ஞாயிறு, 30 அக்டோபர், 2011

சிந்தையறிந்து வாடி

நாமனைவரும் பிறந்தது முதலே மாயையில் உழன்று இனம் புரியாத ஒரு மயக்க நிலையிலேயே இவ்வுலகில் வாழ்கிறோம். நிலையாமை ஒன்றே நிலையானதுலகு எனும் நிதர்சனமான உண்மையை உணராமல் நம்முள் பல்வேறு காரணங்களுக்காகவும் ஏற்றத் தாழ்வு பாராட்டுகிறோம். அறிவென நாம் நினைப்பதெல்லாம் அறிவல்ல.

எப்பொருள் எத்தன்மைத்தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு

எனும் குறள் வழி நின்று ஆழ்ந்து சிந்திப்போமாகில் நமது இந்த பூதவுடல் திட திரவப் பொருட்களாலானது என்றும், காலப்போக்கில் பௌதிக இரசாயன மாற்றங்களுக்குள்ளாகி ஒரு குறிப்பிட்ட காலத்தில் முழுதும் சிதைந்து போய் மண்ணோடு மண்ணாகக் கூடியது எனும் உண்மையை நாம் உணர்வோம். நம் உடலில் இயக்கம் நிலைபெறக் காரணமாகிய உயிர் இவ்வுடலை விட்டுப் பிரிந்த பின்னர் வேறு உடலைத் தரிக்கிறது என்று ஒரு சாராரும், உடல் அழிகையில் உயிரும் அழிகிறது என மற்றொரு சாராரும், உயிர் அமரநிலை அடைகிறது என வேறொரு சாராரும் கருதுகையில் இவ்வாறான பலவிதமான கருத்துக்களுள் எது உண்மை என்று நம் யாருக்கும் தெரியாது என்பதே கண்கூடான உண்மை.

இளமைப் பருவத்தில் இவ்வுலகம் முழுவதும் இன்பமயமானதெனவும் நாம் வாழ்வில் அனுபவிக்கப் பல சுகங்கள் உள்ளன எனவும் எண்ணி அத்தகைய சுகங்களைத் தேடி அனுபவிப்பதிலேயே இளமைக் காலம் முழுவதையும் நாம் கழித்து விடுகிறோம். இளமைப் பருவம் முடிந்து முதுமை சிறிது சிறிதாக நம்மை வந்தடைகையில் நாம் சிறிது சிறிதாக நம் இன்பக் கனவுகளிலிருந்து விடுபட்டு நாம் இவ்வுலகை விட்டுச் செல்லும் காலம் விரைவில் வருவதை எண்ணி மயங்குகிறோம், இவ்வுலகில் நாம் வாழ்நாளில் பழகிய உறவுகளிடமிருந்தும் வேறு பல விஷயங்களிலிருந்தும் பிரிந்து செல்ல மனமில்லாமையால் மரணத்தைக் கண்டு அஞ்சுகிறோம். இத்தகைய மரண பயம் அனைத்து உயிர்களுக்கும் உண்டாவது இயற்கையே. மரண பயமின்றி மரணத்தைத் துச்சமாக மதித்து வீரச் செயல்கள் பல புரிவோரும் நம்மிடையே உள்ளனர் என்பதையும் நாமறிவோம்.

கடவுள் இல்லையென மறுத்துத் தான் ஒரு பகுத்தறிவாளன் என்று பறைசாற்றிக் கொண்டு சாதிமத பேதத்தை வளர்த்துப் பொன்னுக்கும் பொருளுக்கும் அடிமையாகித் தம் வாழ்நாள் முழுமையும் பொய்யிலேயே வாழ்ந்த பொய்யர்களின் பொய் மூட்டையின் சுருக்கு அவிழ்ந்து விட்டது. இத்தகைய பொய்யர்களும் தம் கொள்கைகளைக் காற்றில் பறக்கவிட்டுப் பல காரணங்களால் ஆலயங்களுக்குச் சென்று வழிபடுவதும் இரகசியமாகப் பல வ்அழிபாடுகளைச் செய்வதும் அம்பலமாகியுள்ளது. இத்தகைய செயல்களுக்கு அவர்களுக்குத் தன்னையறியாமல் ஏற்பட்ட அச்சமே காரணமாகும்.

பெரும்பாலானோர் வாழ்நாளின் பெரும்பகுதியை சுகபோகங்களில் கழித்து முதுமையடைந்த பின்னர் ஞானத்தை அடைந்து அதன் பின்னர் இவ்வுலக இன்பங்களில் பற்றை விடுத்து என்றும் நிரந்தரமான பொருளான இறைவனை நாடுகின்றனர். இத்தகையோரில் குறிப்பிடத் தக்கவர்கள் அருணகிரிநாதரும், பட்டிணத்தாரும் ஆவர். இவர்கள் தம் வாழ்நாளில் பெரும் செல்வந்தர்களாக வாழ்ந்து பின்னர் மெய்ஞானமெய்தினர் என்பது சரித்திரம். இதற்கு மாறாக குழந்தைப் பருவத்திலேயே வாழ்வின் அநித்திய நிலையை அறிந்து ஞானமெய்தியவர்கள் பலரும் நம்மிடையே அன்றும் இன்றும் என்றும் வாழ்ந்து வருவதும் கண்கூடான உண்மையே. இத்தகைய ஞானியரில் குறிப்பிடத் தக்க சிலர் திருஞான சம்பந்தர், ஆண்டாள், ஸ்ரீவள்ளி ஆகியோர் ஆவர். திருஞான சம்பந்தர் சிறு பிள்ளையாக இருந்த காலத்தில் தன் தாய் தன்னைத் தனியே விட்டுச் சென்ற தருணத்தில் அம்மா என்று பசிக்குரல் கொடுக்கையில் அக்குரல் கேட்டு ஓடோடி வந்து இறைவி அவருக்கு ஞானப்பாலூட்டியமையால் கவிபாடும் திறம் பெற்று இளம் வயதிலேயே பெரும் ஞானியானார். ஆண்டாள் சிறுமியாக இருந்த காலத்திலிருந்தே ஸ்ரீமந் நாராயணுக்குத் தன் தந்தை பூஜை செய்கையில் அணிவிப்பதற்காகத் தொடுத்த மாலையைத் தான் அணிந்து அழகு பார்த்துப் பின்னர் கொடுத்ததும் அரங்கனையே தன் மணாளனாக மனதில் வரித்து அவ்வண்ணமே அடைந்ததும் புராணம். அதே போல் மலைக்குறவர் குலத்தில் உதித்த ஸ்ரீவள்ளி தமிழ்க் கடவுள் முருகனையே கணவனாக வரித்துப் பின்னர் அவனையே மணமுடிந்ததும் புராணத்தில் நாம் காண்கிறோம்.

இத்தகைய கதைகளெல்லாம் கற்பனையாகவே இருப்பினும் அவற்றில் கூறப்படும் மையக்கருத்து யாதெனில் நாம் அடையத்தக்க மெய்ப்பொருள் என்றும் இறையருள் ஒன்றே என்பதாகும்.

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே

என்று அருணகிரிநாதர் மொழிந்துள்ளதன் தத்துவமாவது இவ்வுலகில் உள்ளவை யாவும் இறைவனின் வடிவமே என்பதே. எங்கும் இறைவன் நிறைந்திருப்பதைக் காண்பவனே மெய்ஞானி.

இறைவனை நாம் எந்த வடிவத்தில் வழிபடுகிறோமோ அந்த வடிவத்திலேயே அவன் நமக்கு அருள்புரிகிறான் என்பது பகவத் கீதை கூறும் ரகசியம். அவ்வழியே ஆராய்வோமெனில் திருஞான சம்பந்தர் ஞானப் பால் உண்ட கதையும், ஆண்டாள் அரங்கநாதனை மணாளனாய் அடைந்த கதையும் ஸ்ரீவள்ளி முருகனை மணந்ததும் உண்மையே என்பதை உணரலாகும்.

சிந்தையறிந்து வாடி

திரைப்படம்: ஸ்ரீவள்ளி
இயற்றியவர்: பாபநாசம் சிவன்
இசை: ஆர். சுதர்சன், ராஜகோபாலஷர்மா
பாடியவர்: பி.ஏ. பெரியநயகி

சிந்தையறிந்து வாடி குமரன் சிந்தையறிந்து வாடி
செல்வக் குமரன் சிந்தையறிந்து வாடி செல்வக் குமரன்
செந்தூரிடம் தங்கும் கொந்தாள் மலர்க் கந்தன்
சிந்தையறிந்து வாடி

அந்தோ என் ஆசையெல்லாம்
அந்தோ என் ஆசையெல்லாம் கொள்ளை கொண்டானே
அந்தோ என் ஆசையெல்லாம் கொள்ளை கொண்டானே
அந்தோ என் ஆசையெல்லாம் கொள்ளை கொண்டானே
ஆறுமுக வடிவேலன் சிவபாலன் சிந்தையறிந்து வாடி

சின்னஞ்சிறு வயதில் என்னை மாலையிட்டானே
சின்னஞ்சிறு வயதில் என்னை மாலையிட்டானே
சிரிக்கச் சிரிக்கப் பேசி கைவளை தொட்டானே

அன்னம் பாலும் வெறுக்க அவனியில் கைவிட்டானே
அன்னம் பாலும் வெறுக்க அவனியில் கைவிட்டானே
அன்னம் பாலும் வெறுக்க அவனியில் கைவிட்டானே
அடிமைப்பெண்டிர் என்றே முடிய மறந்திட்டானே
சிந்தையறிந்து வாடி

கட்டித் தொட்டுமே இதழ் கனியமுதம் கொடுத்தான்
கட்டித் தொட்டுமே இதழ் கனியமுதம் கொடுத்தான்
கலவி மதனைப் போலே குலவி முத்தம் கொடுத்தான்
கலவி மதனைப் போலே குலவி முத்தம் கொடுத்தான்

கலவி மதனைப் போலே குலவி முத்தம் கொடுத்தான்
எட்டுக்குடி வேலவன் இசையமுதம் படித்தான்
எட்டுக்குடி வேலவன் இசையமுதம் படித்தான்
என்றும் பிர்யேனென்று என் கைமேல் அடித்தான்
என்றும் பிர்யேனென்று என் கைமேல் அடித்தான்

சிந்தையறிந்து வாடி செல்வக் குமரன் சிந்தையறிந்து வாடி
செந்தூரிடம் தங்கும் கொந்தாள் மலர்க் கந்தன்
சிந்தையறிந்து வாடி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக