திங்கள், 16 ஜனவரி, 2012

உலகம் சமநிலை பெற வேண்டும்

இறைவன் நாம் வாழ்வதற்கு எல்லா வளங்களையும் அளித்திருந்தும் தம்மிடையே அவற்றைப் பகிர்ந்து கொண்டு இன்பமாய் வாழ மனமின்றி சுயநலத்தால் மதிமயங்கிய மாந்தர்கள் சமுதாயத்தில் ஏற்றத் தாழ்வுகள் வளரக் காரணமாகின்றனர். இதனால் மனிதர்களுக்குள்ளே பல்வேறு வகைகளிலும் கருத்து வேறுபாடுகளும் சண்டை சச்சரவுகளும் பெருகி சமூக அமைதி குலைகிறது. மனிதர்களை மிருகங்களிடமிருந்து மேம்படுத்தி உயர்வைத் தரும் கட்டுக்கோப்பான சமுதாய அமைப்பின் சட்டதிட்டங்கள் யாவினையும் மீறி அநீதிப் பாதையில் செயல்படும் வலிமையுள்ளவர்கள் செல்வந்தர்களாக வாழ்கையில் வலிமையற்ற மனிதர்கள் குறைந்த வருவாயில் வாயைக்கட்டி வயிற்றைக் கட்டி வாழ வேண்டிய ஏழ்மையில் தள்ளப்படுகின்றனர்.

பல்வேறு காரணங்களால் சமூக நீதி நிலைபெறாமையால் ஏழைகள் மேலும் ஏழைகளாகையில் செல்வத்தர்கள் மேலும் செல்வந்தர்கலாகின்றனர். இந்நிலை தொடர்கையில் ஏழ்மையில் தள்ளப்பட்ட மனிதர்கள் மனம் நொந்து வாடும் நிலை தொடர்கிறது. இம்மன வாட்டம் நாளடைவில் பெரும் கோபமாக உருவெடுத்து அத்தகைய கோபம் முற்றுகையில் கலவரமாக வெடித்து பொது சொத்துகளுக்கு சேதாரம் ஏற்பட்டு மனிதர்கள் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டு மடியக்கூடிய அளவுக்குப் பெரும் கேடாக முடிகிறது. இத்தகைய சமூக நிலை உருவாவது ஒரு நாட்டின் வளர்ச்சியைப் பாதித்துப் பெரும் வீழ்ச்சியை சந்திக்க நேரிடுகிறது. எகிப்து, லிபியா உட்பட உலக நாடுகள் பலவற்றிலும் சமீப காலத்தில் ஏற்பட்ட கலவரங்களும் உள்நாட்டுப் போரும் நம் நாட்டில் ஏற்படாமல் தடுப்பது இந்திய மக்கள் அனைவரின் தலையாய கடமையாகும். இதற்கு ஒரே வழி சமூக நீதி நிலைநாட்டப்பட்டு மக்களிடையே நிலவும் ஏற்றத் தாழ்வுகள் குறைந்து அனைவரும் சம அந்தஸ்தைப் பெற்று அமைதியாகவும் ஒற்றுமையாகவும் வாழ ஏற்ற சூழ்நிலை உருவாக்கப்படுவதேயாகும்.

அத்தகைய சம நிலை உலகில் ஏற்பட வேண்டுமெனில் மனிதர்கள் அறியாமை இருளிலிருந்து மீண்டு அறிவொளி பெற வேண்டும். அதற்கு ஒவ்வொரு நாட்டிலும் மக்கள் நலம் பேணும் நல்லாட்சி மலர வேண்டும். உலக நாடுகளிடையே ஒற்றுமை வளர வேண்டும். போர், பகை அச்சம் நீங்கி வளர்ச்சிப்பாதையில் உலகம் செல்ல வேண்டும். போதும் என்ற மனம் கொண்டு மனிதர் யாவரும் பேராசை நீக்கி இருப்பதைக் கொண்டு தானும் சிறப்புடன் வாழ்ந்து பிறருக்கும் அளித்து உலக மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே எனும் ஒரு உன்னத நிலையில் ஒருங்கிணைந்து வாழ வேண்டும். அப்பொழுது உலகம் நிலைபெற்று இயற்கை வளங்கள் பெருகி அழிவுப்பாதையிலிருந்து மீண்டு செழிக்கும்.

உலகம் சமநிலை பெற வேண்டும்

திரைப்படம்: அகத்தியர்
பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்
இயற்றியவர்: உளுந்தூர்ப் பேட்டை சண்முகம்
இசை: குன்னக்குடி வைத்தியநாதன்
ஆண்டு: 1972
உலகம் சமநிலை பெற வேண்டும்
உயர்வு தாழ்வில்லா நிலை வேண்டும்
உலகம் சமநிலை பெற வேண்டும்
உயர்வு தாழ்வில்லா நிலை வேண்டும்
நிறைவே காணும் மனம் வேண்டும்
இறைவா அதை நீ தர வேண்டும்
நிறைவே காணும் மனம் வேண்டும்
இறைவா அதை நீ தர வேண்டும்
உலகம் சமநிலை பெற வேண்டும்
உயர்வு தாழ்வில்லா நிலை வேண்டும்

இமயமும் குமரியும் இணைந்திடவே
எங்கும் இன்பம் விளைந்திடவே
சமயம் யாவும் தழைத்திடவே
சத்தியம் என்றும் நிலைத்திடவே

உலகம் சமநிலை பெற வேண்டும்
உயர்வு தாழ்வில்லா நிலை வேண்டும்
நிறைவே காணும் மனம் வேண்டும்
இறைவா அதை நீ தர வேண்டும்
உலகம் சமநிலை பெற வேண்டும்
உயர்வு தாழ்வில்லா நிலை வேண்டும்

அறிவும் அன்பும் கலந்திடவே
அழவில் வையம் மலர்ந்திடவே

நெறியில் மனிதன் வளர்ந்திடவே
நேர்மை நெஞ்சில் நிறைந்திடவே

உலகம் சமநிலை பெற வேண்டும்
உயர்வு தாழ்வில்லா நிலை வேண்டும்
நிறைவே காணும் மனம் வேண்டும்
இறைவா அதை நீ தர வேண்டும்
உலகம் சமநிலை பெற வேண்டும்
உயர்வு தாழ்வில்லா நிலை வேண்டும்

2 கருத்துகள்:

  1. வணக்கம் நண்பரே
    அருமையான பாடல்.எனக்கு பிடித்த பாடல்களுல் ஒன்று. சீர்காழியின் கம்பீரமான் குரல் அனைவரையும் மயக்கி விடும்.காணொளி இங்கே !!!!!!!!!‌
    http://www.youtube.com/watch?v=rplAw6nFRJQ
    மிக்க நன்றி. இனிய தமிழர் திருநாள் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு