செவ்வாய், 22 அக்டோபர், 2013

சீதாராம் சீதாராம்

இம்மாயா உலகிலே நாமனைவருமே பொய்யான வாழ்வே வாழ்கிறோம். சிலர் வாழ்நாள் முழுவதும் பொருள் சேர்ப்பதிலும் அவ்வாறு சேர்த்த பொருள் தரும் சுகங்களை அனுபவித்து மகிழ்வதிலும் செலவழித்து உலக நலன் கருதாமல் காணாமல் போகின்றனர். வேறு சிலர் உலக நலன் கருதியே பாடுபட்டு, தம் வாழ்நாளில் பெரும்பகுதியை செலவழித்து, தம்மையும் தம் குடும்பத்தையும் காக்கத் தவறி இறுதியில் வருந்துகின்றனர். இன்னும் சிலர் உலகே மாயம் வாழ்வே மாயம் என்று கொண்டு தம்மைப் பெரும் ஞானியராக எண்ணி இவ்வுலக வாழ்வில் கிடைக்கும் பயன்களை அனுபவியாமல் வாழ்நாள் முழுவதும் துன்பப்பட்டு மடிகின்றனர். இவர்கள் யாவரும் ஒரு விதத்தில் தம் மனதும் அறிவும் சரியென்று உணர்வதையே சரியெனக் கொண்டு வாழ்வதனால் ஏதேனும் ஒருவகையில் மனநிறைவு காணக்கூடும்.
 
மற்றொரு சாரார் பிறரை ஏமாற்றி வாழ்வதையே குறிக்கோளாகக் கொண்டுள்ளனர். இவர்களுள் பலர், குறிப்பாக நம் அரசியல்வாதிகள் தாமும் தம் கட்சியும் மட்டுமே மக்கள் சேவையைப் பிரதானக் குறிக்கோளாகக் கொண்டுள்ளதாகவும் பிறர் யாவரும் மோசடிப் பேர்வழிகள் என்றும் மேடைகள் தோறும் முழங்குவர். தமது பிரசங்கத்தைக் கேட்க வரும் மக்களுக்கு இலவசங்களை வாரி வழங்குவர். தீர விசாரித்தால் இவர்கள் மேடையமைக்கவும், இலவசங்கள் வழங்கவும் செலவழிக்கும் பணத்தை இவர்கள் உழைத்து சம்பாதிக்கவில்லை, ஊழல்செய்து மக்களை ஏமாற்றி அவர்கள் வயிற்றில அடித்து சம்பாதித்தனர் என்பது தெரியவரும். ஆனால் ஒரு கசப்பான உண்மை என்னவெனில்  நம் மக்களில் பெரும்பாலோர் உண்மையை நம்புவதில்லை. அதனால் திரும்பத் திரும்பப் பொய்யர்கள் கூற்றையே நம்பி ஏமாறுகின்றனர்.
 
வேறு சிலர் தம்மை முற்றும் துறந்த முனிவர்கள் போல் உரு மாற்றிக் கொண்டு மக்களுக்கு ஞான மார்க்கத்தைக் காட்டுவதாகக் கூறி அவர்களிடமிருந்து பொருள் பெற்றுத் தாம் செல்வந்தர்களாக வாழ்வதுடன் திரை மறைவில் சம்சாரிகளுக்கும் கிட்டாத சுகபோகத்தை அனுபவித்து வருகின்றனர். இத்தகைய போலிச் சாமியார்களது சுயரூபம் தெரிந்த பின்னரும் இவர்கள் பின்னால் சென்று ஞானம் தேடும் மக்களில் பெரு்ம்பாலோர் இவர்கள் உண்மையில் நல்லவர்கள், வீணாகப் பழிசுமத்தப் படுகிறார்கள் என நம்பி திரும்பவும் இவர்கள் பின்னால் தொடர்ந்து செல்வது பெரிய வேடிக்கை.
  
 
திரைப்படம்: மிஸ்ஸியம்மா
பாடியவர்: சாரங்கபாணி
இயற்றியவர்: தஞ்சை என். ராமையா தாஸ்
இசை: எஸ். ராஜேஸ்வர ராவ்
Year: 1955 - ஆண்டு: 1955
 
சீதாராம் சீதாராம் சீதாராம் ஜெய சீதாராம்
சீதாராம் சீதாராம் சீதாராம் ஜெய சீதாராம்உள்ளே விகாரம் வெளியிலே பாரம்
உலகமெல்லாம் வீண் டம்பாச்சாரம்
சீதாராம் சீதாராம் சீதாராம் ஜெய சீதாராம்
தன்னலமில்லாத தலைவரென்பாராம்
தலையிலே மிளகாய் அரைச்சிடுவாராம்
சீதாராம் சீதாராம் சீதாராம் ஜெய சீதாராம்
உண்டியும் நிதியும் சேர்த்திடுவாராம்
கிண்டி ரேசிலே விட்டிடுவாராம்
சீதாராம் சீதாராம் சீதாராம் ஜெய சீதாராம்
பாண்டித்யம் பெற்ற சிங்கமென்பாராம்
பழைய ஒண்ணாங்கிளாஸ் படிச்சிருப்பாராம்
சீதாராம் சீதாராம் சீதாராம் ஜெய சீதாராம்
காரியம் சாதிக்கக் காக்கா பிடிப்பாராம்
காரியம் முடிஞ்சா டேக்கா கொடுப்பாராம்
சீதாராம் சீதாராம் சீதாராம் ஜெய சீதாராம்
டிப்பு டாப்பு டகல் டூப்பு டமாரம்
கலிகாலம் வெறும் கிரகசாரம்
சீதாராம் சீதாராம் சீதாராம் ஜெய சீதாராம்
சீதாராம் சீதாராம் சீதாராம் ஜெய சீதாராம்
சீதாராம் ஜெய சீதாராம் சீதாராம் ஜெய சீதாராம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக