடும் எழில் வண்ணமே கன்னித் தமிழ் மன்றமே

வெள்ளலை கடலாடும் பொன்னாடமே விளக்கின் ஒளிவெள்ளமே
வெள்ளலை கடலாடும் பொன்னாடமே விளக்கின் ஒளிவெள்ளமே
செல்லும் இடந்தோறும் புகழ் சேர்க்கும் தவமே சென்னல் குலமன்னனே
இன்று கவிபாடும் என் செல்வமே என்றும் என் தெய்வமே

மாநிலம் எல்லாமும் நம் இல்லமே மக்கள் நம் சொந்தமே
காணும் நிலமெங்கும் தமிழ் பாடும் மனமே உலகம் நமதாகுமே
அன்று கவிவேந்தன் சொல் வண்ணமே யாவும் உறவாகுமே

அன்பு நடமாடும் கலைக்கூடமே ஆசை மழைமேகமே
கண்ணில் விளையாடும் எழில் வண்ணமே கன்னித் தமிழ் மன்றமே

நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லலும்

ஒரு நாடு முழுவதும் நலமாக இருந்தால் மட்டுமே அதன் குடிமக்கள் ஒவ்வொருவரும் நலமாக வாழ முடியும். நாட்டில் பஞ்சம் தலைவிரித்தாடினால் மக்கள் அனைவரும் அவதிக்குள்ளாவர். ஒரு நாட்டில் செல்வம் பெருகி மக்கள் நலமாய் வாழ வழிவகுக்க வேண்டியது அரசாங்கத்தின் இன்றியமையாத கடமை. ஜனநாயக நாடான நமது இந்தியாவில் அரசாங்கத்தின் ஒவ்வொரு அமைச்சரையும் தேர்ந்தெடுப்பது நாட்டு மக்களே என்பதால் அவர்கள் தகுதியுள்ளவர்களை மட்டுமே தேர்ந்தெடுப்பது அவசியம். அத்துடன் அவ்வாறு தம்மால் தேர்ந்தெடுக்கப் படக் கோரி வாக்குக் கேட்டு ஒவ்வொரு வேட்பாளரும் மக்களை அணுகுகையில் மக்கள் தம் தொகுதிகளில் நிலவும் பிரச்சினைகளை அவ்வேட்பாளர் தீர்க்கப் பாடுபடுவார் எனும் உத்தரவாதத்தை அவரிடமிருந்து பெற வேண்டும்.

இதற்கு முதலில் ஒவ்வொரு தொகுதி மக்களும் தம் தொகுதியில் நிலவும் பிரச்சினைகள் அனைத்தையும் மிகத் தெளிவாக அறிந்திருத்தல் அவசியமாகிறது. அப்பிரச்சினைகள் குறித்த விவரங்களை வேட்பாளரும் தெளிவாக அறிந்திருத்தல் அவசியமே. இதுகாலம் வரை இத்தகைய தெளிவு இரு தரப்பிலும் இருந்ததில்லை என்பதால் தேர்தல் முடிந்த பின்னர் பதவிக்கு வரும் வேட்பாளர்கள் முறையாக சேவை செய்யாமல் மக்களை ஏமாற்றித் தம் சுயநலம் பேணுவதே நடைமுறையாக இருந்து வந்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் நமது நாட்டின் பல்வேறு துறைகளிலும் பெரும்பாலும் ஊழலே மலிந்து மக்கள் அரசாங்கத்தாலேயே கொள்ளையடிக்கப்பட்டு வந்துள்ளனர் எனும் கசப்பான உண்மை இந்திய தணிக்கைத் துறையின் அறிக்கைகள் வாயிலாக வெட்ட வெளிச்சமானதாலும் தகவல் பெரும் உரிமைச் சட்டத்தின் மூலமும் ஊடகங்களின் ஊக்கமிக்க செயல்பாட்டினாலும் ஊழல் செய்தவர் யார் யார் என்பதை மக்கள் தெள்ளத் தெளிவாக அறிந்து கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது.

அரசாங்கத்தில் முக்கியப் பதவிகள் வகிப்பவர்களின் ஊழலினால் பெரிதும் பாதிக்கப்பட்டு மக்கள் வறுமையில் வாடி உள்ளம் குமுறும் நிலை சற்றும் மாறாமல் நீடித்திருக்க, குற்றம் புரிந்த பலரும் குற்றம் வெளிவந்த பின்னர் வெகு காலமாகிய பின்னரும் அதற்குரிய தண்டனை பெறுவதோ மக்களிடமிருந்து களவாடப் பட்ட பெரும் தொகை திரும்பவும் மக்கள் நலனுக்காக செலவிடப் படுவதோ இவற்றுள் எதுவும் நிறைவேறாமல் குற்றவாளிகள் தொடர்ந்து பதவிகளில் ஒட்டிக்கொண்டிருப்பதும், குற்றவாளிகளுள் சிறையில் அடைக்கப்பட்ட ஒரு சிலர் மீது நடைபெறும் வழக்குகள் ஆமை வேகத்தில் நகர்ந்து கொண்டிருப்பதும் மக்களின் பொறுமையைப் பெரிதும் சோதிப்பதாக உள்ளது.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் மாநகராட்சிகளுக்கும், நகராட்சிகள் மற்றும் ஊராட்சிகளுக்கும் தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இதுகாலம் வரை இல்லாதிருந்த ஒரு விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும் எனும் உன்னத நோக்குடன் சென்னையைச் சேர்ந்த மாணவர்கள் பலர் ஒன்று கூடி சென்னையில் மக்களை தினம் பாதிக்கும் பல்வேறு குறைபாடுகளை முறையாகக் கணக்கிட்டு மக்கள் யாவரும் அறியும் வண்ணம் வெளியிடும் முயற்சியில் இறங்கியுள்ளனர். சாலைகளின் தரம் மற்றும் குறைபாடுகள், பொதுக்கழிப்பிடங்களின் நிலை, ஏழை மக்களின் வாழ்க்கை நிலவரம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தேவையான இடங்களில் வீடியோ பதிவு செய்தும், தேவையான விவரங்களைத் திரட்டியும் http://www.transparentchennai.com/ எனும் இணையதளத்தை அமைத்து அதில் பதிவு செய்து அதன் மூலம் அரசின் செயல்பாட்டை மதிப்பீடு செய்யவும் தேர்தலில் நிற்கும் வேட்பாளர்களைக் கட்டுப்படுத்தவும், அவர்களது செயல்பாட்டை மதிப்பிடவும் என மக்களுக்கு உதவும் மாபெரும் தொண்டில் இறங்கியுள்ளனர்.

நாட்டிலுள்ள அனைவருக்கும் முன்னோடிகளாக உருவெடுத்துள்ள இவ்விளைஞர்களின் பணி பாராட்டத்தக்கது மட்டுமின்றி நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஊர்களிலும் உள்ள யாவரும் பின்பற்ற வேண்டிய ஒன்றாகும். காந்தியவாதி அன்னா தலைமையில் மக்கள் பெருந்திரளாக ஊழலுக்கு எதிரே போராடும் சூழலுடன் இத்தகைய குறைகள் கண்டறியப்பட்டு நிவர்த்தி பெற எடுக்கப்படும் இயக்கங்களும் நாடெங்கிலும் பல்கிப் பெருகி ஊழல் புரிய எண்ணுவோர் அஞ்சி நடுங்கித் திருந்தும் கட்டாய நிலை விரைவில் ஏற்பட வழி கிடைத்துள்ளது.

"காற்றுள்ள போதே தூற்றிக்கொள்" எனும் பொன்மொழிக்கிணங்க இந்த ஆரோக்யமான சூழலைப் பயன்படுத்தி மக்கள் யாவரும் ஒன்று கூடிப் போராடினால் நாட்டில் அநீதிகள் குறைந்து நீதி நிலைபெற வழி பிறக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு அமைந்த இப்படை வெல்வதுறுதி.

நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லலும்

திரைப்படம்: உலகம் சுற்றும் வாலிபன்
இயற்றியவர்: புலவர் வேதா
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்
ஆண்டு: 1973

நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லலும்
இப்படை தோற்கின் எப்படை வெல்லும்?

நீதிக்கு இது ஒரு போராட்டம் - இதை
நிச்சயம் உலகம் பாராட்டும்

ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆஆஆஆஆஆஆஆ

வல்லோர்கள் சுரண்டும் பொல்லாத கொடுமை
இல்லாமல் மாறும் ஒரு தேதி

ஆஆஆஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆஆஆ

வல்லோர்கள் சுரண்டும் பொல்லாத கொடுமை
இல்லாமல் மாறும் ஒரு தேதி - அன்று
இல்லாமை நீங்கி எல்லோரும் வாழ
இந்நாட்டில் மலரும் சமநீதி

நம்மை ஏய்ப்பவர் கையில் அதிகாரம்
இருந்திடும் என்னும் கதை மாறும்
நம்மை ஏய்ப்பவர் கையில் அதிகாரம்
இருந்திடும் என்னும் கதை மாறும்

ஆற்றலும் அறிவும் நன்மைகள் ஓங்க
இயற்கை தந்த பரிசாகும் - இதில்
நாட்டினைக் கெடுத்து நன்மையை அழிக்க
நினைத்தால் எவர்க்கும் அழிவாகும்

நல்லதை வளர்ப்பது அறிவாற்றல்
அல்லதை நினைப்பது அழிவாற்றல்

நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லலும்
இப்படை தோற்கின் எப்படை வெல்லும்?
நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லலும்
இப்படை தோற்கின் எப்படை வெல்லும்?