செவ்வாய், 26 ஜூலை, 2011

அப்பன் வீட்டு சொத்தைப் போல

6 ஏப்ரல் 2011

சொல்லுவது யார்க்கும் எளிது அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்

எனும் குறள் வழியே தன் வாழ்நாள் உள்ளளவும் உண்மை ஒன்றையே பேசி என்றும் தான் பிறருக்கும் கூறும் அறிவுரைகள் யாவற்றையும் முதற்கண் தான் கடைபிடித்து தன் வாழ்க்கையே பிறரது வாழ்க்கைக்கு நல்லதொரு வழிகாட்டியாக வாழ்ந்து காட்டியவர் அண்ணல் காந்தியடிகள். சுமார் எண்ணூறு ஆண்டுகள் முகலாயர்கள் முகலாயர்களது ஆட்சியின் கீழும் அதன் பின்னர் சுமார் இருநூறு ஆண்டுகள் ஆங்கிலேயரின் ஆதிக்கத்திலும் இருந்த நம் நாட்டை அரும்பாடு பட்டுத் தம் இன்னுயிரையும் தியாகம் செய்து பல தன்னலமற்ற தேசபக்தர்கள் அண்ணல் காந்தியின் தலைமையில் மெய்வருத்தம் பாராது பசி நோக்காது கண் துஞ்சாது பாடுபட்டு விடுதலை பெறச் செய்த பின்னர் ஆட்சியை ஏற்று நடத்திவரும் இந்திய அரசியல்வாதிகள் ஆரும்பாடு பட்டு ஆங்கிலேய ஆதிக்கத்தினின்றும் விடுதலை பெற்ற நமது நாட்டை வெறும் அறுபது ஆண்டுகளுக்குள்ளாகவே அமெரிக்கர் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கத்திற்கு விற்று மீண்டும் இந்தியாவை அடிமை நாடாக ஆக்கியுள்ளனர் என்றால் அது மிகையாகாது.

ஓராயிரம் வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர்
வாராது போல வந்த மாமணியைத் தோற்போமோ?

என்று கேள்வி எழுப்பிய மஹாகவி பாரதியார் அக்கேள்விக்கும் ஆம் எனும் பதில் கிடைத்ததினாலேயே இந்தியா ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் பெறும் நாள் வரை உயிருடன் இல்லாமல் உயிர்நீத்தாரோ?

இத்தகைய இழிநிலைக்குக் காரணம் தேர்தல்கள் வருகையில் வாக்குறுதிகளை வாரி வழங்கி வெற்றி பெற்ற உடன் வழங்கிய வாக்குறுதிகளைக் குப்பையில் போட்டுத் தம் சுயநலம் பேணும் அரசியல்வாதிகளே ஆவர்.

"படிப்பது இராமாயணம் இடிப்பது பெருமாள் கோவில்" என்று ஒரு எடக்கான பழமொழி உண்டு. தான் பிறருக்குக் கூறும் அறிவுரைகளைத் தானே கடைபிடியாத போலி வாழ்க்கை வாழும் புல்லர்கள் குறித்தே இப்பழமொழி அன்று முதல் இன்று வரையிலும் வழங்கி வருகிறது.

இதற்கு அடையாளமாவது தான் ஒரு தன்மானத் தமிழர் என்றும், நெஞ்சுக்கு நீதியை நிலைநிறுத்தியவர் என்றும் தமிழ்மொழியை உலக அளவில் தூக்கி நிறுத்தியவர் எனவும் பெருமை பீற்றிக் கொள்ளும் ஒருவர் திருக்குறளுக்கு எழுதி வைத்த விளக்கமும், அவர் வாழ்ந்த வாழ்க்கையும், நாட்டை ஆண்ட முறையுமே ஆகும்.

வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோல்நோக்கி வாழுங் குடி

திரு மு.வரதராசனார் உரை

உலகத்தில் உள்ள உயிர்கள் எல்லாம் மழையை நம்பி வாழ்கின்றன, அதுபோல் குடிமக்கள் எல்லாம் அரசனுடைய செங்கோலை நோக்கி வாழ்கின்றனர்.

திரு மு.கருணாநிதி உரை

உலகில் உள்ள உயிர்கள் வாழ்வதற்கு மழை தேவைப்படுவது போல ஒரு நாட்டின் குடிமக்கள் வாழ்வதற்கு நல்லாட்சி தேவைப்படுகிறது.

திரு.பரிமேலழகர் உரை

உலகு எல்லாம் வான் நோக்கி வாழும் - உலகத்து உயிர் எல்லாம் மழை உளதாயின் உளவாகா நிற்குமே எனினும், குடி மன்னவன் கோல் நோக்கி வாழும் - குடிகள் அரசன் செங்கோல் உளதாயின் உளவாகா நிற்கும். (நோக்கி வாழ்தல், இன்றியமையாமை. வானின் ஆய உணவை 'வான்' என்றும், கோலின் ஆய ஏமத்தைக் 'கோல்' என்றும் கூறினார். அவ்வேமம் இல்வழி உணவுளதாயினும் குடிகட்கு அதனால் பயனில்லை என்பதாம்.)

தமிழ்நாட்டிலும் இந்தியாவின் மத்திய அரசிலும் நடைபெறும் ஆட்சியின் அழகு அனைவரும் அறிவர். இந்த நாடு ஜனநாயக நாடு என்று சொல்லப்படுவது உலகின் முதல் பொய்யாகும். ஏனெனில் இங்கே மக்களால் மக்களுக்காக மக்கள் நடத்தும் ஆட்சி நடக்கவில்லை. மக்களைப் பலவழிகளிலும் ஏமாற்றியும் மிரட்டியும் ஆசை காட்டித் தவறான வழிகளில் திசைதிருப்பியும் ஆட்சி பீடங்களில் அமரும் பிரதிநிதிகள் தங்களது குடும்பத்தாருக்காகவும் கூட்டாளிகளுக்காகவும் நடத்தும் கொள்ளை ஒன்றே இன்று நடைபெறுகிறது.

இந்நிலை நீடிக்க இன்னமும் அனுமதித்தால் நாடு ஒட்டுமொத்தமாக அந்நியருக்கு அடிமைப்பட்டு மக்கள் யாவரும் பட்டினிச் சாவை சந்திக்க நேரலாம் எனும் அபாயகரமான நிலை எய்திய இந்நாளில் இன்றும் நம்மிடையே வாழ்ந்து வரும் பல் தேசபக்தர்கள் ஒன்று கூடி நம் நாட்டின் சுதந்திரத்தையும் நாட்டு மக்களையும் எவ்வாறாகிலும் காக்க வேண்டும் எனும் நோக்கில் ஒரு புதிய சுதந்திர யுத்தத்தை அண்ணல் காந்தி காட்டிய அஹிம்சை வழியில் துவந்தியுள்ளனர்.

இது குறித்த செய்தியாவது:

நேற்று வரை:

ஊழலுக்கு எதிராக பிரதமர் மன்மோகன் சிங் இம்மாத இறுதிக்குள் நடவடிக்கை டுக்காவிட்டால், சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாக 90 வயதான காந்தியவாதிகள் எச்சரித்துள்ளனர்.

மகாத்மா காந்தியுடன் வெள்ளையனே வெளியேறு உள்ளிட்ட போராட்டங்களில் பங்கேற்ற 93 வயதான ஷாம்பு தத்தா, முராரிலால் குப்தா (90), குமாரி தேவி (84), கோவிந்த் நாராயண் சேத் (78), கே.பி.சாஹூ (79) ஆகியோர் கடந்த இரண்டு வாரங்களாக டில்லி ஜந்தர் மந்தர் பகுதியில், கொட்டும் பனியையும் பொருட்படுத்தாமல் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று இவர்கள் திடீரென சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இது குறித்து ஷாம்பு தத்தா குறிப்பிடுகையில், "முன்பு வெள்ளையனை எதிர்த்து போராடினோம்; இப்போது ஊழல்வாதிகளை எதிர்த்து போராட்டம் நடத்துகிறோம். எம்.பி., மற்றும் எல்.எல்.ஏ.,க்கள் உட்பட யார் தவறு செய்தாலும் தண்டிக்க வழி செய்யும் லோக்பால் கமிஷனை அமைக்க வேண்டும்.

முறைகேடாக சொத்து சேர்த்தவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும். ஜனநாயக நாட்டில் போராட்டம் நடத்த உரிமை உண்டு. இந்த நாட்டுக்காக நாம் எதையும் செய்யவில்லை என்ற எண்ணத்தோடு நாங்கள் தூங்க விரும்பவில்லை. எனவே தான், சாலையில் இறங்கி போராட முடிவு செய்துள்ளோம். இம்மாத இறுதிக்குள் பிரதமர் மன்மோகன் சிங், ஊழலை ஒழிக்க நடவடிக்கை எடுக்காவிட்டால், சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவோம்' என்றார்.

குமாரி தேவி என்ற சுதந்திர போராட்ட வீராங்கனை குறிப்பிடுகையில், "நம் நாட்டில் 50 கோடிக்கும் அதிகமான மக்கள் போதிய உணவில்லாமல் வாழும் நிலை உள்ளது. ஆனால், ஒரு தரப்பு மக்கள், ஊழல் மூலம் வளம் கொழித்து வருகின்றனர். சிரமப்பட்டு பெற்ற குழந்தை வளர்ந்த பின், தவறான பாதைக்கு செல்லும் போது பார்த்துக் கொண்டு தாய் சும்மா இருப்பாளா? அதேபோல தான், தற்போது நெறி தவறும் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக போராட்டம் நடத்துகிறோம்' என்றார்.

புதுடெல்லியில் இன்று

சமூக ஆர்வலரான அனா ஹசாரே டெல்லியில் இன்று முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கிறார். ஊழலுக்கு எதிராகப் போராடி வருகிற ஹசாரே ஊழலை ஒடுக்கும் லோக்பால் சட்ட மசோதாவை நிறைவேற்றக் கோரி இருக்கப் போவதாக அறிவித்துள்ளார். ஹசாரேவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பாஜக மற்றும் பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

பொய்யான வாக்குறிதிகளை அள்ளிவீசி இலவசங்களை அளித்து ஆட்சியைப் பிடிக்கும் யாரும் இனிமேல் சொன்ன வாக்குறுதிகளைக் காப்பாற்றத் தவறி சுயநலம் பேண இயலாத நிலையை நாட்டில் உருவாக்குவது நம் அனைவரது இன்றைய இன்றியமையாத கடமையாகும்.

இன்றைய அரசியல்வாதியின் நடத்தையை விளக்கும் பாடலொன்று இன்றைய பாடலாக மலர்கிறது.

அப்பன் வீட்டு சொத்தைப் போல

திரைப்பட்ம்: தேசிய கீதம்
இயற்றியவர்: பழனி பாரதி
இசை: இளையராஜா
பாடியவர்: புஷ்பவனம் குப்புசாமி

அப்பன் வீட்டு சொத்தைப் போல அனுபவிக்கப் பாக்குறியே
அத்தனைக்கும் பொய்க் கணக்கு எழுதி எழுதிக் காட்டுறியே

அப்பன் வீட்டு சொத்தைப் போல அனுபவிக்கப் பாக்குறியே
அத்தனைக்கும் பொய்க் கணக்கு எழுதி எழுதிக் காட்டுறியே
துப்புக்கெட்ட பொழப்பு இது தப்பு செஞ்சே வாழுறியே
எக்குத் தப்பா கேள்வி கேட்க ஆளில்லேன்னு நெனைக்கிறியே
ரோடு போட ஒதுக்கி வச்சத வீட்டுக்குன்னு பதுக்குறியே
நாட்டு நெலை மறந்து ஒங்க பாட்டுக்குத்தான் அலையுறியே

நாய் படுற பாடு நம்ம நாடு படுது பாரு
ஓட்டுப் போட்டது ஊரு உங்களைத் தூக்கிப் போடுவதாரு?

ஐதர் அலி காலத்துலே போட்ட ரோடு மாறல்லையே
எத்தனையோ கட்டி வந்தும் எங்க கொறை தீரல்லையே
குண்டு குழி ஒண்ணா ரெண்டா கணக்கெடுக்க முடியல்லையே
டெண்டருக்கு விட்டுப்புட்டா கேள்வி கேக்க வழியில்லையே

குத்தங்குறை சொல்ல வந்தா ஏழையத்தான் தான் ஏசுறியே
மத்தபடி மந்திரி வந்தா தாரெடுத்து ஊத்திறியே
தூக்கிப் போடுது ரோடு அதை மாத்திப் போடுவதாரு
கர்ர்ப்பிணி பொண்ணுக பட்ட துன்பக் கணக்கெத் தீக்குது ரோடு

யாரு போட்ட ரோடு நம்ம சர்க்கார் போட்ட ரோடு
யாரு போட்ட ரோடு நம்ம சர்க்கார் போட்ட ரோடு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக