திங்கள், 16 ஜனவரி, 2012

அன்பு நடமாடும் கலைக்கூடமே

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு

எனும் குறள் வழி நின்று சுயநலம் நீக்கிப் பொதுநலம் பாராட்டும் உத்தமர்கள் பலரும் உலகில் இருப்பதாலேயே உலகில் உயிர் வாழ்க்கை நிலைபெற்று வருகிறது. சுயநலவாதிகளால் இயற்கை வளங்கள் அழிக்கப்பட்டு வரும் முறைகேடுகள் பல நிகழ்ந்த போதிலும் அவற்றை அனைவரும் அறியும் வண்ணம் எடுத்துரைத்துப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தை இத்தகைய பொதுநலவாதிகள் தொடர்ந்து விளக்கி வருவதுடன் அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதாலேயே சமுதாயம் பாதுகாக்கப் படுகிறது.

நெல்லுக்கிறைத்த நீர் வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்குமாங்கே பொசியுமாம் தொல்லுலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு
எல்லோர்க்கும் பெய்யும் மழை

எனும் ஔவை மூதாட்டியின் வாக்குக்கிணங்க சமுதாய சேவையே வாழ்க்கையாகக் கொண்டு திகழும் உன்னத மாந்தர் பலர் உள்ளதாலேயே அறியாமையால் தவறு செய்யப் புகும் பலரும் மனம் திருந்தி நல்வழி செல்லும் நிலை உருவாகியுள்ளது.

மக்களைக் காக்க வேண்டிய அரசுகள் கடந்த பல ஆண்டுகளாக அரசுத்துறையில் இயங்கி வந்த தொழில்கள் பலவற்றையும் தனியாருக்கு தாரைவார்த்ததனால் நாட்டின் வளங்கள் யாவும் சிறிது சிறிதாக சுரண்டப்படுவதுடன் வரி ஏய்ப்பு அதிகரித்து செல்வந்தர்கள் மேலும் அதிக செல்வந்தர்களாவதும் ஏழை மக்கள் மேலும் ஏழ்மைப்பட்டு அன்றாடம் உண்ண உணவுக்கு உடுக்கும் உடைக்கும், உறையும் இடத்துக்கும், குழந்தைகளின் கல்விக்கும், மருத்துவ வசதிகளுக்கும், போக்கு வரத்துக்கும் போதிய பணத்த ஈட்ட வழியின்றி விலைவாசி உயர்வினால் துன்புற்று வாடுகையில், துன்பப்படும் மக்களுக்கு தைரியமூட்டி, முறையாகத் தங்களுக்குக் கிடைக்க வேண்டிய அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள உரிய வசதிகளைப் பெறும் மார்க்கத்தை இப்பொதுநல சேவகர்கள் காட்டி வருகின்றனர்.

இப்பொதுநல வாதிகள் பலரும் ஒன்று திரண்டு ஒரு பேரியக்கத்தை உருவாக்கி செயல்படும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது மகிழ்ச்சிக்குரியதாகும். தவறு செய்யும் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் தண்டனையிலிருந்து தப்பிக்க இயலாத சூழ்நிலை சிறிது சிறிதாக உருவாகி வருவது ஆறுதல் தருவதாக உள்ளது.

மனிதர்களாகப் பிறந்த நாம் ஏன் பிறந்தோம்? நமக்கு முற்பிறவியும் மறுபிறவியும் உண்டா இல்லையா? அவ்வாறு இருந்தால் முற்பிறவியில் நாம் யாராக இருந்தோம்? மறுபிறவியில் யாராக இருப்போம்? எனபன போன்ற பல கேள்விகளுக்கும் விடை தெரியாமல் மாயையில் சிக்குண்டு இவ்வுலகம் சாஸ்வதமென்று எண்ணி பொருள் தேடுவதிலும் சிற்றின்பங்களை அனுபவிப்பதிலுமே நேரத்தை செலவழித்து அர்த்தமற்ற வாழ்க்கையை வாழ்கிறோம். இவ்வாறான சுயநல வாழ்வை நாம் வாழ்வதால் நமக்கும் பயனில்லை பிறர்க்கும் பயனில்லை. நாம் இருக்கையில் நம்மைப் பலரும் போற்ற வேண்டும், இறந்த பின்னரும் நம்மை நினைத்து மகிழ வேண்டும். அப்பொழுது தான் நாம் வாழ்ந்த வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் உண்டாகும்.

அதற்கு ஓரே வழி பொதுநலவாதிகள் உருவாக்கிய இயக்கத்தில் இணைந்து சேவை புரிவதேயாகும். அவ்வாறு நாம் பொதுநலத்தைப் பேணும் மார்க்கத்தில் செல்வோமெனில் நம்மை அனைவரும் போற்றி வணங்குவர் என்பதில் ஐயமில்லை. அனைவரிடமும் நாம் அன்பு செலுத்துகையில் அனைவரும் நம் மேல் பன்மடங்கு அன்பு செலுத்துவர்.

அன்பு தான் இன்ப ஊற்று
அன்பு தான் உலக ஜோதி
அன்பு தான் உலக மகா சக்தி!

அன்பு நடமாடும் கலைக்கூடமே

திரைப்படம்: அவன் தான் மனிதன்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியவர்: பி. சுசீலா, டி.எம். சௌந்தரராஜன்

அன்பு நடமாடும் கலைக்கூடமே ஆசை மழைமேகமே
கண்ணில் விளையாடும் எழில் வண்ணமே கன்னித் தமிழ் மன்றமே
அன்பு நடமாடும் கலைக்கூடமே ஆசை மழைமேகமே
கண்ணில் விளையாடும் எழில் வண்ணமே கன்னித் தமிழ் மன்றமே

மாதவிக் கொடிப்பூவின் இதழோரமே மயக்கும் மதுச்சாரமே
மாதவிக் கொடிப்பூவின் இதழோரமே மயக்கும் மதுச்சாரமே
மஞ்சள் வெயில் போலும் மலர் வண்ண முகமே மன்னர் குலத் தங்கமே
பச்சை மலைத்தோட்ட மணியாரமே பாடும் புது ராகமே

அன்பு நடமாடும் கலைக்கூடமே ஆசை மழைமேகமே
கண்ணில் விளையாடும் எழில் வண்ணமே கன்னித் தமிழ் மன்றமே

வெள்ளலை கடலாடும் பொன்னாடமே விளக்கின் ஒளிவெள்ளமே
வெள்ளலை கடலாடும் பொன்னாடமே விளக்கின் ஒளிவெள்ளமே
செல்லும் இடந்தோறும் புகழ் சேர்க்கும் தவமே சென்னல் குலமன்னனே
இன்று கவிபாடும் என் செல்வமே என்றும் என் தெய்வமே

மாநிலம் எல்லாமும் நம் இல்லமே மக்கள் நம் சொந்தமே
காணும் நிலமெங்கும் தமிழ் பாடும் மனமே உலகம் நமதாகுமே
அன்று கவிவேந்தன் சொல் வண்ணமே யாவும் உறவாகுமே

அன்பு நடமாடும் கலைக்கூடமே ஆசை மழைமேகமே
கண்ணில் விளையாடும் எழில் வண்ணமே கன்னித் தமிழ் மன்றமே

1 கருத்து:

  1. பழம் தமிழ் பாடல்களை எடுத்து தன் நடையில் கையாழ்வது கவியரசருக்கு கைவந்த கலை " யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற வரிகளை அழகாக எடுத்து தன் நடையில்" மாநிலம் எல்லாம் நம் இல்லமே மக்கள் நம் சொந்தமே " என கூறி "அன்று கவிவேந்தன் சொல் வண்ணமே யாவும் உறவாகுமே "என பூங்குன்றனாருக்கு புகழாரம் சூட்டுகிறார்

    பதிலளிநீக்கு