ஞாயிறு, 30 அக்டோபர், 2011

போட்டது மொளச்சுதடி கண்ணம்மா

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்

வெற்றுடம்புடன் வயலில் இறங்கி சேற்றிலும் சகதியிலும் வெயிலின் கொடுமையினையும் பாராது நாளெல்லாம் உழைத்து, நிலத்தை உழுது, நீர் பாய்ச்சி, உரமிட்டு வளப்படுத்திப் பின் விதை விதைத்து, நாற்றைப் பிடுங்கி நட்டுப் பயிர் வளர்த்து உலகுக்கெல்லாம் உணவளிக்கும் உழவர்களே மனித குலத்தோரில் தலைசிறந்தவர்கள் ஆவர். ஏனைய பிற வர்க்கத்தினரெல்லாம் உழவர்களைத் தொழுது அவர்கள் அளிக்கும் உணவைப் பெற்று உயிர் வாழும் சாமான்யர்களே என்பது இக்குறளின் பொருள். உழவர்கள் பயிர் விளையப் பாடுபடவில்லையெனில் உலகிலுள்ள அனைவரும் வெகுவிரைவில் உண்ண உணவின்றி மடியலாகும்.

தேராட்டம் காரினிலே ரொம்பத் திமிரோடு போறவரே எங்க
ஏரோட்டம் நின்னு போனா உங்க காரோட்டம் என்னவாகும்?

என்று ஒரு விவசாயி தெருவில் நடந்து செல்கையில் அவரை அலட்சியம் செய்து அவர் மேல் மோதாக்குறையாக விரைவாகத் தனது காரை ஓட்டிச் செல்லும் ஒருவரைப் பார்த்துப் பாடுவதாக அமைந்த கவிஞர் கண்ணதாசனின் பாடல் வரிகளும் விவசாயியின் மேன்மையை எடுத்துச் சொல்கின்றன.

உலகிலுள்ளோர் யாவரும் கைகூப்பித் தொழுது வணங்கிப் போற்றத் தக்க இத்தகைய விவசாயிகளுக்கு நமது பாரதத் திருநாட்டில் உரிய மரியாதை கிடைக்கிறதா? அவர்களது உழைப்பிற்குத் தகுந்த ஊதியம் கிடைக்கிறதா? இயற்கைச் சீற்றங்கள் மற்றும் அரசின் செயல்பாடுகள் உட்பட்ட பல்வேறு சமுதாயச் சிக்கல்களிலிருந்து மீள இவ்விவசாயிகளுக்கு ஏதேனும் வழியிருக்கிறதா? உலகிலுள்ளோர் அனைவருக்கும் உணவு வழங்கும் இந்த விவசாயிகள் குடும்பத்தார் உண்ணப் போதிய உணவாகிலும் கிடைக்கிறதா?

இன்றைய சூழ்நிலையில் இந்திய நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் தினமும் நடைபெறும் நிகழ்ச்சிகளைப் பற்றி அறிகையில் இக்கேள்விகளுக்கு இல்லை என்ற பதிலே கிடைக்கிறது.

முறைகேடாக் விவசாய நிலங்களை மாநில அரசுகள் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்காமல் தட்டிப் பறித்து அரசின் சாலை முதலிய திட்டங்களுக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் ஏற்படுத்தும் தொழிற்சாலைகளுக்கும் வழங்கப் படுவது பல ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வரும் ஒரு அவலமாகும். அதன் உச்சகட்டமாக இன்று மஹாராஷ்டிர மாநிலத்தில் அணு மின் நிலையம் அமைக்க ஜெய்தாபூர் எனும் ஊரிலிருக்கும் விவசாய நிலங்கள் பெருமளவில் மக்களின் விருப்பத்திற்கு மாறாக அரசினால் கையகலப் படுத்தப் பட்டதால் அப்பகுதி மக்கள் மேற்கொண்ட போராட்டத்தை அடக்க அரசு மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் சில விவசாயிகள் பலியாகியுள்ளனர். இதே போல் உத்திரப்பிரதேச மாநிலத்தை ஆளும் மாயாவதி அரசு பல விவசாயிகளின் நிலங்களை வலுக்கட்டாயமாகப் பிடுங்கிக்கொண்டு அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க மறுத்து வருவதால் உண்டான கிளர்ச்சியை அடக்கப் போலீசார் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் சில விவசாயிகள் இறந்தது மட்டுமின்றி அவர்களுள் இருந்த தீவிரவாதப் போக்குள்ள சிலர் தாங்கள் வைத்திருந்த துப்பாக்கிகளால் திருப்பி சுட்டதில் போலீசார் சிலரும் உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறு விவசாயிகள் அல்லலுறுகையில் கலங்கிய குட்டையில் மீன்பிடிப்பது போல் அரசியல்வாதிகள் பலர் இவ்விவசாயிகளுக்காகக் குரல் கொடுப்பதாக நாடகமாடும் அவலமும் இடையிடையே அரங்கேறுகிறது. ஆந்திர மானிலத்திலும் பிற பல மாநிலங்களிலும் கடும் உழைப்பால் விவசாயிகள் உற்பத்தி செய்த அதிகப் படியான தானியங்களை சேமிக்கத் தகுந்த கிடங்குகளைக் கட்டாமல் அரசுகள் வாளாவிருந்ததால் இவ்வாறு உற்பத்தியான தானியங்கள் அரசு நிறுவனங்களால் கொள்முதல் செய்யப் படாமையால் அவ்விவசாயிகள் அவற்றைப் பாதிக்கும் குறைந்த விலையில் நஷ்டத்திற்குத் தனியார் துறை வியாபாரிகளுக்கு விற்க வேண்டிய கட்டாய சூழ்நிலையில் தள்ளப்பட்டுள்ளனர். ஏற்கெனவே கொள்முதல் செய்யப்பட்ட தானியங்கள் ஏராளமானவை வெட்ட வெளியில் அடுக்கப்பட்டதால் கெட்டுப் போய் வீணாகியுள்ளன. அவ்வாறு வீணகும் தானியங்களைத் தீயிட்டுக் கொளுத்துவது ஒன்றே அரசுகள் செயல்பாடாக உள்ளது. மாறாக வீணாகும் தானியங்களை ஏழை மக்களூக்கு விநியொகிக்கும்படி உச்சநீதிமன்றம் பல முறை அறிவுறுத்தியும் செவிடன் காதில் ஊதிய சங்கு போலவே அவ்வறிவுறைகளை அரசு ஏற்காமல் அலட்சியப் போக்கையே தொடர்ந்து கடைபிடித்து வருகிறது.

இவ்வாறு விவசாயின் வயிற்றில் அன்றாடம் அடித்து, தனியார் துறைப்பணமுதலைகளின் கைப்பாவையாக ஆகி நாட்டை சுடுகாடாக மாற்றிக்கொண்டிருக்கின்றனர் இன்றைய சுயந்ல அரசியல்வாதிகளும் அதிகாரிகளும். இந்த நிலை மாறி விவசாயிக்கு உரிய மரியாதை அளிக்கப்பட்டு அவர்கள் இலாபகரமாக விவசாயம் செய்ய ஏதுவான சூழ்நிலையை அரசுககள் ஏற்படுத்திக் கொடுத்தால் மட்டுமே அவர்களுக்கும் சேர்த்து அனைவருக்கும் உணவு கிடைக்கும்.

வரப்புயற நீருயரும் நீருயர நெல்லுயரும்
நெல்லுயரக் குடியுயரும் குடியுரக் கோனுயர்வான்

அந்த நல்ல நாள் விரைவில் வாராதா? தான் அல்லலுற்ற போதிலும் உலகிலுள்ள பிறர் வாழக் கனியும் கிழங்கும் தானியங்களும் கணக்கின்றித் தரும் விவசாயியின் வாழ்வில் இன்பம் மலராதா? இத்தகைய கேள்விகள் தினமும் மனதைத் துளைத்து வருத்தத்தை அளிக்கும் போதிலும் பாரதத்துக்கு ஆங்கிலேயரின் ஆட்சியிலிருந்து சுதந்திரம் கிடைத்ததற்கு முன்பாகவே சுதந்திரம் கிடைத்து விட்டதாக உணர்ந்து

ஆடுவோமே பள்ளு பாடுவோமே
ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று ஆடுவோம்

என்று மஹாகவி பாரதியார் பாடியது போல் விவசயிகளது வாழ்வில் இன்பம் மலர்ந்து அவர்கள் நல்வாழ்வு வாழ்வதாக உணர்ந்து அந்த உணர்விலிருந்து மலர்கிறது இன்றைய பாடல்.

போட்டது மொளச்சுதடி கண்ணம்மா

திரைப்படம்: நவராத்திரி
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்

போட்டது மொளச்சுதடி கண்ணம்மா கைநிறைய
கேட்டது கெடைச்சுதடி சின்னம்மா
போட்டது மொளச்சுதடி கண்ணம்மா
கேட்டது கெடைச்சுதடி சின்னம்மா கைநிறைய
கேட்டது கெடைச்சுதடி சின்னம்மா
போட்டது மொளச்சுதடி கண்ணம்மா
கேட்டது கெடைச்சுதடி சின்னம்மா கைநிறைய
கேட்டது கெடைச்சுதடி சின்னம்மா

நாத்து வந்து சிரிக்குதடி காலத்திலே
சோத்துப் பானை கொதிக்குதடி நேரத்திலே
நாத்து வந்து சிரிக்குதடி காலத்திலே
சோத்துப் பானை கொதிக்குதடி நேரத்திலே நேரத்திலே

போட்டது மொளச்சுதடி கண்ணம்மா
கேட்டது கெடைச்சுதடி சின்னம்மா கைநிறைய
கேட்டது கெடைச்சுதடி சின்னம்மா

மண்ண நம்பி உழுது வச்சி மழைய நம்பி வெதெ வெதெச்சி
மண்ண நம்பி உழுது வச்சி மழைய நம்பி வெதெ வெதெச்சி
வயல நம்பி வாழ்ந்திருந்தா கண்ணம்மா
வயல நம்பி வாழ்ந்திருந்தா கண்ணம்மா ஒரு
பயல நம்பத் தேவையில்லே சின்னம்மா ஒரு
பயல நம்பத் தேவையில்லே சின்னம்மா

போட்டது மொளச்சுதடி கண்ணம்மா
கேட்டது கெடைச்சுதடி சின்னம்மா கைநிறைய
கேட்டது கெடைச்சுதடி சின்னம்மா

ஆட்டம் போடும் மனிதருக்கும் ஆரவாரம் செய்பவர்க்கும்
ஆட்டம் போடும் மனிதருக்கும் ஆரவாரம் செய்பவர்க்கும்
கோட்டை கட்டி வாழ்பவர்க்கும் கண்ணம்மா
கோட்டை கட்டி வாழ்பவர்க்கும் கண்ணம்மா இந்த
மூட்டையில் தான் உயிரிருக்கு சின்னம்மா நெல்லு
மூட்டையில் தான் உயிரிருக்கு சின்னம்மா

போட்டது மொளச்சுதடி கண்ணம்மா
கேட்டது கெடைச்சுதடி சின்னம்மா கைநிறைய
கேட்டது கெடைச்சுதடி சின்னம்மா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக