திங்கள், 21 அக்டோபர், 2013

இது நாட்டைக் காக்கும் கை

பட்டினில் ஆடையும் பஞ்சினில் உடையும் 
பண்ணி மலைகளென வீதி குவிப்போம் 
கட்டித் திரவியங்கள் கொண்டுவருவார் 
காசினி வணிகருக்கு அவை கொடுப்போம் 

ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம் 
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம் 
ஒயுதல்செய் யோம் தலை சாயுதல் செய்யோம் 
உண்மைகள் சொல்வோம் பல வண்மைகள் செய்வோம். 

குடைகள்செய் வோம் உழு படைகள் செய்வோம் 
கோணிகள் செய்வோம் இரும்பாணிகள் செய்வோம் 
நடையும் பறப்புமுணர் வண்டிகள் செய்வோம் 
ஞாலம் நடுங்க வரும் கப்பல்கள் செய்வோம் 

என்று இந்திய நாட்டில் பல்தொழில் பெருகி வளர வேண்டிக் கனவு கண்ட பாரதி அக்கனவினை நனவாக்க வல்ல தொழிலளர்களை வாழ்த்தி,

இரும்பைக் காய்ச்சி உருக்கிடுவீரே!
யந்திரங்கள் வகுத்திடுவீரே!
கரும்பைச் சாறு பிழிந்திடுவீரே!
கடலில் மூழ்கிநன் முத்தெடுப்பீரே!
அரும்பும் வேர்வை உதிர்த்துப் புவிமேல்
ஆயிரந் தொழில் செய்திடுவீரே!
பெரும்புகழ் நுமக்கேயிசைக் கின்றேன்.
பிரம தேவன் கலையிங்கு நீரே! 

மண்ணெடுத்துக் குடங்கள் செய்வீரே!
மரத்தை வெட்டி மனை செய்குவீரே!
உண்ணக் காய்கனி தந்திடுவீரே!
உழுது நன்செய்ப் பயிரிடுவீரே!
எண்ணெய், பால்நெய் கொணர்ந்திடுவீரே!
இழையை நாற்றுநல் லாடை செய்வீரே!
விண்ணினின்றெமை வானவர் காப்பார்!
மேவிப் பார்மிசைக் காப்பவர் நீரே! 

என்றும் பாடினார். 

நாட்டின் விடுதலைக்காகவே வாழ்ந்து தன் குடும்ப நலனையும் இரண்டாம் பட்சமாகக் கருதிய அம்மஹாகவி பாரத நாடு ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் பெறுமுன்னரே இவ்வுலகை விட்டுச் சென்றதாலோ என்னவோ நம் நாடு சுதந்திரம் பெற்றதாகப் பொய்யானதொரு தோற்றத்தை ஏற்படுத்தி மக்களை மயக்கத்தில் வீழ்த்திய பின் சிறிது சிறிதாக நமது நாட்டை அந்நியருக்கே விற்று வருகின்றனர். இன்று நம் நாட்டை ஆள்வோர். நம் நாட்டினர் முதலீடு செய்து நடத்திப் பயன் பெற வேண்டிய தொழில்கள் யாவும் ஒன்றன் பின் ஒன்றாக அந்நிய பன்னாட்டு நிறுவனங்களின் கையில் ஒப்படைக்கப் பட்டுள்ளன. விளைவு! இன்று நம் நாட்டிலேயே அந்நிய நாட்டவர் தொழிலதிபர்களாகவும் அவர்களின் கீழே கைகட்டி நின்று சேவை செய்யும் தொழிலாளிகளாக நம் நாட்டு மக்களும் செயல்புரியும் இழிநிலை வந்துற்றது. 

அவ்வாறு அந்நிய முதலாளிகளிடம் பணி செய்து நம்மவர்கள் ஈட்டும் ஊதியத்திலும் பெரும் பகுதியைப் பல விதமான வரிகளின் மூலமும் விலைவாசி ஏற்றத்தின் மூலமும். நாட்டு மக்களுக்கு இலவசமாகக் கிடைத்து வந்த கல்வி, மருத்துவம் முதலானவற்றை விலைபொருட்களாக்கி அவற்றின் விலைவாசியையும் விஷம் போல் நாளுக்கு நாள் ஏற்றியும் வழிப்பறி செய்து பறிப்பது போல் பிடுங்கிக் கொள்கின்றனர். இன்று நாட்டை ஆள்வோர். மேலும் ஆட்சி முறைகேடாக நடைபெறுவதால் தொழில்களும் நசிந்து வருகின்றன. குற்றங்கள் பெருகி வழக்குகள் நடந்து வரும் நிலையால் பல்வேறு தொழில்கள் இன்று முடங்கிப் போயுள்ளன. அந்நிய நாட்டவரும் நம் நாட்டில் மூலதனம் செய்ய இன்று முன்வருவது குறைந்துள்ளதால் வெகு விரைவில் நமது தேசத்தில் வேலையில்லாத் திண்டாட்டம் பெருக வாய்ப்புள்ளது. 

நம்மை ஆட்சி செய்யத் தகுதியுள்ளவர்களாக நாம் நம்பிய நபர்கள் அவ்வாறில்லாமல் தம் சுயநலம் ஒன்றே பேணுபவர்களாக இருப்பதே இதற்கு அடிப்படைக் காரணமாகும். இரவோடிரவாக நம் நாட்டு மக்களின் கையில் எஞ்சியிருந்த சில்லரை வணிகத்தையும் அந்நியருக்கு விற்றுவிடப் பெரும் முயற்சி செய்து வருகின்றனர் இந்த சதிகாரர்கள். இத்தகைய சதிகாரர்கள் கையிலிருந்து நாட்டின் ஆட்சி மீட்கப்பெற்று நல்லாட்சி செய்யத் தகுதி பெற்று விளங்குவோரிடம் வழங்கப் பட வேண்டும். தொழில்கள் நாட்டில் மேன்மையடைந்து மக்கள் உண்மை சுதந்திரம் பெற வேண்டுமெனில் சமுதாயத்தில் குற்றங்கள் குறைய வேண்டும். உழைத்து முன்னேற உரிய வழிகளை மக்களுக்கு ஆட்சியிலுள்ளோர் ஏற்படுத்தித் தர வேண்டும். இதற்கு வரி வசூல் முறையாக நடைபெற்று, கருப்புப் பணம் குறைந்து, அரசியல் மற்றும் சமூகக் குற்றவாளிகள் விரைவில் தண்டிக்கப் பெற்று, அவர்கள் கொள்ளையிட்ட பெரும் பொருள் திரும்பப் பெறப்பட்டு நாட்டு மக்களின் நலனுக்காக செலவிடப்பட வேண்டும். இவற்றையெல்லாம் நிறிவேற்றினாலொழிய நம் நாட்டில் தொழில்கள் முன்னேறவோ தொழிலாளர் நலன் பெறவோ இயலாது.

அனைத்திற்கும் மேலாக நாட்டு மக்கள் யாவரும் உழைப்பின் உயர்வை உணர்ந்து உழைப்பால் உயர முற்பட வேண்டும். "தன் கையே தனக்குதவி" எனும் மூத்தோர் சொல்லை மனதிற்கொண்டு செயல்படவேண்டும். கறை படியாத கைகளையுடையோர் நாட்டை ஆளத் தேர்வு செய்ய வேண்டும். உழைக்கும் கைகள் உயர்வு பெற வேண்டும்.


திரைப்படம்: இன்று போல் என்றும் வாழ்க
இயற்றியவர்: கவிஞர் முத்துலிங்கம்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
ஆண்டு: 1977

இது நாட்டைக் காக்கும் கை உன்
வீட்டைக் காக்கும் கை
இது நாட்டைக் காக்கும் கை உன்
வீட்டைக் காக்கும் கை இந்தக்
கை நாட்டின் நம்பிக்கை இந்தக்
கை நாட்டின் நம்பிக்கை இது
எதிர்கால தாயகத்தின் வாழ்க்கை இது
எதிர்கால தாயகத்தின் வாழ்க்கை

அன்புக் கை இது ஆக்கும் கை இது அழிக்கும் கையல்ல
சின்னக் கை ஏர் தூக்கும் கை இது திருடும் கையல்ல
அன்புக் கை இது ஆக்கும் கை இது அழிக்கும் கையல்ல
சின்னக் கை ஏர் தூக்கும் கை இது திருடும் கையல்ல
நேர்மை காக்கும் கை நல்ல நெஞ்சை வாழ்த்தும் கை இது
ஊழல் நீக்கும் தாழ்வைப் போக்கும் சீர் மிகுந்த கை

இது நாட்டைக் காக்கும் கை உன்
வீட்டைக் காக்கும் கை இந்தக்
கை நாட்டின் நம்பிக்கை இது
எதிர்காலத் தாயகத்தின் வாழ்க்கை

வெற்றிக் கை பகை வீழ்த்தும் கை இது தளரும் கையல்ல
சுத்தக் கை புகழ் நாட்டும் கை இது சுரண்டும் கையல்ல
வெற்றிக் கை பகை வீழ்த்தும் கை இது தளரும் கையல்ல
சுத்தக் கை புகழ் நாட்டும் கை இது சுரண்டும் கையல்ல
ஈகை காட்டும் கை மக்கள் சேவையாற்றும் கை முள்
காட்டை சாய்த்து தோட்டம் போட்டுப் பேரெடுக்கும் கை

இது நாட்டைக் காக்கும் கை உன்
வீட்டைக் காக்கும் கை இந்தக்
கை நாட்டின் நம்பிக்கை இது
எதிர்கால தாயகத்தின் வாழ்க்கை

உண்மைக் கை கவி தீட்டும் கை கறை படிந்த கையல்ல
பெண்கள் தம் குலம் காக்கும் கை இது கெடுக்கும் கையல்ல
உண்மைக் கை கவி தீட்டும் கை கறை படிந்த கையல்ல
பெண்கள் தம் குலம் காக்கும் கை இது கெடுக்கும் கையல்ல
மானம் காக்கும் கை அன்ன தானம் செய்யும் கை
சம நீதி ஓங்க பேதம் நீங்க ஆள வந்த கை

இது நாட்டைக் காக்கும் கை உன்
வீட்டைக் காக்கும் கை இந்தக்
கை நாட்டின் நம்பிக்கை இது
எதிர்காலத் தாயகத்தின் வாழ்க்கை இது
எதிர்காலத் தாயகத்தின் வாழ்க்கை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக