திங்கள், 21 அக்டோபர், 2013

உருண்டோடும் நாளில்

இளம் வயதில் யாவருக்கும் இருக்கும் நோக்கம் இவ்வுலக வாழ்வில் தாம் தேடத்தக்க பொருள் குறித்தும் வசதியாக வாழ்வது குறித்துமே பெரும்பாலும் அமைவது இயல்பு. வளர்ந்து பெரியவர்களாகி, புத்திரப்பேறு அடைந்து அப்புத்திரர்களை வளர்த்து ஆளாக்கி, அவர்களுக்குத் தகுந்த வாழ்க்கையை அமைத்துக் கொடுத்த பின்னர் பலர் தம் கடமை முடிந்துவிட்டதாக எண்ணி மீதமிருக்கும் வாழ்நாட்களை வீணாக்கி ஓய்வெடுத்து மகிழ்வதொன்றையே குறிக்கோளாகக் கொள்கின்றனர். இவர்களது வாழ்வின் நோக்கங்கள் யாவும் இவ்வுலக வாழ்க்கையுடன் முடிந்து போகின்றன. தான் யார் என்பதையோ, தாம் பிறந்த நோக்கம் என்ன என்பதையோ இவர்கள் சிறிதும் எண்ணிப் பார்ப்பதில்லை. சுயநல இருள் சூழ்ந்த இவர்களது வாழ்க்கை யாருக்கும் எவ்விதப் பயனையும் தருவதில்லை. இவ்வுலகுக்கு இத்தகையோர் பாரமாகவே விளங்குகின்றனர்.

இதற்கு மாறாகச் சிலர் தம் குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்தி செய்த பின்னர் சமுதாயத்தில் உள்ள பிறரைப் பற்றியும் அக்கரை கொண்டு சேவை புரியும் நோக்கம் கொண்டு மீதமுள்ள தமது வாழ்நாட்களைப் பயனுள்ளதாக அமைத்துக் கொள்கின்றனர். இத்தகைய பொதுநல நோக்கர்கள் பிறரிலும் மேலான நிலையை எய்திப் புகழ் பெறுகின்றனர். அவர்களது வாழ்க்கை ஒளிமயமாக அமைகிறது. அவ்வொளியில் இவ்வுலகம் பயன் பெறுகிறது.

இவ்விரு பாதைகளில் நாம் எதைத் தேர்ந்தெடுக்கிறோம் என்பதைப் பொறுத்தே நாம் யாரென்பது நமக்கும் இவ்வுலகுக்கும் தெரியலாகும். மரணத்தை நோக்கிய மனித வாழ்வில் தாம் இருந்த சுவடே தெரியாமல் இந்த உலகிலிருந்து மறைந்து காணாமல் போவது சரியா? அல்லது உலகம் போற்றும் பொதுநலப் பாதையில் வாழ்வை அமைத்துக்கொண்டு இறந்த பின்னும் தனது பெயர் இவ்வுலகிலுள்ளோர் பலராலும் என்றும் எண்ணிப் போற்றத்தக்கதாக விளங்கும் வண்ணம் வாழ்வது சரியா?

இரண்டில் ஒன்றைத் தேர்வு செய்வது நம் ஒவ்வொருவரின் விருப்பமே ஆகும். காலம் பொன்னானது. அதை எவ்வாறு செலவிடுவது என்பதை நாமே நிர்ணயிக்கிறோம். நமது நிர்ணயம் வாழ்வை ஒளிபொருந்தியதாக அமைப்பதும் இருள் சூழ்ந்ததாக அமைப்பதும் நம் விருப்பமே. The ball is in our court!

உருண்டோடும் நாளில்

திரைப் படம்: புனர் ஜென்மம்
இயற்றியவர்: பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம்
இசை: டி. சலபதி ராவ்
பாடியவர்:பி. சுசீலா
ஆண்டு: 1961

உருண்டோடும் நாளில் கரைந்தோடும் வாழ்வில்
ஒளி வேண்டுமா இருள் வேண்டுமா?
உருண்டோடும் நாளில் கரைந்தோடும் வாழ்வில்
ஒளி வேண்டுமா இருள் வேண்டுமா?

திருந்தாத தேகம் இருந்தென்ன லாபம்?
திருந்தாத தேகம் இருந்தென்ன லாபம்?
இது போதுமா இன்னும் வேண்டுமா? ஒய் ஒய் ஒய்

உருண்டோடும் நாளில் கரைந்தோடும் வாழ்வில்
ஒளி வேண்டுமா இருள் வேண்டுமா?

திரும்பாத போதும் விருந்தாக மேவும்
திரும்பாத போதும் விருந்தாக மேவும்
குணம் வேண்டுமா விஷம் வேண்டுமா? ஹஹஹஹ

உருண்டோடும் நாளில் கரைந்தோடும் வாழ்வில்
ஒளி வேண்டுமா இருள் வேண்டுமா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக