திங்கள், 21 அக்டோபர், 2013

ஒரு பெண்புறா

உறவுகளே உலக வாழ்வில் உயிர்களை இணைக்கும் பாலம். உறவுகளே பிறவியெனும் பெருங்கடலைக் கடக்க உதவும் தோணி, ஏனெனில் உறவுகளிலே உறைகிறான் இறைவன். நாம் ஒவ்வொருவரும் ஏதேனும் ஒரு வகையில் ஒருவரோடொருவர் உறவு கொண்டுள்ளோம், அத்துடன் அண்ட சராசரத்தின் ஒவ்வொரு அணுவினோடும் நாம் யாவரும் உறவுகொண்டுள்ளோம். உலகை உயிர்கள் நேசிப்பதாலேயே வாழ்க்கை இந்த உலகில் நிலைபெற்றிருக்கிறது. கருவினுள்ளே உருவாகும் உயிர் உருவம் கொண்டு வளர்ந்து கருவுறுவதால் இவ்வுலகில் ஒவ்வொரு உயிரின் பரம்பரையும் தொடர்கிறது. உறவின் அடிப்படையே அன்பு. பரஸ்பர அன்பு நிலைபெற்று வளர்வதால் உறவு வலுப்படுகிறது. உலக வாழ்வில் நாம் அனுபவிக்கும் இன்ப துன்பங்களின் பலனாக சில சமயம் உறவுகளுக்குள்ளே பிணக்கு ஏற்படுவது இயல்பே. அப்பிணக்குத் தீர உரிய முயற்சிகளை ஆரம்ப நிலையிலே மேற்கொள்கையில் பிணக்கு வளராமல் தடுக்கப்பட்டு உறவு முறியாமல் காக்கப்படுகிறது.  உறவினர்களோ நண்பர்களோஒருவரோடொருவர் எக்காரணம் கொண்டும் பிணங்குகையில் அதன் காரணம் யாதென சிந்தித்து பரஸ்பரம் விட்டுக்கொடுத்து உறவு தொடர்ந்திடுவதொன்றே குறிக்கோளாகக் கொண்டால் பிணக்கு தீர்க்கப்படும்.

பிணக்கு உரிய காலத்தில் தீர்க்கப் படாமல் ஒருவரோடொருவர் போட்டி போட்டு இருவரில் யார் பெரியவர் என்று நிரூபிக்கும் வகையில் தொடர்கையில் அது பெரும் பகையாக உருவெடுக்கிறது. அத்தகைய பகை நம்மை மட்டுமின்றி நம் வம்சத்தவரையும் பாதிக்கக்கூடும் என்பதை நாம் உணர்வோமினில் யாரிடமும் பகைமை பாராட்டுவதை விடுத்து நல்லுறவை வளர்க்கும் விதமாக நாம் நடந்து கொள்வோம். நமக்கு நஷ்டம் ஏற்பட்டாலும் அதைப்பெரிது படுத்தாது சமரசப் பாதையில் செல்வோமெனில் சமாதானம் நிலைபெறுகிறது.

எதிர்பாராத விதமாக உறவுகளிடையே பகைமை மூண்டாலும் அத்தகைய பகை நம் வாரிசுகளை பாதிக்காத வகையில் நம் செயல்பாடு இருத்தல் நலம். நமது பகையை நம் பிள்ளைகளின் மேல் சுமத்துதல் நியாயமன்று. ஒருவரோடொருவர் மிகுந்த அன்புகொண்டு விளங்கிய இரு நண்பர்களுக்கிடையே சில சுயநலவாதிகளால் பகை ஏற்பட்டு, போட்டியாக வளர்ந்த நிலையில் அவ்விருவரில் ஒருவரது மகள் இன்னொருவரது மகனை நேசிக்கும் சூழ்நிலை உருவாகிறது. இதனை அறிந்து அப்பெண்ணின் தந்தை தன் மகளைக் கண்டிக்கிறான். மகள் தந்தை சொல்வதை ஏற்காமல் தன் காதலை வலியுறுத்துகிறாள். தன் மகளை மிகவும் பிரியத்துடன் வளர்த்து வரும் தந்தை கோபம் கொண்டு முதன்முறையாக அவளைக் கைநீட்டி அடித்துவிடுகிறான். தன்னிடம் அடி வாங்கிய பெண் மனம் குமுறி அழுவதைக் கண்டு அவனது மனம் பொறுக்கவில்லை.

தன் மனதில் எழும் பெரும் துயரை அத்தந்தை வெளியிடுவதாக அமைந்த இப்பாடல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குஷ்புவுடனும் சரத் பாபுவுடனும் இணைந்து நடித்த அண்ணாமலை திரைப்படத்தில் இடம் பெறுகிறது.

ஒரு பெண்புறா கண்ணீரில் தள்ளாட

திரைப்படம்: அண்ணாமலை
இயற்றியவர்: கவிஞர் வைரமுத்து
இசை: தேனிசைத் தென்றல் தேவா
பாடியவர்: கே.ஜே. ஜேசுதாஸ்

ஒரு பெண்புறா கண்ணீரில் தள்ளாட என்னுள்ளம் திண்டாட
என்ன வாழ்க்கையோ? சுமைதாங்கியே சுமையானதே
என்தன் நிம்மதி போனதே மனம் வாடுதே 
ஒரு பெண் புறா

கட்டாந்தரையில் ஒரு துண்டை விரித்தேன் 
தூக்கம் கண்ணை சொக்குமே அது அந்தக் காலமே
மெத்தை விரித்தும் சுத்தப் பன்னீர் தெளித்தும்
கண்ணில் தூக்கம் இல்லையே அது இந்தக் காலம்
என் தேவனே தூக்கம் கொடு மீண்டும் அந்த வாழ்க்கை கொடு
பாலைவனம் கடந்து வந்தேன் பாதங்களை ஆறவிடு

ஒரு பெண்புறா கண்ணீரில் தள்ளாட என்னுள்ளம் திண்டாட
என்ன வாழ்க்கையோ? சுமைதாங்கியே சுமையானதே
என்தன் நிம்மதி போனதே மனம் வாடுதே 
ஒரு பெண் புறா

கோழி மிதித்து ஒரு குஞ்சு சாகுமா?
அன்று பாடம் படித்தேன் அது பழைய பழமொழி
குஞ்சு மிதித்து இந்தக் கோழி நொந்ததே
இதை நெஞ்சில் நிறுத்து இது புதிய பழமொழி

ஆண் பிள்ளையோ சாகும் வரை 
பெண் பிள்ளையோ போகும் வரை
விழியிரண்டும் காயும் வரை
அழுது விட்டேன் ஆன வரை

ஒரு பெண்புறா கண்ணீரில் தள்ளாட என்னுள்ளம் திண்டாட
என்ன வாழ்க்கையோ? சுமைதாங்கியே சுமையானதே
என்தன் நிம்மதி போனதே மனம் வாடுதே 
ஒரு பெண் புறா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக