ஞாயிறு, 30 அக்டோபர், 2011

ஆத்திலே தண்ணீ வர

வருடந்தோறும் மேதினம் வருவதும் அன்றொரு நாள் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளித்து விட்டு நாட்டிலுள்ள தலைவர்கள் என அழைக்கப்படும் பலரும் தொழிலாளர்களுக்கு வாழ்த்துச் சொல்வதும் தொழிலாளர்கள் நலன் பற்றி அறிக்கை வெளியிடுவதும் வாடிக்கையாகிப் போன நிலையில் இந்த ஆண்டும் அந்த மேதினம் வந்து வந்த சுவடே தெரியாமல் போய்விட்டது. ஞாயிற்றுக்கிழமை மேதினமாகிப் போனதால் ஒரு நாள் கூடுதல் விடுமுறை கிடைக்கும் வாய்ப்பும் கைநழுவிப் போனது ஒன்றே தொழிலாளர்களுக்கு இந்த வருடம் மிச்சம்.

அதிகாலையில் தொடங்கி அந்தி சாயும் வரை அன்றாடம் ஓயாது உழைத்துப் பிறருக்கு வீடுகள் கட்டித் தரும் கட்டடத் தொழிலாளிகள் குடியிருப்பதோ குடிசையிலும் தெருவோரத்திலும். படாத பாடுபட்டுப் பட்டும் நூலுமாக நெய்து பிறர் அணிந்து மகிழ ஆடைகள் செய்யப் பாடுபடும் நெசவாளர்கள் கட்டுவதோ கந்தை. குடிப்பதோ கஞ்சி. இதுவே இந்தியா என்று சொல்லி உலகிலுள்ளோர் யாவரும் எள்ளி நகையாடுமளவுக்கு நாட்டில் அரசாங்கங்கள் ஆட்சிபுரிகின்றன.

ஏழைகள் நலனுக்காகப் பாடுபடுவோம் என வாக்குறுதியளித்து ஆட்சிக்கு வருவோர் செய்வதோ அரசுத் தொழிகள் யாவற்றையும் முடக்கிப் போட்டு கல்வி, மருத்துவம், விமானப் போக்குவரத்து, எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு, தகவல் தொழில்நுட்பம், தொலைத் தொடர்பு என அனைத்துத் துறைகளையும் தனியாருக்கு தாரை வார்த்து அவர்கள் வரி ஏய்ப்பு செய்ய வழிவகுத்து அதன் மூலம் தங்கள் குடும்பத்தாரும் கூட்டத்தாரும் மட்டுமே செல்வந்தர்களாக வகை செய்து மக்களை சுரண்டுவது ஒன்றே. நாட்டின் கனிம வளங்களை சட்டவிரோதமாகச் சுரங்கங்கள் வெட்டி எடுத்து வெளிநாட்டினருக்கு விற்று நம் நாட்டில் மலைவாழ் மக்கள் குடியிருப்புப் பகுதிகளை அழித்து இயற்கையை மாசுபடுத்தி சுடுகாடாக ஆக்குகவதும், ஆற்று மணலை அளவின்றி அள்ளிச் சென்று அநியாய விலைக்கு வீடுகளும் பிற கட்டிடங்களும் கட்ட விற்று நிலத்தடி நீர் வற்றச் செய்து ஆறுகளை வெறும் புதைகுழிகளாக ஆக்கி மக்கள் குடிக்கவும் நீர் இல்லாமல் செய்வதொன்றே ஜனநாயக ஆட்சியின் செயல்பாடு. பல நாட்களாய்ப் பாடுபட்டு நெல்லும், கனியும், கிழங்கும் தானியங்களும் விளைவித்து அவற்றை விற்பனை செய்து தாமும் பிறரும் வாழ வழிசெய்யலாம் எனக் காத்திருக்கும் விவசாயிகளது விளைபொருட்களுக்கு ஏற்ற விலை கிடைக்காமல் செய்து இடைத் தரகர்கள்கள் கொள்ளையடிக்க விட்டு விவசாயிகள் விளைநிலங்களை அடிமாட்டு விலைக்கு விற்பனை செய்யும் நிலைக்குத் தள்ளி அந்நிலங்களைப் பலமடங்கு விலைக்கு கட்டுமானப் பணிக்கு விற்று தாங்கள் மட்டுமே இலாபம் அடைவதொன்றே அரசியல்வாதிகளின் தலையாய தொழிலாக உள்ளது.

காத்திருந்தவன் பெண்டாட்டியை நேற்று வந்தவன் கொண்டு போவது போல் பாடுபட்டவன பலனடைய வழியின்றிச் செய்து இவ்வாறு நாட்டு மக்களைக் காக்காமல் அவர்களது அடிப்படை உரிமைகளைப் பரித்து வாழ வழியில்லாமல் செய்து தாங்கள் மட்டும் பலனடையும் வகையில் அரசியல்வாதிகளும் அரசாங்கங்களும் செயல்படுவது ஏன். இதற்கெல்லாம் காரணம் என்ன? விடை இதோ:

ஆத்திலே தண்ணீ வர

ஆஆஆஆஆஆ ஓஓஓஓஓஓஓஓ ஓஓஓ

ஆத்திலே தண்ணீ வர அதிலொருவன் மீன் பிடிக்க
காத்திருந்த கொக்கு அதைக் கவ்விக் கொண்டு போவதும் ஏன்
ஆத்திலே தண்ணீ வர அதிலொருவன் மீன் பிடிக்க
காத்திருந்த கொக்கு அதைக் கவ்விக் கொண்டு போவதும் ஏன்
கண்ணம்மா கண்ணம்மா அதைப்
பார்த்து அவன் ஏங்குவதேன் சொல்லம்மா

பாத்தி கட்டி நாத்து நட்டுப் பலனெடுக்கு்ம் நாளையிலே
பூத்ததெல்லாம் வேறொருவன் பாத்தியமாப் போவதுமேன்
பாத்தி கட்டி நாத்து நட்டுப் பலனெடுக்கு்ம் நாளையிலே
பூத்ததெல்லாம் வேறொருவன் பாத்தியமாப் போவதுமேன்
கண்ணம்மா கண்ணம்மா கலப்பை
புடிச்சவனும் தவிப்பது ஏன் சொல்லம்மா கலப்பை
புடிச்சவனும் தவிப்பது ஏன் சொல்லம்மா

நன்னானே நானேனானே நானே நன்னானே
நன்னானே நன்னானே நானே நன்னானே
நன்னானே நானேனானே நானே நன்னானே
நன்னானே நன்னானே நானே நன்னானே

பஞ்செடுத்துப் பதப்படுத்தி பக்குவமாய் நூல் நூற்று
நெஞ்சொடிய ஆடை நெய்தோம் கண்ணம்மா இங்கு
கந்தலுடை கட்டுவதேன் சொல்லம்மா
பஞ்செடுத்துப் பதப்படுத்தி பக்குவமாய் நூல் நூற்று
நெஞ்சொடிய ஆடை நெய்தோம் கண்ணம்மா இங்கு
கந்தலுடை கட்டுவதேன் சொல்லம்மா ஆஆஆஆஆ

காத்திருக்கும் அத்தை மவன் கண்கலங்கி நிற்கையிலே
நேத்து வந்த ஒருவனுக்கு மாத்து மாலை போடுவதேன்?
காத்திருக்கும் அத்தை மவன் கண்கலங்கி நிற்கையிலே
நேத்து வந்த ஒருவனுக்கு மாத்து மாலை போடுவதேன்?
கண்ணம்மா கண்ணம்மா அவள்
நேத்திரத்தைப் பறிப்பதும் ஏன் சொல்லம்மா

நன்னானே நானேனானே நானே நன்னானே
நன்னானே நன்னானே நானே நன்னானே

ஏற்றத் தாழ்வும் ஏமாற்றும் இவ்வுலகில் இருப்பதுதான்
இத்தனைக்கும் காரணமாம் கண்ணம்மா
ஏற்றத் தாழ்வும் ஏமாற்றும் இவ்வுலகில் இருப்பதுதான்
இத்தனைக்கும் காரணமாம் கண்ணம்மா இதை
எல்லோர்க்கும் நீ எடுத்து சொல்லம்மா கண்ணம்மா
எல்லோருக்கும் நீ எடுத்து சொல்லம்மா

ஆத்திலே தண்ணீ வர அதிலொருவன் மீன் பிடிக்க
காத்திருந்த கொக்கு அதைக் கவ்விக் கொண்டு போவதும் ஏன்
கண்ணம்மா கண்ணம்மா அதைப்
பார்த்து அவன் ஏங்குவதேன் சொல்லம்மா

நன்னானே நானேனானே நானே நன்னானே
நன்னானே நன்னானே நானே நன்னானே
கண்ணம்மா சொல்லம்மா கண்ணம்மா சொல்லம்மா
நன்னானே நானேனானே நானே நன்னானே
நன்னானே நன்னானே நானே நன்னானே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக