செவ்வாய், 22 அக்டோபர், 2013

புரியாது புரியாது

கதைகளிலும், நாடகங்களிலும், திரைப்படங்களிலும் பெரும்பாலோர் அதிகம் விரும்புவது மர்மங்கள் நிறைந்த படைப்புகளே. கதையின் அடுத்தடுத்த கட்டங்களும் முடிவும் என்னவாக இருக்குமென்று எளிதில் யூகிக்க இயலாத வகையில் புனையப் பட்ட கதைகள் பிற கதைகளைக் காட்டிலும் அதிக சுவாரஸ்யமளிக்கும் என்பது அனைவரும் ஒப்புக்கொள்ளக் கூடியதே. கதையில் வரும் கதாபாத்திரங்கள் பலவித சொல்லொணாத துயரும் துன்பமும் அடைந்து அவற்றிலிருந்து மீள்வார்களா மாட்டார்களா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்களின் கருத்தை ஈர்க்கும் விதமாக இத்தகைய கதைகள் அமைகையில் பெரும் வரவேற்பைப் பெறுகின்றன. அது போலவே நம் வாழ்விலும் எதிர் காலத்தில் என்ன நடக்கும் என்பதும் நமது துன்பங்கள் நீங்கி இன்பம் விளையுமா என்பதும் கேள்விக்குறியாக விளங்கிடும் போதிலும் மனதில் உற்சாகம் ஏற்படும் விதத்தில் நாம் பல செயல்களில் தினம் ஈடுபட்டு வாழ்க்கையில் பெரும் துன்பங்களுக்கிடையிலும் தொடர்ந்து வாழ்வில் கிடைக்கும் இன்பங்களையும் அனுபவித்து நல்ல காலம் வரும் எனும் எதிர்பார்ப்புடன் மகிழ்ச்சியாக வாழ்கிறோம்.

முற்காலத்தில் நடந்ததையும் எதிர் காலத்தில் நடக்கக் கூடியதையும் முற்றிலும் உணர்ந்தவர்களாக நாம் கருதும் ஞானியர் வாழ்வை நாம் அனுபவிப்பது போல அவ்வளவு சுவாரஸ்யத்துடன் அனுபவிப்பார்களா என்பது கேள்விக் குறியே. காரணம் அவர்களுக்கு எதிர்பார்ப்புகளும் கிடையாது ஏமாற்றங்களும் கிடையாது. சாமான்யர்களான நாம் பலவித எதிர்பார்ப்புகளுடன் வாழ்கையில் நம் எதிர்பார்ப்புகள் நிறைவேறுகையில் மன மகிழ்ச்சி கொள்கிறோம், நிறைவேறாமல் போகையில் கவலை கொள்கிறோம். நம்மில் சிலர் ஏமாற்றத்தைத் தாங்காமல் அழுவதும் உண்டு. எவ்வாறாகிலும் அத்தகைய மன வருத்தமும் அழுகையும் கூட நமக்குப் பெரும் இன்பத்தைத் தருபவையே. அழுவதிலே இன்பம் கண்டேன் என்று கவிஞர் கண்ணதாசன் கூறியுள்ளார்.

இருப்பினும் துன்பமும் தொல்லையும் எல்லை மீறுகையில் வாழ்வில் இன்பம் காண்பதரிது. இத்தகைய துன்பங்களையும் தொல்லைகளையும் ஒரு எல்லைக்குள் வைத்திருக்க நாம் செய்ய வேண்டியது யாதெனில் நமது ஆசைகளையும் உடைமைகளையும் கட்டுக்குள் வைப்பதே ஆகும். ரயிலிலோ, பெருந்துகளிலோ, ஆகாய விமானத்திலோ பயணம் மேற்கொள்ளும் ஒருவர் எவ்வளவுக்கெவ்வளவு தன்னுடன் எடுத்துச் செல்லும் பிற பொருட்களைக் குறைத்துக் கொள்கிறாரோ அவ்வளவுக்கு அவரது பயணம் இன்பகரமாக அமைவது போலவே வாழ்க்கை இன்பகரமாக இருக்க நமது தேவைகளையும் சுமைகளையும் குறைத்துக் கொள்வதே ஏற்ற வழியாகும். 

நம்மிடம் நம் தேவைக்கு மிஞ்சிப் பொருளிருக்குமாயின் அதனை ஏழை எளியோருக்கு தானம் செய்வதும், சமுதாய நன்மைக்குப் பயன்படுத்துவதும் நமது வாழ்வை மேலும் இன்பகரமாக ஆக்க்குவதுடன் நம்மை இந்த உலகிலுள்ளோர் மிகவும் அன்புடனும் மரியாதையுடனும் எண்ணிப் போற்றும் நிலையும் உருவாகும். சேவை செய்யாது உலகில் பிறந்து வாழ்ந்து மடிவது மானிடப் பிறவியைப் பயனற்றதாகச் செய்யும். நம அறிவு சேவை மனப்பான்மையை வளர்த்துக் கொள்கையில் ஞானமாக மிளிர்ந்து பக்தியாக வளர்கிறது. அவ்வளர்ச்சி நம் பிறவியைப் பயனுள்ளதாக்கி பிறவியில்லாப் பெருவாழ்வடைய வழிவகுக்கும். பிறருக்குதவ நம்மிடம் அளவுக்கு மிஞ்சிய பொருள் இருக்க வேண்டுமென்பது அவசியமல்ல. நமது தேவைக்கென வைத்திருக்கும் பொருளையும் நம்மைக் காட்டிலும் அதிகத் துன்பத்துக்காளானோருக்காக ஈவது பெருமை சேர்ப்பதாகும். 



திரைப்படம்: ஆடிப்பெருக்கு
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: ஏ.எம். ராஜா
பாடியவர்: பி.பி. ஸ்ரீனிவாஸ்
ஆண்டு: 1962

புரியாது புரியாது வாழ்க்கையின் ரகசியம் புரியாது
புரியாது புரியாது வாழ்க்கையின் ரகசியம் புரியாது
வளரும் ஆசைக்கு அளவேது?
முடிவேது முடிவேது முடிந்த பின் உலகம் நமக்கேது
முடிந்ததை நினைத்தால் பயனேது?

ஒரு சிலர் வாழ்வு தியாகத்தில் கூடும்
உரிமையும் அன்பும் மறுபடி சேரும்
ஒரு சிலர் வாழ்வு தியாகத்தில் கூடும்
உரிமையும் அன்பும் மறுபடி சேரும்
திருமணமாகி ஒரு மனமாகும்
பெண்மனம் தாய்மையை தினம் தேடும்

வாழ்க்கையின் ரகசியம் புரியாது
வளரும் ஆசைக்கு அளவேது

பெருமைகள் பேசும் பூமியில் பிறந்தார்
பிறந்தவர் தாயின் மடிதனில் வளர்ந்தார்
பெருமைகள் பேசும் பூமியில் பிறந்தார்
பிறந்தவர் தாயின் மடிதனில் வளர்ந்தார்
வளர்ந்தவர் வாழ்வில் கொடுப்பதை மறந்தார்
ஒரு பிடி சாம்பலில் முடிவானார்

வாழ்க்கையின் ரகசியம் புரியாது
முடிந்ததை நினைத்தால் பயனேது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக