செவ்வாய், 22 அக்டோபர், 2013

நீதியே நீயும் இருக்கின்றாயா?

நாடே கெட்டு விட்டது. எங்கும் எதிலும் ஊழல், லஞ்சம் இன்றி ஒரு வேலையும் நடப்பதில்லை. எவரேனும் தனக்கு இழைக்கப்பட்ட அநீதியை முறையிடக் காவல் நிலையம் சென்றால் அவர் மீதே பல குற்றசசாட்டுகள் சுமத்தப்பட்டு அநியாயமாக தண்டிக்கப்படுகிறார். இதனால் பாதிக்கப்பட்ட எவரும் காவல் துறையை அணுக அஞ்சுகின்றனர். இத்தகைய நிலை தொடர்கையில் பாதிக்கப்பட்டவர்களில் சிலர் சமுதாயத்தில் நம்பிக்கை இழந்து குற்றச் செயல்களில் ஈடுபடத் துவங்குகின்றனர். இதுபோல் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் பலர் ஒன்றிணைந்து தீவிரவாத இயக்கங்களை உருவாக்குகின்றனர். நாளடைவில் இவ்வியக்கங்கள் நம் நாட்டின் மேல் பகை பாராட்டும் அந்நிய நாடுகளிலிருந்து தூண்டப்படும் பயங்கரவாதத்துக்கு் துணை போகின்றன. இத்தகைய தீவிரவாதிகள் பெரும்பாலும் வனப்பகுதிகளிலேயே மறைந்து வாழ்ந்துகொண்டு அருகிலிருக்கும் ஊர்களில் உள்ள அப்பாவி மக்களை இன்னலுக்குள்ளாக்குவதும், இவர்களிடம் ஏமாந்து மாட்டிக்கொள்ளும் காவல்துறையினர், அயல்நாட்டு சுற்றுலாப் பயணிகள் முதலானவர்களைப் பணயக் கைதிகளாக வைத்துத் தங்கள் மேல் அரசுகள் எடுக்கும் நடவடிக்கைகளிலிருந்து தப்புவதும் காவல் துறையினரால் கைது செய்யப் பட்டு சிறையிலிருக்கும் தங்கள் குழுவினரை விடுவிப்பதும் இந்தியாவின் பல மாநிலங்களில் அன்றாடம் நடைபெறுவது மிகவும் கவலையளிக்கிறது.

இது வரையில் அரசியல்வாதிகள் யாரும் இத்தகைய தீவிரவாதிகள் கையில் சிக்காமல் தப்பி வந்துள்ளனர். ஆனால் இன்று ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் தீவிரவாதிகள் கையில் பணயக் கைதியாக சிக்கியுள்ளார். இந்நிலை தொடருமாயின் மிகவும் பயங்கரமான சூழ்நிலைகள் ஏற்படுவது உறுதி. நாட்டில் அரசியல் விரைவில் முன்னேறும் எனும் நம்பிக்கையில் இதுகாறும் பொறுமைகாத்து வந்த பொது மக்கள் சமுதாய நலனுக்காகப் போராடுவதையே தம் வாழ்க்கை லட்சியமாகக் கொண்டு பாடுபடும் அன்னா ஹசாரே போன்ற தலைவர்கள் தொடங்கி நடத்திவரும் போராட்டத்தில் கலந்து கொண்டு நம் நாட்டில் வலுவான மக்கள் குறை தீர்க்கும் சட்டங்களும் அவற்றை அமல்படுத்தத் தக்க அமைப்பையும் உருவாக்கக் கோரி வருகின்றனர். இருந்த போதிலும் முறையான வலுவான சட்டங்களை இயற்றவும் மத்திய புலனாய்வுத் துறையை சுதந்திரமாக்கவும் அரசியல்வாதிகள் முன்வராமல் அநீதியான நடைமுறைகளே தொடர்ந்து நிலவும் வகையில் பலவிதமான ஏமாற்று வேலைகளில் ஈடுபடுவதுடன் மக்களூக்குத் தொடர்ந்து அநீதி இழைத்து வருகின்றனர்.

நீதி நிலைபெறுமா? குற்றவாளிகள் அரசாளும் நிலை மாறுமா? மக்கள் நல்வாழ்வு வாழ வழி பிறக்குமா? இவை போன்ற விடை தெரியாத கேள்விகள் மக்கள் மனங்களில் தொடர்ந்து நிலவுகையில் தினந்தோறும் ஊடகங்களில் வரும் செய்திகள் மேலும் மேலும் அரசியல்வாதிகளின் முறைகேடுகளையும் பொதுமக்கள் பலர் படும் தீராத துன்பங்களையும் மட்டுமே பெரும்பாலும் வெளியிடும் சூழ்நிலையில் தொடர்ந்து ஏறிவரும் விலைவாசியும், மின்தடையும், தொழில்கள் முடங்கும் நிலையும் இருப்பதால் இன்று நாட்டில் எங்கும் யாரும் அமைதியாக வாழ முடியவில்லை.

குற்றமற்ற அப்பாவி மக்கள் தண்டிக்கப்படுவதும் குற்றவாளிகள் பதவிகளில் இருந்துகொண்டு அநீதிகள் புரிந்து வருவதும் நிரந்தர வாழ்க்கை நிலையாகிவிடுமோ எனும் அச்ச உணர்வு மக்கள் மனங்களில் எழுவதை யாரும் மறுக்க இயலாது. இது போன்ற சூழ்நிலை தற்காலத்தில் மட்டுமே நிலவுகிறதா? முற்காலத்தில் ஆண்ட மன்னர்கள் யாவரும் நீதி தவறாது ஆண்டார்களா? மக்கள் யாவருக்கும் சம நீதி கிடைத்ததா? இவை போன்ற கேள்விகளுக்கு சரித்திரத்தில் விடைகாணலாம்.

உப்புத் தின்னவன் தண்ணீர் குடித்தே தீர வேண்டும். அது போல் அப்பாவி மக்களுக்கு அநீதி இழைக்கும் அரசியல்வாதிகள் மனிதர்களால் வகுக்கப்பட்ட சட்டங்களிலிருந்து தப்பித்தாலும் நம் எல்லோரையும் படைத்தும் காத்தும் அழித்தும் உலகை நடத்தும் தெய்வத்தின் தீர்ப்பிலிருந்து என்றும் தப்பிக்க முடியாது. இதற்கு சரித்திரம் சான்று கூறுகிறது.


திரைப்படம்: பூம்புகார்
இயற்றியவர்: மாயவநாதன்
இசை: ஆர். சுதர்சனம்
பாடியவர்: கே.பி. சுந்தராம்பாள்
Year: - ஆண்டு: 1964 

நீதியே நீயும் இருக்கின்றாயா? இல்லை
நீயும் அந்தக் கொலைக்களத்தில் உயிர் விட்டாயா?அன்று கொல்லும் அரசின் ஆணை வென்றுவிட்டது
நின்று கொல்லும் தெய்வம் இங்கே வந்து விட்டது
அன்று கொல்லும் அரசின் ஆணை சென்றுவிட்டது
நின்று கொல்லும் தெய்வம் இங்கே வந்து விட்டது
காலடித் தாமரை நோவது மறந்து காதலனோடு நடந்தாளே அந்தக்
காலனும் தொடர்ந்து நடந்ததையறிந்து கற்புக்கரசி துடித்தாளே
அடையாச் சொதவாய் இமையா விழியாய் ஆயிர யுகங்கள் பொறுத்தாளே இன்று
விளையா நிலத்தின் விதையாய்ப் போன வேதனையறிந்து துடித்தாளே
அன்று கொல்லும் அரசின் ஆணை சென்றுவிட்டது
நின்று கொல்லும் தெய்வம் இங்கே வந்து விட்டது
வெயிலே இல்லாத காலத்திற் கிடைக்கின்ற வேதாற் பயனென்ன கெஞ்சி
வேண்டிய பொழுது ஒதுங்கிய நீதி வந்தென்ன போயென்ன?
உயிரே போன பின் உடலென்னும் கூட்டுக்கு உயர்வென்ன தாழ்வென்ன?
செய்யாப் பிழைக்கே தலையது வீழ்ந்தால் செய்தவன் கதியென்ன?
செய்தவன் கதியென்ன? இதை செய்தவன் கதியென்ன? 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக