செவ்வாய், 22 அக்டோபர், 2013

சிரிப்பவர் சிலபேர்

இன்று இந்தியாவிலேயே மக்கள் அதிக மகிழ்ச்சியாக வாழும் மாநிலம் தமிழகம் என்று ஒரு பத்திரிகைச் செய்தி வெளிவந்துள்ளதெனக் கூறப்படுகிறது. இதை விடப் பெரிய கேலிக்கூத்து ஒன்றும் இருக்க முடியாது. தினமும் 8 மணி நேரம் மின்வெட்டு அமுலுக்கு வந்து மாநிலத்தின் பல தொழிற்சாலைகள் மின்சாரத் தட்டுபாட்டால் மூடப்படும் நிலைமை உருவாகி பல்லாயிரக்கணக்கான மக்கள் வேலையிழக்கும் அபாயம் வந்துள்ளது. தானே புயலால் உருக்குலைந்து வாடும் கடலூர்ப் பகுதி மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படவில்லை. வெறும் அறிக்கைகள் மட்டுமே வெளியிடப்பட்டு வருகின்றன. ஆனால் வரலாறு காணாத வகையில் தமிழக முதல்வர் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் 5 நாட்கள் தொடர்ந்து நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டு மாநிலமெங்கும் அவரது உருவப் படங்கள் சுவரொட்டிகளிலும் வேறு பல இடங்களிலும் பெரும்பொருட் செலவில் அமைக்கப் பட்டு அவற்றிற்குக் காவல் துறை பாதுகாப்பும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாம்.

தாம் பதவிக்கு வந்தால் பதவியேற்ற 6 மாத காலத்திற்குள் தமிழ்நாட்டை மின்வெட்டு இல்லாத மாநிலமாக்கப் போவதாக உறுதியளித்து மக்களின் வாக்குகளைப் பெற்றுப் பதவிக்கு வந்த பின்னர் மக்களுக்கு அளித்த வாக்கை முதல்வர் மறந்து விட்டார். தற்போதைய மின்வெட்டு மிகவும் கடுமையான விளைவுகளை தமிழ் நாட்டில் ஏற்படுத்தப் போகிறதென்பதில் சற்றும் ஐயமில்லை. இலவசமாக அரிசி கொடுத்து விட்டால் மக்கள் பிரச்சினை தீர்ந்து விடுமா? மக்கள் உழைத்து வாழ வழியின்றிச் செய்து அவர்களைப் பிச்சைக்காரர்களாக ஆக்குவதற்கு சமமன்றோ இது? மின் உற்பத்தியைத் தனியார் மயமாக்கிவிட்டதால் மாநில அரசுகள் அனல் மின் நிலையங்களை அமைக்க மத்திய அரசு அனுமதியளிப்பதில்லை என்று மின்துறை அதிகாரிகள் சிலர் சொல்கிறார்கள். தனியாரிடமிருந்து பெறப்பட்டு வந்த மின்சாரத்திற்கு 5000 கோடி ரூபாய்களுக்கு மேல் பாக்கி வைத்திருப்பதால் அவர்கள் மின் உற்பத்தியை நிறுத்தியுள்ளதாகவும் கூறுகிறார்கள். மக்களின் இக்கட்டான இச் சூழ்நிலையைத் தமக்கு சாதகமாகப் பயன்படுத்தி கூடன்குளம் அணு மின் நிலையத்தை எவ்வாறாகிலும் துவக்கிவிடலாம் என்று தமிழக காங்கிரசார் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கூடன்குளம் பிரச்சினை அவ்வளவு எளிதில் தீரக் கூடியதா என்ன?

மாநிலத்தில் இருக்கும் அனல் மின் நிலைய்ங்கள் முறையாகப் பராமரிக்கப் படுவதில்லை. இலவச மின்சாரம் என்ற பெயரில் மின்சாரம் பெருமளவில் திருடப்படுகிறது. மின்சார வாரியம் மின் கட்டணங்களை முறையாக வசூலிப்பதும் இல்லை. மாநிலமே இருளில் மூழ்கியிருக்கையில் முதல்வர் ஸ்ரீரங்கத்து மக்களுக்கு மிக்சி, கிரைண்டர் பிச்சை போடும் விழா நடத்துகிறார். தமிழக அமைச்சர் பெருமக்கள் பலர் சங்கரன் கோவிலில் இடைத்தேர்தல் பணிகளை கவனிப்பதற்காக முகாமிட்டுள்ளனராம். இவர்களில் ஒரு சிலராவது தானே புயலால் பாதிக்கப் பட்ட இடங்களுக்குச் சென்றார்களா?

உண்மையான மக்களாட்சி மலர்ந்து நாட்டில் மக்கள் குறைகளை முழுமனதுடன் தீர்க்க முயலும் தலைவர்கள் ஆட்சியில் அமரும் காலம் என்று வ்ருமோ அன்றே நாட்டில் மக்களின் ஏழ்மை நீங்க வழி பிறக்கும். அதுவரை ஒரு சிலர் பெரும்பொருள் சேர்த்துப் பலர் பட்டினியால் வாடும் நிலையே நிலவும். இன்று நம் நாடு இருக்கும் சூழ்நிலையை ஆராய்கையில் மிகவும் அச்சமாக உள்ளது. இன்னமும் மக்கள் முறைகேடான ஆட்சியினால் தம்மை நெருங்கிவரும் பெரும் ஆபத்தை உணராமல் இருக்கின்றனரோ என்று ஐயமாகவும் உள்ளது. நாட்டில் பெரும்பாலோர் பல்வேறு வகையிலும் துன்பமுற்று அழுகையில்ஒரு சிலர் மட்டும் சிரித்து மகிழ்கின்றனர். இந்த நிலை என்று மாறுமோ?

சிரிப்பவர் சிலபேர்

திரைப்படம்: சபாஷ் மாப்பிள்ளை
இயற்றியவர்: ஏ. மருதகாசி
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியவர்: பி. சுசீலா, சீர்காழி கோவிந்தராஜன்
ஆண்டு: 1961

சிரிப்பவர் சிலபேர் அழுபவர் பலபேர்
இருக்கும் நிலை என்று மாறுமோ?
சிரிப்பவர் சிலபேர் அழுபவர் பலபேர்
இருக்கும் நிலை என்று மாறுமோ?

உழைப்பவன் வாழ்வே வீதியிலே
உறங்குவதோ நடைபாதையிலே
உழைப்பவன் வாழ்வே வீதியிலே
உறங்குவதோ நடைபாதையிலே
இரக்கம் காட்டத் தான் நாதியில்லே
இரக்கம் காட்டத் தான் நாதியில்லே

தினம் சிரிப்பவர் சிலபேர் அழுபவர் பலபேர்
இருக்கும் நிலை என்று மாறுமோ?

இருப்பவர் உள்ளம் திறந்திடுமா?
ஏழ்மையும் வறுமையும் பறந்திடுமா?
அழுபவர் சிரிக்கும் நாள் வருமா?
அழுபவர் சிரிக்கும் நாள் வருமா?
ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ ஆஆஆஆஆ

சிரிப்பவர் சிலபேர் அழுபவர் பலபேர்
இருக்கும் நிலை என்று மாறுமோ?

உயர்ந்தவர் தாழ்ந்திடத் தேவையில்லை
உள்ளதை இழந்திடச் சொல்லவில்லை
உயர்ந்தவர் தாழ்ந்திடத் தேவையில்லை
உள்ளதை இழந்திடச் சொல்லவில்லை
உழைப்பவர் உயர்ந்தால் போதுமையா

தினம் சிரிப்பவர் சிலபேர் அழுபவர் பலபேர்
இருக்கும் நிலை என்று மாறுமோ?
சிரிப்பவர் சிலபேர் அழுபவர் பலபேர்
இருக்கும் நிலை என்று மாறுமோ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக