திங்கள், 21 அக்டோபர், 2013

இன்னொருவர் வேதனை

இந்தியாவை அடிமைப்படுத்தி ஆண்டுவந்த வெள்ளையர்களை விரட்டவென்றே செந்தமிழ்க் கவிதைகளைப் பாடி பாரத தேசத்தவர்க்கு சுதந்திர வேட்கையை ஏற்படுத்திய பாரதியார் கப்பலோட்டிய தமிழன் வ.வு.சி. அவர்களைக் குறித்து எழுதிய இரு பாடல்கள் மிகவும் பிரசித்தமானவை. அவற்றுள் முதலாவது கவிதை வெள்ளைக்கார கலெக்டர் வின்ச் துரை கப்பலோட்டிய தமிழன் சிதம்பரம் பிள்ளையைக் கண்டு மிரட்டுவதாக அமைகிறது. இரண்டாவது பாடல் வ.வு.சி. அதற்களித்த பதிலாக அமைகிறது.

வெள்ளைக்கார வின்ச் துரை கூற்று:

நாட்டிலெங்கும் சுவதந்திர வாஞ்சையை
நாட்டினாய் கனல் மூட்டினாய்;
வாட்டியுன்னை மடக்கிச் சிறைக்குள்ளே
மாட்டுவேன் வலி காட்டுவேன்

கூட்டம் கூடி வந்தே மாதரமென்று
கோஷித்தாய் எமைத் தூஷித்தாய்
ஓட்டம் நாங்களெடுக்க வென்றே கப்பல
ஓட்டினாய் பொருள் ஈட்டினாய்.

கோழைப்பட்ட ஜனங்களுக் குண்மைகள்
கூறினாய் சட்டம் மீறினாய்
ஏழைப்பட்டிங்கு இறத்தல் இழிவென்றே
ஏசினாய் வீரம் பேசினாய்.

அடிமைப் பேடிகள் தம்மை மனிதர்கள்
ஆக்கினாய் புன்மை போக்கினாய்
மிடிமை போதும் நமக்கென் றிருந்தோரை
மீட்டினாய் ஆசை ஊட்டினாய்.

தொண்டொன்றே தொழிலாக் கொண்டிருந்தோரைத்
தூண்டினாய் புகழ் வேண்டினாய்
கண்கண்ட தொழில் கற்க மார்க்கங்கள
காட்டினாய் சோர்வை ஓட்டினாய்.

எங்கும் இந்த சுயராஜ்ய விருப்பத்தை
ஏவினாய் விதை தூவினாய்
சிங்கம் செய்யும் தொழிலைச் சிறுமுயல்
செய்யவோ நீங்கள் உய்யவோ?

சுட்டு வீழ்த்தியே புத்தி வருத்திடச்
சொல்லுவேன் குத்திக் கொல்லுவேன்
தட்டிப் பேசுவோ ருண்டோ? சிறைக்குள்ளே
தள்ளுவேன் பழி கொள்ளுவேன்.

தேசபக்தர் சிதம்பரம் பிள்ளை மறுமொழி:

சொந்த நாட்டிற் பரர்க்கடிமை செய்தே
துஞ்சிடோ ம் - இனி அஞ்சிடோம்
எந்த நாட்டினும் இந்த அநீதிகள்
ஏற்குமோ? - தெய்வம் பார்க்குமோ?

வந்தே மாதரம் என்றுயிர் போம்வரை
வாழ்த்துவோம் - முடி தாழ்த்துவோம்
எந்த மாருயி ரன்னையைப் போற்றுதல்
ஈனமோ? - அவ மானமோ?

பொழுதெல்லாம் எங்கள் செல்வங் கொள்ளை கொண்டு
போகவோ? - நாங்கள் சாகவோ?
அழுது கொண்டிருப்போமோ? ஆண்பிள்ளைகள்
அல்லமோ? - உயிர் வெல்லமோ?

நாங்கள் முப்பது கோடி ஜனங்களும்
நாய்களோ? - பன்றிச் சேய்களோ?
நீங்கள் மட்டும் மனிதர்களோ? - இது
நீதமோ? - பிடி வாதமோ?

பாரதத்திடை அன்பு செலுத்துதல்
பாபமோ? - மனஸ் தாபமோ?
கூறும் எங்கள் மிடிமையைத் தீர்ப்பது
குற்றமோ? - இதில் செற்றமோ?

ஒற்றுமை வழி யொன்றே வழியென்பது
ஓர்ந்திட்டோம் - நன்கு தேர்ந்திட்டோ ம்
மற்று நீங்கள் செய்யுங்கொடு மைக்கெல்லாம்
மலைவுறோம்; - சித்தம் கலைவுறோம்.

சதையைத் துண்டுதுண் டாக்கினும் உன்னெண்ணம்
சாயுமோ? - ஜீவன் ஓயுமோ?
இதயத்துள்ளே இலங்கு மஹாபக்தி
ஏகுமோ? - நெஞ்சம் வேகுமோ?

இப்பாடல்களில் உள்ள கருத்துக்கள் இன்றும் நம் நாட்டுக்குப் பொருந்தும் நிலையிலேயே நாடு உள்ளது. பேருக்கு சுதந்திரம் வந்தாலும் உண்மை சுதந்திரம் வரவில்லை. இன்று நம் நாடு இருக்கும் நிலைமை ஆங்கிலேயனிடம் அடிமைப்பட்டிருந்த காலத்தில் இருந்ததை விடவும் மிகவும் கேவலமாக உள்ளது. இதற்குக் காரனம் சுயநல அரசியல்வாதிகளால் நடத்தப்படும் அரசாங்கம் நமது நாட்டை மீண்டும் அந்நியருக்கே விற்று வருவதே ஆகும். ஒவ்வொன்றாக நாட்டின் பெரும் தொழில்கள் யாவும் அந்நியர் வசம் போய்க்கொண்டுள்ளன. சில நாட்களுக்கு முன்னர் சில்லரை வணிகத்தை விலை பேசச் செய்த சதி கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகளின் ஒருமித்த எதிர்ப்பினால் தள்ளிப் போடப் பட்டுள்ளது ஆனால் சமயம் பார்த்து அதை நிறைவேற்றும் கபட எண்ணம் இன்றைய இந்திய அரசிடம் உள்ளது. இந்நிலையில் தற்போது சர்க்கரை ஆலைத் தொழிலை அந்நியருக்குத் திறந்துவிட சதி நடந்து வருகின்றது.

மத்தியப் பிரதேச மாநிலத்தின் தலைநகர் போபால் நகரத்தில் அமெரிக்க நிறுவனமான யூனியன் கார்பைடு நிறுவனத்தில் 26 வருடங்களுக்கு முன்னர் ஏற்பட்ட விஷவாயுக் கசிவினால் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். அந்நிறுவனத்தின் தலைவரான ஆண்டர்சன் என்பவரை சட்டப்படி விசாரணைக்கு உட்படுத்தாமல் திருட்டுத்தனாக அன்றைய மாநில முதல்வர் அர்ஜுன் சிங் டெல்லியில் அப்போது ராஜீவ் காந்தி தலைமையில் அமைந்த மத்திய அரசுடன் சேர்ந்து சதி செய்து அமெரிக்காவுக்குத் திருப்பி அனுப்பி விட்ட பின்னர். அவ்விபத்தில் இறந்தவர்களுக்கும் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு இன்றுவரையிலும் தொடர்ந்து வறுமையிலும் நோய்களாலும் துயருறும் மக்களுக்கும் உரிய இழப்பீடு வழங்கப் படவில்லை. இடையே விஷவாயு விபத்தில் பாதிக்கப் பட்ட பலர் தம்மையறியாமலேயே ஒருசில மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் புதிய மருந்துகளை உருவாக்கக் கையாளும் மருத்துவ சோதனைகளில் பன்றிகளைப் போலப் பயன்படுத்தப் பட்டுள்ளனர்.

இது நாள் வரை விபத்தால் பாதிக்கப் பட்ட ஊரின் பல பகுதிகள் சீரமைக்கப் படாமல் விஷவாயுவின் தாக்கம் காரணமாக சிதிலமுற்ற நிலையிலேயே தொடர்ந்து இருக்கின்றன. யூனியன் கார்பைட் நிறுவனத்திடமிருந்து இதன் பின்னர் அந்நிறுவனத்தை விலைக்கு வாங்கிய டவ் கெமிகல்ஸ் எனும் அமெரிக்க நிறுவனம் சட்டப்படி விபத்தினால் பாதிக்கப் பட்ட நிலப்பரப்பை சீராக்க வேண்டும் அத்துடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். இவற்றில் ஏதொன்றையும் அந்நிறுவனம் இதுவரை செய்யாதிருக்கும் நிலையில் இவ்வாண்டு லண்டன் மாநகரில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளை வழங்குவோராக உள்ளதற்கு இந்தியா மற்றும் லண்டன் மாநகரில் உள்ள இந்தியர்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் இந்திய அரசும் இங்கிலாந்து அரசும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் வெறும் கடிதங்களை எழுதிவிட்டுத் தம் கடமை முடிந்தது எனக் கைவிரித்து பாதிக்கப்பட்ட மக்களை சந்தியில் நிறுத்தியுள்ளனர்.

மக்கள் படும் துயர் கண்டு சிறிதும் இரங்காமல் தம் சுயநலம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு ஆட்சி நடத்தும் கொடியவர்கள் இருக்கும் வரை நம் நாட்டில் மக்கள் நலமாய் வாழ முடியாது. இவ்வீணர்கள் பிறர் துன்பத்திலே இன்பம் காணும் இரக்கமற்ற அரக்கர்களே ஆவர்.

இவர்களது கொடுமைகளை அகற்ற இன்னும் ஒரு சுதந்திரப் போரை மக்கள் நடத்தியாக வேண்டும்.


திரைப்படம்; ஆசை முகம்
இயற்றியவர்: கவிஞர் வாலி
இசை: எஸ்.எம். சுப்பையா நாயுடு
பாடியவர்: டி.எம். சவுந்தரராஜன்

இன்னொருவர் வேதனை இவர்களுக்கு வேடிக்கை
இதயமற்ற மனிதருக்கு இதுவெல்லாம் வாடிக்கை

எத்தனை பெரிய மனிதனுக்கு
எத்தனை சிறிய மனமிருக்கு!
எத்தனை பெரிய மனிதனுக்கு
எத்தனை சிறிய மனமிருக்கு!
எத்தனை சிறிய பறவைக்கு
எத்தனை சிறிய பறவைக்கு
எத்தனை பெரிய அறிவிருக்கு!
எத்தனை பெரிய மனிதனுக்கு
எத்தனை சிறிய மனமிருக்கு!

உயர்ந்தவரென்ன தாழ்ந்தவரென்ன?
உடல் மட்டுமே கருப்பு அவர்
உதிரம் என்றும் சிவப்பு
ஒரு வழி நடந்தார் உயர்ந்தவராவார்
ஒரு வழி நடந்தார் உயர்ந்தவராவார்
பல வழி கடந்தார் தாழ்ந்தவராவார் 
ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்

எத்தனை பெரிய மனிதனுக்கு
எத்தனை சிறிய மனமிருக்கு!

கோழியைப் பாரு காலையில் விழிக்கும்
குருவியைப் பாரு சோம்பலைப் பழிக்கும்
காக்கையைப் பாரு கூடிப் பிழைக்கும்
காக்கையைப் பாரு கூடிப் பிழைக்கும்
நம்மையும் பாரு நாடே சிரிக்கும்

எத்தனை பெரிய மனிதனுக்கு
எத்தனை சிறிய மனமிருக்கு!

தனக்கொரு கொள்கை அதற்கொரு தலைவன்
தனக்கொரு பாதை அதற்கொரு பயணம்
தனக்கொரு கொள்கை அதற்கொரு தலைவன்
தனக்கொரு பாதை அதற்கொரு பயணம்
உனக்கென வேண்டும் உணர்ந்திடு தம்பி
உழைத்திட வேண்டும் கைகளை நம்பி 
ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்

எத்தனை பெரிய மனிதனுக்கு
எத்தனை சிறிய மனமிருக்கு!
எத்தனை பெரிய மனிதனுக்கு
எத்தனை சிறிய மனமிருக்கு!
எத்தனை சிறிய பறவைக்கு
எத்தனை சிறிய பறவைக்கு
எத்தனை பெரிய அறிவிருக்கு!
எத்தனை பெரிய மனிதனுக்கு
எத்தனை சிறிய மனமிருக்கு!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக