செவ்வாய், 17 ஜனவரி, 2012

உல்லாசம் தேடும் எல்லோரும் ஓர் நாள்

நாம் இவ்வுலகில் பிறந்த போது நம்முடன் எதனையும் கொண்டு வரவில்லை. இவ்வுலகை விட்டு நிச்சயமாக் ஒரு நாள் செல்கையில் எதனையும் கொண்டு போகப் போவதுமில்லை. இங்கு பிறக்கு முன் நாம் இருந்தோமா இல்லையா என்பதும் தெரியாது. இறந்த பின்னர் இருப்போமா, மாட்டோமா என்பதும் தெரியாது. காலத்தின் கொத்தடிமைகளாக ஏதோ சொற்பகாலம் ஒரு மாயத் தோற்றம் கொண்ட உலகில் வாழ்ந்து மறையும் நாம் நம் அற்பமான நிலையை மறந்து மமதையால் பிறரை விடவும் உயர்வானவராக நம்மை நாமே எண்ணிக்கொண்டு பிறரை மதியாது, பிறர் மேல் அன்பு செலுத்தாது நம் சுகம் ஒன்றே பெரிதென எண்ணி வாழ்கிறோம்.

அவ்வாறான சுயநல வாழ்வு வாழ்வோமெனில் நாம் இவ்வுலகில் இருக்கும் போதும் நம்மை உலகத்தார் யாரும் மதிக்க மாட்டார்கள். நம் உற்றார், உறவினரும் உடன்பிறந்தோருமே நம்மை இழிவாக எண்ணி இகழ்வார்கள். நாம் இறந்த பிறகும் பழியே மிஞ்சும். நம்மை அனைவரும் மறந்து போவார்கள். ஏதோ ஒரு சிலர் நம்மை ஏதோ ஒரு சமயம் நினைவுகூர்ந்தாலும் நம்மை ஏளனமே செய்வர்.

சுயநலத்தை ஒதுக்கிவிட்டு உலக நன்மையையே பெரிதெனக் கொண்டு சேவை செய்தோமெனில் நம்மை யாவரும் நாம் வாழ்கின்ற காலத்திலும் மறைந்த பின்னரும் என்றும் மிகுந்த அன்புடனும் மரியாதையுடனும் நினைவு கொள்வர். நாம் செய்கின்ற ஒவ்வொரு செய்கையும் நம் வருங்கால சந்ததியினரின் நல்வாழ்வுக்கு வழிகோலுவதாக அமைய வேண்டும். பெரும்பொருள் சேர்த்து அதைக்கொண்டு வானளாவிய கட்டடத்தைக் கட்டிக் குடியிருந்து வாழ்வை சுகமாக அனுபவிக்க விழைகையில் சுற்றுப்புறத்தில் தேங்கிய சாக்கடைகளும், குப்பை மேடுகளும் சூழ்ந்திருந்தால் நாமும் ஆரோக்யமாக வாழ இயலாது நம்மைச் சுற்றியுள்ள மக்களும் நல வாழ்வு பெற இயலாது. வீடுகளிலிருந்தும், வணிக நிறுவனங்கள் மற்றும் ஆலைகளிலிருந்தும் தினந்தோறும் வெளியேறும் குப்பைகளும், கழிவு நீரும், புகையும் பூமியையும் காற்று மண்டலத்தையும் தொடர்ந்து மாசு படுத்துகின்றன.

சுற்றுச் சூழலைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பிலிருக்கும் அரசுத் துறையினர் முறையாகத் தம் கடமையை நிறைவேற்றுகின்றனரா என்பதைத் தொடர்ந்து கண்காணித்து முறையாக நிறைவேற்றாவிடில் நினைவுறுத்தி அனைவரும் நன்மை பெற உதவுவது நம் ஒவ்வொருவரது கடமையாகும். இதற்கு நாம் முதலில் சமுதாய ரீதியில் ஒன்றுபட வேண்டும். நிச்சயம் ஒவ்வொரு ஊரிலும் சமுதாயப் பணியைத் தலையாய கடமையாகக் கொண்டு வாழ்வோர் இருக்கின்றனர். அவர்களுடன் நாமும் இணைந்து சேவை செய்தல் உலக நலன் பெருக வழிவகுக்கும்.

பெறற்கரிய மானுடப் பிறவியைப் பெற்ற நாம் வாழ்நாளில் கருணையுள்ளவராக விளங்கி பொதுநலத்தைப் பேணி வாழ்வோமெனில் மனிதருள் தெய்வமெனப் போற்றப்பெற்று இறைநிலையை எய்தலாம். என்றோ ஒரு நாள் நாம் சொல்லாமல் இறைவனடியையே சேர்வது நிச்சயமாதலால் வாழ்நாளில் உள்ளத் தூய்மையுடன் விளங்குதல் நலம்.

உல்லாசம் தேடும் எல்லோரும் ஓர் நாள்

உல்லாசம் தேடும் எல்லோரும் ஓர் நாள்
சொல்லாமல் போவார் அல்லாவிடம்

உல்லாசம் தேடும் எல்லோரும் ஓர் நாள்
சொல்லாமல் போவார் அல்லாவிடம்
அவர் அன்றாடம் தேடும் செல்வங்காளாலே
பின்னோர்கள் சந்தோஷம் கொண்டாடுவார்
அவர் அன்றாடம் தேடும் செல்வங்காளாலே
பின்னோர்கள் சந்தோஷம் கொண்டாடுவார்

உல்லாசம் தேடும் எல்லோரும் ஓர் நாள்
சொல்லாமல் போவார் அல்லாவிடம்

தாயாரின் கையிருந்து சம்சாரம் கைக்கு வந்து
நோயாகும் முதுமை கொண்டு கண் மூடுவார்

ஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆ
ஆஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆ

தாயாரின் கையிருந்து சம்சாரம் கைக்கு வந்து
நோயாகும் முதுமை கொண்டு கண் மூடுவார்
அதை ஓர் நாளும் எண்ணாமல் ஆடுவார்
ஒன்றோடு மற்றொன்றை நாடுவார்
அதை ஓர் நாளும் எண்ணாமல் ஆடுவார்
ஒன்றோடு மற்றொன்றை நாடுவார்

உல்லாசம் தேடும் எல்லோரும் ஓர் நாள்
சொல்லாமல் போவார் அல்லாவிடம்

குலை ஈன்ற வாழை மாண்டு போகும் விரைவிலே
அதன் இளையன் கன்று வளர்ந்து பொங்கும் உலகிலே
குலை ஈன்ற வாழை மாண்டு போகும் விரைவிலே
அதன் இளையன் கன்று வளர்ந்து பொங்கும் உலகிலே

தினம் தோன்றும் வாழ்வில் மனிதரெல்லாம் ஒரு முறை
இந்தத் துணையை எண்ணிப் பார்க்க வேணும் மனதிலே

உல்லாசம் தேடும் எல்லோரும் ஓர் நாள்
சொல்லாமல் போவார் அல்லாவிடம்
அவர் அன்றாடம் தேடும் செல்வங்காளாலே
பின்னோர்கள் சந்தோஷம் கொண்டாடுவார்
உல்லாசம் தேடும் எல்லோரும் ஓர் நாள்
சொல்லாமல் போவார் அல்லாவிடம்

1 கருத்து:

  1. கவி திலகம் கவியரசர் கண்ணதாசன் அவர்களின் வைர வரிகள் காலத்தால் அழியாத உண்மை உண்மை உண்மை முற்றிலும் உண்மை

    பதிலளிநீக்கு