செவ்வாய், 17 ஜனவரி, 2012

சலசல ராகத்திலே

1962-63 ஆண்டுகளில் நான் நான்காம்-ஐந்தாம் வகுப்புகள் படிக்கையில் என் தந்தை தாயுடனும் சகோதர சகோதரிகளுடன் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த கிணத்துக்கடவு எனும் ஊரின் அருகில் 2 கி.மீ. தூரத்தில் அமைந்திருந்த பகவதி பாளையம் எனும் ஒரு சிறு கிராமத்தில் வசித்தேன். அப்போது நாங்கள் குடியிருந்த வீட்டுக்கு மாத வாடகை ரூ 10/- இப்பொழுது 10 ரூபாய்க்கு ஒருவர் ஒரு வேளை உணவும் வாங்க முடியாது. எங்கள் வீடு அக்கிராமத்தில் இருந்த முக்கியப் பிரமுகரது வயலின் அருகாமையில் இருந்தமையால் பள்ளி சென்று வந்தபின் நான் பொழுதைக் கழிப்பது அவ்வயலிலும் அருகிலுள்ள மரங்கள் நிறைந்த பகுதியிலுமே என வாழ்க்கை இயற்கையோடு இயைந்து இன்பகரமாக இருந்தது. வயலில் பெரும்பாலும் கரும்பு பயிரிடுவர். ஒரு பயிர் அறுவடை முடிந்ததும் வேறு ஏதேனும் தானியப் பயிரை விதைத்து அப்பயிற் முழு வளர்ச்சி அடையுமுன்பே மண்ணுடன் சேர்த்து உழுதுவிடுவர். சிறிது காலம் கழித்து மீண்டும் கரும்பு பயிரிடுகையில் மண்ணுடன் சேர்த்து உழப்பட்ட பயிர்கள் மண்ணோடு மண்ணாக மக்கி, கரும்புப் பயிருக்கு உரமாக ஆகிவிடும். கரும்பு அறுவடை முடிந்த பின்னர் வயலின் அருகிலே இருந்த ஒரு கொட்டகையில் அக்கரும்பைச் சாறாகப் பிழிந்து பெரிய வாயகண்ட பாத்திரங்களில் காய்ச்சி, சில இரசாயனப் பொடிகளைக் காய்ச்சிய பாகின் மேல் தூவ அப்பாகிலுள்ள அழுக்குகள் யாவும் பொங்கி மேலெழுந்து ஓரமாக ஒதுங்கியவுடன் அவற்றை நீக்கி விட்டுப் பின் தூய பாகினை வெல்லம் செய்யும் அச்சுக்களில் ஊற்றி ஆற விடுவர்.

அச்சமயங்களில் அங்கே இருந்து வேடிக்கை பார்க்கும் எனக்கு சூடான வெல்லம் கிடைக்கும். அதன் சுவையே அலாதி. அவ்வயலில் ஒரு கிணறுண்டு. அக்கிணற்றிலிருந்து நீரை இறைக்க கபிலை என அழைக்கப்படும் ஒரு பாத்திரத்தை ஏற்றத்தில் கயிறு கொண்டு கட்டு, இரு மாடுகளைக் கொண்டு இறைத்து வயலுக்குப் பாய்ச்சுவர். கிணற்றின் அருகாமையில் இருக்கும் ஒரு பெரிய தொட்டியில் நீர் முதலில் நிரம்பிப் பின் அத்தொட்டியின் அடி பாகத்தில் பொருத்திய ஒரு சிறு குழாய் வழியே நீர் வயலுக்குப் பாயும். எனது குளியல் தினம் தோறும் அந்தத் தண்ணீர்த் தொட்டியிலேயே நிறைவேறும். நான் நீச்சல் கற்றுக்கொண்டது அத்தொட்டியிலேயே ஆகும்.

வயலின் நண்டுகள் நிறைந்திருக்கும் எனக்கு அமைந்த ஓரிரு நண்பர்களுடன் சேர்ந்து அந்த நண்டுகளை வேடிக்கை பார்ப்பதும் உண்டு. அக்கிராமத்தின் நுழைவாயிலில் ஒரு பெரிய அரசமரமும் அதனைச் சுற்றி ஒரு பெரிய திண்ணையும் இருந்தது. அத்திண்ணையில் கிராமத்தைச் சேர்ந்த பலர் அமர்ந்து உரையாடுவர். அந்த இடத்தில் அவ்வப்பொழுது திடகாத்திரமாக விளங்கிய ஒரு காளை மாட்டைக் கொண்டு பசுக்களுக்கு உடல் உறவின் வழியே கருத்தரிக்க வைப்பர். பல வீடுகளில் பசுக்களும் எருமைகளும் வளர்த்துப் பராமரித்ததால் சாணிக்குப் பஞ்சமிருக்காது. ஆங்காங்கே தெருவில் விழுந்து கிடக்கும் சாணியை அள்ளியெடுத்து வந்து வரட்டியாகத் தட்டி அடுப்பெரிக்கவும், பசுஞ்சாணியை வீட்டு வாசலை மெழுகவும். உபயோகிப்போம். தற்போது மாடுகள் எதுவும் இத்தகைய முறையில் கருத்தரிக்க வைக்கப்படுவதில்லை. மாறாக நாம் குளிர்பதனம் அருந்தப் பயன்படுத்தும் ஸ்ட்ரா போன்ற குழாய்களில் காளையின் விந்தினை குளிர் பதன நிலையில் பராமரித்து அதனைக் கொண்டே கருத்தரிக்க வைக்கப் படுகின்றன. தான் மட்டும் தாராளமாகத் தன் மனைவியுடன் வேண்டிய பொழுதெல்லாம் காதலின்பத்தைத் தவறாமல் அனுபவிக்கும் மனிதன் தனக்குத் தன் ரத்தத்தையே பாலாக்கித் தரும் பசுவுக்கு இயற்கையில் கிடைக்க வேண்டிய சுகத்தைத் தடுக்கிறான்.

பசுவின் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து கருத்தரிக்கச் செய்து அதன் இரத்தத்தைப் பாலாகக் கறந்து தானும் குடித்துப் பிறருக்கும் விற்று வயிறு வளர்க்கும் மனிதன் கறவை வற்றியவுடன் அப்பசுவை அடிமாடாகக் கேரளாவுக்கும் பிற இடங்களுக்கும் விற்றுவிடுகிறான். அவ்வாறு அடிமாடாக விற்கப்படும் பசுக்கள் பல லாரி முதலிய வண்டிகளில் ஏற்றப்பட்டும் கால்நடையாகவும் வெகுதூரம் கொண்டு செல்லப்பட்டு இறுதியில் கொலை செய்யப் படுகின்றன. இடையில் அவற்றுக்கு தாகம் தீர்க்கத் தண்ணீர் கூடத் தருவதில்லை.

இவை அனைத்திற்கும் மேலாக மனிதன் விளைநிலங்களை வீட்டு மனைகளாக வெகு வேகமாக மாற்றி வருவது மிகவும் அபாயகரமான போக்கு. இயற்கையை அழித்தால் மனிதன் வாழ இடமிருக்காது. இயற்கை அழிவைத் தடுத்து மனிதர் குலம் பன்னெடுங்காலம் வாழ வழி வகுப்பது நம் அனைவரது கடமை. ஏனெனில் நாம் ஒவ்வொருவரும் தற்போது தாங்கியிருக்கும் உடலைப் பிரிந்து மீண்டும் இதே மண்ணில் பிறந்தால் நாம் உண்ண உணவும் உயிர் வாழ உறைவிடமும் தரவல்லது இயற்கையே ஆகும். அத்துடன் பசு எர்மை முதலிய மிருகங்கள் கறவை வற்றிய பின்னரும் அவற்றை உரிய மருத்துவ வசதிகளும் தீனியும் கொடுத்து நல்ல முறையில் பராமரித்தல் வேண்டும். அதற்குரிய பலனை அவற்றின் சாணத்திலிருந்தே பெற இயலும். மாட்டு எருமைச் சாணத்திலிருந்து பயோ காஸ் எனும் எரிவாயு உற்பத்தி செய்யலாம். சாணத்தை இயற்கை உரமாக வயல்களுக்குப் பயன்படுத்தினால் நல்ல மகசூல் கிடைப்பதுறுதி. இரசாயன உரங்களையும் பலவகையான பூச்சி மருந்துகளையும் உபயோகித்து இயற்கையில் விளையும் உணவையும் விஷமாக்கிவிட்டோம் நாம்.

இயற்கையன்னையின் மடியில் ஓடிவரும் கங்கை நதியின் ஓரத்தில் ஒரு கன்னிப்பெண் அந்நதியின் அழகை ரசித்தவாறு இயற்கையில் தன் மனதை இசைத்துப் பாடும் ஒரு இன்பமான பாடல் இன்றைய பாடலாக இதோ:

சலசல ராகத்திலே

திரைப்படம்: ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
இயற்றியவர்: பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி
பாடியவர்: பி. சுசீலா
ஆண்டு: 1960

சலசல ராகத்திலே
டம்மு டும்மூ தாளத்திலே

சலசல ராகத்திலே
டம்மு டும்மூ தாளத்திலே
சத்தங்கள் போடுவதேன் கங்கையக்கா நீ
சங்கீதம் கத்துக்கொண்டதும் எங்கேயக்கா?

சலசல ராகத்திலே
டம்மு டும்மூ தாளத்திலே
சத்தங்கள் போடுவதேன் கங்கையக்கா நீ
சங்கீதம் கத்துக்கொண்டதும் எங்கேயக்கா?

ஓஓஓ ஓஓஓஓ ஓஓஓ ஓஓஓ ஓஓஓஓஓஓஓ

ஆத்துக்குள்ளே நானிருக்க அக்கரையிலே மனமிருக்க
ஆத்துக்குள்ளே நானிருக்க அக்கரையிலே மனமிருக்க
அலைமேலே அலை எழுந்து ஆளை வந்து தள்ளிடுதே
நேரத்திலே போகணும் நீண்ட கதை பேசணும்
ஆழத்தையும் தாண்டியே அன்பு முகத்தைப் பாக்கணும்
அன்பு முகத்தைப் பாக்கணும்

சலசல ராகத்திலே
டம்மு டும்மூ தாளத்திலே
சத்தங்கள் போடுவதேன் கங்கையக்கா நீ
சங்கீதம் கத்துக்கொண்டதும் எங்கேயக்கா

பச்சை மலை சாரலிலே பனியுறங்கும் பாறையிலே
பச்சை மலை சாரலிலே பனியுறங்கும் பாறையிலே
படைபோலே பறவையெல்லாம் பறந்து வந்து கூடுதே

மீனும் மீனும் மேயுதே வேடிக்கையாய்ப் பாயுதே
ஆனந்தமாய்க் கண்களும் அவரை நாடிப் போகுதே
அவரை நாடிப் போகுதே ஓஓஓஓ

சலசல ராகத்திலே
டம்மு டும்மூ தாளத்திலே
சத்தங்கள் போடுவதேன் கங்கையக்கா நீ
சங்கீதம் கத்துக்கொண்டதும் எங்கேயக்கா?

சலசல ராகத்திலே
டம்மு டும்மூ தாளத்திலே
சத்தங்கள் போடுவதேன் கங்கையக்கா நீ
சங்கீதம் கத்துக்கொண்டதும் எங்கேயக்கா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக