ஞாயிறு, 30 அக்டோபர், 2011

போயும் போயும் மனிதனுக்கிந்த

இன்று தேதி 13. ஆங்கிலேயர்களின் நம்பிக்கைப்படி 13 ஒரு அதிர்ஷ்டமில்லாத எண் (அன்லக்கி நம்பர்). ஆனால் இதே எண் தமிழர்களுக்கு அதிர்ஷடத்தைக் கொண்டு வந்துள்ளதென எண்ணுமளவிற்கு இன்று வெளியிடப்பட்ட மாநிலத் தேர்தல் முடிவுகள் மக்கள் விரோதமான அரசியல்வாதிகளின்ன் போக்கிற்கு பதிலடி கொடுத்துள்ளதைக் காட்டுகின்றன.

சிலர் பிறரது தவறுகளால் விளையும் பலன்களைக் கண்டு தங்களைத் திருத்திக் கொள்வர். இன்னும் சிலம் தமது தவறுகளால் விளையும் பலன்களைக் கண்டு திருந்துவர். வேறு சிலர் எதனைக் கண்டும் திருந்த மாட்டார்கள். இத்தகைய திருந்தாத மனிதர்களையே திரும்பத் திரும்பத் தங்களது தலைவர்களாகத் தேர்ந்தெடுக்கும் வழக்கம் இன்னமும் மாறியதாகத் தெரியவில்லை.

தற்போதைய ஆட்சி மாற்றத்துக்கு வழிவகுத்ததவர்கள் சுமார் 45% வாக்காளர்களே. 40% வாக்காளர்கள் பழைய ஆட்சியே தொடர்வதற்கே வாக்களித்துள்ளனர். இந்த நிலை மிகவும் தெளிவாக உணர்த்துவது என்னவெனில் மக்களில் ஒரு சாரார் ஒரு தலைவரைத் தேர்ந்தெடுக்கையில் அவரை நல்லவர் என்று கண்மூடித் தனமாக நம்புவதும், ஒரு சாரார் அனைவருமே தவறு செய்பவர்களே என்று அலட்சிய மனப் பான்மையுடன் வாக்களிக்காதிருப்பதும், ஒரு சாரார் நேர்மையைக் கடைபிடிக்காமல் கையூட்டும் இலவசப் பரிசுகளையும் பெற்றுக்கொண்டு தங்களுக்கு சாதகமாக செயல்படும் தலைவர்களை மட்டுமே தேர்ந்துடுப்பதும், ஒரு சாரார் நாட்டு நடப்புகளைப் பற்றி அறிந்து கொள்ளாது தெளிவில்லாத மன நிலையில் யாரோ ஒருவருக்கு வாக்களிப்பதும், பலர் வாக்களிக்காதிருப்பதுமே ஆகும்.

மக்களில் பலர் சமுதாய உணர்வின்றி வாழ்ந்து வருவது இதன் மூலம் தெளிவாகிறது. தன் வாழ்நாள் முழுவதும் பொய்மையே பேசிப் பிறரை என்றும் ஏமாற்றியே வாழ்ந்து வரும் சிலர் அவர்களது குற்றங்கள் ஆதாரபூர்வமாகப் பலரும் அறியும் வண்ணம் வெளீயான பின்னரும் தங்களைக் குற்றமற்றவர்களென்று கூறிக்கொண்டு மீண்டும் மீண்டும் மக்களின் அறியாமையைத் தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு தொடர்ந்து தன் சுயநலனை மட்டுமே பேணி வாழ இடமளிக்கும் இத்தகைய பகுத்தறிவற்ற சமுதாய நிலை மாறி உண்மையைத் தெளிவாக அறிந்து அதன் அடிப்படையில் தம்மை ஆள்வோரைத் தேர்ந்தெடுக்கும் அறிவுபூர்வமான சமுதாய நிலை என்று நம் நாட்டில் மலர்கிறதோ அன்றே மக்கள் நல்வாழ்வு வாழ வழிபிறக்கலாகும். அதுவரை தற்போது நிகழ்ந்துள்ளது போன்ற மாற்றங்கள் எவையும் நிரந்தரமான நற்பலனை ஏற்படுத்துவது நிச்சயமல்ல.

மனிதனை மனிதன் மதிப்பது மட்டுமின்றி மனித மனத்தின் தன்மையை அறிந்து அவ்வறிவின் மூலம் தெளிவான முடிவுகளை மேற்கொள்ளும் தகுதியை என்று மக்கள் அடைகின்றனரோ அன்றே சமுதாயம் வளம் பெறும். பொய் முகங்களை அணிந்து மெய்யன்பர்கள் போல் நாடகமாடும் போலிகளை அடையாளம் காண்பதே மெய்யான பகுத்தறிவாகும்.

போயும் போயும் மனிதனுக்கிந்த

திரைப்படம்: தாய் சொல்லைத் தட்டாதே
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
ஆண்டு: 1962

போயும் போயும் மனிதனுக்கிந்த
புத்தியைக் கொடுத்தானே இறைவன்
புத்தியைக் கொடுத்தானே அதில்
பொய்யும் புரட்டும் திருட்டும் கலந்து
பூமியைக் கெடுத்தானே மனிதன்
பூமியைக் கெடுத்தானே

போயும் போயும் மனிதனுக்கிந்த
புத்தியைக் கொடுத்தானே

கண்களிரண்டில் அருளிருக்கும் சொல்லும்
கருத்தினில் ஆயிரம் பொருளிருக்கும்
கண்களிரண்டில் அருளிருக்கும் சொல்லும்
கருத்தினில் ஆயிரம் பொருளிருக்கும்
உள்ளத்தில் பொய்யே நிறைந்திருக்கும் அது
உடன் பிறந்தோரையும் கருவறுக்கும்

பாயும் புலியின் கொடுமையை இறைவன்
பார்வையில் வைத்தானே புலியின்
பார்வையில் வைத்தானே இந்தப்
பாழும் மனிதன் குணங்களை மட்டும்
போர்வையில் மறைத்தானே இதயப்
போர்வையில் மறைத்தானே

போயும் போயும் மனிதனுக்கிந்த
புத்தியைக் கொடுத்தானே

கைகளைத் தோளில் போடுகிறான் அதைக்
கருணை என்றவன் கூறுகிறான்
கைகளைத் தோளில் போடுகிறான் அதைக்
கருணை என்றவன் கூறுகிறான்
பைகளில் எதையோ தேடுகிறான் கையில்
பட்டதை எடுத்து ஓடுகிறான்

போயும் போயும் மனிதனுக்கிந்த
புத்தியைக் கொடுத்தானே இறைவன்
புத்தியைக் கொடுத்தானே அதில்
பொய்யும் புரட்டும் திருட்டும் கலந்து
பூமியைக் கெடுத்தானே மனிதன்
பூமியைக் கெடுத்தானே

போயும் போயும் மனிதனுக்கிந்த
புத்தியைக் கொடுத்தானே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக